விடுதலைப் புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது மனிதப் படுகொலை இல்லையா? - அசேப எதிரிசிங்க!
,

விடுதலை புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது. இது மனித படுகொலை இல்லையா, இதற்கு யார் நீதியை பெற்றுக்கொடுப்பது. பழைய செம்மணி புதைகுழி தற்போது தோண்டப்படுகிறது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர்கள் மனித படுகொலையாளிகளாகவும், பயங்கரவாதிகள் வீரர்களாகவும் சித்தரிக்கும் நிலை தற்போது காணப்படுகிறது. ஐ.நா சபை நடுநிலையாக வகையில் செயற்பட வேண்டும் என்று நாட்டுக்கான தேசிய அமைப்பின் செயலாளர் அசேப எதிரிசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் முன்பாக வியாழக்கிழமை (17) எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த நாட்டில் இடம்பெற்ற 30 ஆண்டுகால யுத்தத்தால் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஒட்டுமொத்த மக்களின் மனித உரிமைகளும் மீறப்பட்டன. இவ்வாறான நிலையில் ஒருபகுதியை மாத்திரம் இலக்காகக் கொண்டு அவதானம் செலுத்தப்படுகிறது.
இலங்கை இராணுவத்தினர் மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. விடுதலை புலிகள் அமைப்பினர் நாடு முழுவதும் மேற்கொண்ட 100 தாக்குதல்களின் படங்களை ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயத்தின் முன்பாக காட்சிப்படுத்தியுள்ளோம். விடுதலை புலிகளின் அமைப்பினால் இந்த நாட்டில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
விடுதலை புலிகளின் அமைப்பினால் சிவில் பிரஜைகளின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது. இவற்றை ஆராய்வதை விடுத்து இலங்கை இராணுவத்தினர் மீது தான் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது.
யுத்தத்துக்கு தலைமை தாங்கியவர்களை மனித படுகொலைகாரர்களாக்கி, பயங்கரவாதிகளை வீரர்களாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு இலங்கை அரசாங்கமும், ஐக்கிய நாடுகள் சபையும் இடமளிக்க கூடாது.
இந்த நாட்டில் இன்றும் நாட்டு பற்றுள்ளவர்கள் உள்ளார்கள் போலியான மனித உரிமைகளுக்கு ஐ.நா. சபை அடிபணிய கூடாது. உண்மையை ஆராய வேண்டும். விடுதலை புலிகள் சிங்களர்களை படுகொலை செய்தது. இது மனித படுகொலை இல்லையா, இதற்கு யார் நீதியை பெற்றுக்கொடுப்பது.
பழைய செம்மணி புதைகுழி தற்போது தோண்டப்படுகிறது. சிங்களவர்களின் படுகொலை புதைகுழிகளை யார் அகழ்வது. மக்களாணையை அரசாங்கம் மலினப்படுத்தக் கூடாது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நடுநிலையான வகையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.