பிரபல தமிழ் சினிமா இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்!
தமிழ் சினிமாவில் இயக்குநர், ஒளிப்பதிவாளர் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழ் சினிமாவில் இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டு விளங்கிய இயக்குநர் வேலு பிரபாகரன் (68) உயிரிழந்தார். கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், கடந்த பத்து நாட்களாக கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
1989ம்ஆண்டு வெளியான ’நாளைய மனிதன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். நாளைய மனிதன் படத்தில் பிரபு, அமலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதனைத்தொடர்ந்து அவர் இயக்கிய ’அதிசய மனிதன்’ படமும் வெற்றி பெற்றது. அதிசய மனிதன் படத்தில் நிழல்கள் ரவி, கௌதமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து வேலு பிரபாகரன் சத்யராஜ் நடித்த பிக் பாக்கெட், மோகன் நடித்த உருவம், பிரபு நடித்த உத்தமராசா உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். இதுமட்டுமின்றி கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், கடாவர், பீட்சா 3 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
பின்னர் புதிய ஆட்சி, அசுரன், கடவுள், புரட்சிக்காரன், காதல் கதை, ஒரு இயக்குனரின் காதல் டைரி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் வேலு பிரபாகரன் தனது திரைவாழ்வில் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டார். வேலு பிரபாகரன் 60 வயதில் தனது படத்தில் நடித்த ஷெர்லி தாஸ் என்ற நடிகையை திருமணம் செய்தார். இது திரைத்துறையினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இவரது மறைவிற்கு திரைத்துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சரோஜா தேவி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். பெங்களூருவில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடிகை சரோஜா தேவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.