'கூலி' மேடையில் 'மங்காத்தா' பட டயலாக்: ரஜினிகாந்த் பகிர்ந்த சுவாரசிய சம்பவம்!
நடிகர் ரஜினியின் கூலி படம் நூறு 'பாட்ஷா' படத்திற்கு சமமானது என்று நடிகர் நாகார்ஜூனா தெரிவித்துள்ளார்.

எனக்கும் சத்யராஜூக்கும் கருத்தியல் ரீதியாக முரண்பாடு இருந்தாலும், மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் அவரின் பண்பு தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினியின் 171-வது படமான இப்படத்தில், சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, அமீர்கான், சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். வருகிற 14 ஆம் தேதி ‘கூலி’ திரப்படம் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு தணிக்கைக் குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், 'கூலி' படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 2) இரவு நடைபெற்றது. இதில், நடிகர் ரஜினிகாந்த், அமீர்கான், நாகார்ஜூனா, சத்யராஜ் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.
எனக்கும் சத்யராஜுக்கு முரண்பாடு:
நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, “கூலி படத்தில் நடிகர் சத்யராஜ் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சிவாஜி படத்திற்காக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜிடம் முதலில் பேசப்பட்டது. ஆனால், இணைந்து நடிக்க முடியாமல் போனது. எனக்கும் சத்யராஜூக்கும் கருத்தியல் ரீதியாக முரண்பாடு இருக்கலாம். ஆனால், அவர் மனதில் பட்டதை கூறுவார். மனதில் தோன்றுவதை கூறும் நபர்களை நம்பலாம். ஆனால், மனதிற்குள்ளே வைத்துக்கொண்டு இருப்பவர்களை நம்ப முடியாது.
இப்படத்தில் நாகார்ஜூனா வில்லன் என்றார்கள். அவரை பணம் கொடுத்து நிச்சயமாக படத்திற்குள் கொண்டு வர முடியாது. அஜித்தின் ‘மங்காத்தா படத்தில் வெங்கட் பிரபு ஒரு டயலாக் வைத்திருப்பார். 'நானும் எத்தனை நாள் தான் நல்லவனாகவே நடிக்கிறது’ என்று. அதுபோல் நாகார்ஜூனா இப்படத்தில் அருமையாக நடித்திருக்கிறார்.
இண்டர்வியூ கொடுத்தா முடிஞ்சது:
அமீர்கான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில், ஒரு கதை கேட்டு அவர் ஒப்புக்கொள்வதற்கே இரண்டு வருடம் ஆகும் என கேள்விப்பட்டிருக்கிறேன். என்னிடம் 5 வருடமாக இண்டர்வியூ கேட்டுகிட்டு இருக்காங்க. நான் முடியாது என்று சொல்லிட்டேன். இண்டர்வியூ கொடுத்தா முடிஞ்சது.
அனிருத் வயதில் குறைந்தவராக இருந்தாலும் ஆன்மீகத்தின் மீது நாட்டம் கொண்டு இமயமலை செல்கிறார். அனிருத் இந்தியாவின் ராக் ஸ்டார். அவரது இசை புதியதாகவும், துள்ளலாகவும் இருக்கிறது. நான் லோகேஷிடம் கதை சொல்லுங்கள் என்று சொன்னேன். நான் கமல் ரசிகர் என்றார். வில்லன் கதாபாத்திரம் என்றார். நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமையும்” என்றார்.
தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் பேசியதாவது, “ இந்த படம் வெளியாகி ஒரு வாரத்திற்கு சவுபின் சாஹிர் தான் பேசுபொருளாக இருப்பார். நடிகர் நாகர்ஜூனாவை பார்த்துதான் நான் பங்க் வைக்க ஆரம்பித்தேன். இந்த படத்தில் 1421 என கையில் பேட்ஜ் வைத்தேன். என் அப்பா பஸ் கண்டக்டர்.. அவரோட நம்பர் 1421. அதை நான் ரஜினி சாருக்கு பயன்படுத்தியுள்ளேன். இது என் அப்பாவுக்கு ஒரு ட்ரிபியூட் (Tributer) ஆக இருக்கும்" என்றார்.
பின்னர், இசையமைப்பாளர் அனிருத், “ இயக்குநர் லோகேஷ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து இப்படம் உருவானதற்கு உலகத்தில் மிகவும் மகிழ்ச்சியடையக்கூடிய நபர் நான் தான். இந்த முறை பந்தயத்தில் ஜெயிக்கிறோம். கண்டிப்பாக கப் நமக்கு நிச்சயமாக இருக்கிறது” என்றார்.
நடிகர் உபேந்திரா பேசியதாவது, “ 25 வருடங்களுக்கு முன்பு நான் நடிகர் ரஜினிகாந்தை பார்த்தேன். அன்று முதல் இன்றைக்கு வரைக்கும் நான் அவரை அப்படியே பின் தொடர்ந்து வருகிறேன். ஹாலிவுட், பாலிவுட்டில் நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், முதல் ஷோ (FDFS) ரசிகர்கள் கூட்டம் அனைத்தும் உங்களுக்கே" என்றார்.
நூறு 'பாட்ஷா' சமம்:
தொடர்ந்து பேசிய சத்யராஜ், “நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து 7 படங்களில் வில்லனாக நடித்துள்ளேன். ஆனால், கூலி படத்தில் அவருடைய நண்பராக நடித்திருக்கிறேன். நமக்கு ஒரு அருமையான திறமையான நட்சத்திரம் கிடைத்திருக்கிறார்” என்றார். இந்தப்படம் நூறு 'பாட்ஷா' படத்திற்கு சமமானது. நிச்சயமாக அனைவருக்கும் பிடிக்கும் என நடிகர் நாகார்ஜூனா தெரிவித்தார்.