அதிகாலையில் நடந்த என்கவுன்ட்டர்... திருப்பூரில் சப் இன்ஸ்பெக்டரை கொன்றவர் சுட்டுக்கொலை!
விசாரணைக்காக அழைத்து சென்ற போது, போலீசாரை தாக்கியதால் தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் மணிகண்டன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (எஸ்எஸ்ஐ) சண்முகவேலை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட மணிகண்டன், இன்று அதிகாலை நடந்த என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த மகேந்திரன். இவருக்கு சொந்தமான தோட்டம் தாராபுரத்தை அடுத்த குடிமங்கலத்தில் உள்ளது. அந்த தோட்டத்தில் தங்கி வேலை செய்து வரும் மூர்த்திக்கும், அவரது மகன்களான தங்கபாண்டியன், மணிகண்டனுக்கும் இடையே நேற்று முன்தினம் (ஆக.5) இரவு மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், தந்தை மூர்த்தியை தங்கபாண்டியனும், மணிகண்டனும் சேர்ந்து சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் சென்றுள்ளார். பின்னர், அவர்களை சமாதானப்படுத்தி, காயமடைந்த மூர்த்தியை ஆம்புலன்சிஸில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார். அப்போது அங்கு பதுங்கி இருந்த மூர்த்தியின் மகன் மணிகண்டன், எஸ்.எஸ்.ஐ., சண்முகவேலுவை தாக்கியுள்ளார். இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த சண்முகவேலுவை, அங்கிருந்த மூர்த்தி, தங்கபாண்டி, மணிகண்டன் மூன்று பேரும் சேர்ந்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பு, மூவரும் தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, மூர்த்தி மற்றும் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான தங்கபாண்டியை 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட இருவரையும் உடுமலைபேட்டை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக போலீசார் அழைத்து சென்றனர். பின்னர், அவர்கள் சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்நிலையில், சிக்கனூர் உப்பாறு ஓடை அருகே சென்ற போது, போலீசார் மீது மணிகண்டன் திடீரென தாக்குதல் நடத்தினார். இதில், சப் இன்ஸ்பெக்டர் சரவணகுமாருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தற்காப்புக்காக போலீசார் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த என்கவுன்ட்டரில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து காயமடைந்த சப் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் கூறுகையில், "மணிகண்டன் எங்களை தாக்கியதால், தற்காப்புக்காக அவரை சுட வேண்டிய சூழல் ஏற்பட்டது" என்றார். இதனிடையே, என்கவுன்ட்டரில் உயிரிழந்த மணிகண்டனின் உடல், உடுமலை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உயிரிழந்த சண்முகவேலுவின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ. 1 கோடியை தமிழ்நாடு அரசு அறிவித்தது. அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.