‘இந்தியாவின் மைலாய்’ – 1989 வல்வைபத்து படுகொலை நினைவு நாள்: மறக்க முடியாத ஒரு மரண நாள்!
இந்திய இராணுவத்தின் நேரடி ஈடுபாடு மற்றும் மனித குலத்திற்கு எதிரான திட்டமிட்ட குற்றமாகும்.

யாழ்ப்பாணம், ஆகஸ்ட் 2, 2025 – இன்று, ஆகஸ்ட் 2, 1989 அன்று இந்திய இராணுவம் மேற்கொண்ட வெறித்தனமான வல்வெட்டித்துறை படுகொலையின் 36ஆம் ஆண்டு நினைவு நாள். தமிழர் வரலாற்றில் “இந்தியாவின் மைலாய்” (India’s My Lai) என அழைக்கப்படும் இந்த கொடூரச் சம்பவம், இந்திய இராணுவத்தின் நேரடி ஈடுபாடு மற்றும் மனித குலத்திற்கு எதிரான திட்டமிட்ட குற்றமாகும்.
அந்த நாள் வல்வெட்டித்துறையில் நடைபெற்றது சாதாரண இராணுவத் தாக்குதலல்ல. அது ஒரு இன அழிப்பு முயற்சியின் ஓர் அத்தியாயமாகும். இந்தியப் படைகள் வீட்டிற்கு வீடு சென்று பொதுமக்களை சுட்டுக் கொன்றதோடு, பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து, குழந்தைகள், முதியோர் என எவரையும் விலக்காமல் அழித்தனர். நாசிகா பாசிசத்தை நினைவுபடுத்தும் வகையில் நடந்த இந்த வன்முறை, தமிழர் மனங்களில் எந்நாளும் வெந்நோயாகவே தங்கியுள்ளது.
காலத்தால் புதைக்கப்படும் உண்மைகள்.
இந்த கோர வன்முறையை இந்திய அரசு எந்த நாளும் விசாரணை செய்யவில்லை. பல்வேறு மனித உரிமை அமைப்புகள், தமிழ் அரசியல் அமைப்புகள் தொடர்ந்து குரல் எழுப்பினாலும், நீதியின் கதவுகள் திறக்கப்படவில்லை. இந்திய இராணுவத்தின் சாட்சியமாகவே இருக்கும் அந்த நாள், இன்று சிலரால் மௌனமாக மறக்கப்படுகின்றது.
பத்மநாபா மற்றும் EPRLF உடன் ஒத்துழைத்த ஒட்டுக்குழுவினர்
அந்த படுகொலையில் பேசப்படாமல் விட்டுபோன முக்கிய அம்சம் ஒன்று – இந்திய இராணுவத்துடன் இணைந்து செயல்பட்ட EPRLF (ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி) உறுப்பினர்கள். குறிப்பாக, EPRLF தலைவர் பத்மநாபாவின் பெயர் இன்று சிலர் புனிதராக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
ஒருவராகிய நான் – அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு சிறுவனாக – EPRLF ஒட்டுக்குழுவினர் இந்தியப் படைகளுடன் சேர்ந்து வல்வெட்டித்துறையில் நடத்திய கொடூரங்களை இன்றும் மறக்க முடியவில்லை. அவர்கள் வீடுகளை காட்டிக் கொடுத்து, யாரென்று அடையாளம் காட்டி, அழிப்பில் நேரடியாக பங்கெடுத்தனர்.
அறமும், விடுதலையும் புனிதமும் – எங்கே?
இன்றைய நாளில் நாம் கேட்க வேண்டிய கேள்வி – இதுபோன்ற பயங்கர வரலாற்றில் பங்கு கொண்டவர்களை மனித புனிதராக, அல்லது விடுதலை வீரராக, தமிழருக்காகப் பாடுபட்டவராக வர்ணிப்பது எவ்வளவு நியாயமானது?
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் அரசியல் பிம்பங்களை வரலாற்று உண்மை நிராகரிக்கும் வகையில் புனிதப்படுத்தும் முயற்சிகள், தமிழர் விடுதலைக்கே எதிரான செயல் என்றே கருதப்பட வேண்டும்.
இன்றைய நினைவுநாளில் நாம் நினைவுகூற வேண்டியது –
வல்வைபத்து படுகொலையில் உயிரிழந்த அந்தக் கட்டற்ற தமிழர் ஆதங்கம்.
அந்த கொடூரத்தில் பங்கு கொண்ட ஒட்டுக்குழுக்களின் நிஜ முகம்.
நீதி தேடி எதிரொலிக்கும் தலைமுறைகளின் குரல்.
ஈழத்து நிலவன்