“இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கான நடமாடும் சேவை”
.

கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக “இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான பயணம்” எனும் கருப்பொருளிலான நடமாடும் சேவையானது எதிர்வரும் 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது
பருத்தித்துறை, கரவெட்டி மற்றும் மருதங்கேணி ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் ஆரம்பமாகும் நடமாடும் சேவை மறுநாள் 15 ஆம் திகதி உடுவில், தெல்லிப்பளை மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் உடுவில் பிரதேச செயலகத்திலும் நடைபெறவுள்ளது.
இவ் நடமாடும் சேவையில் ஆட்பதிவுச் சேவை, பிறப்பு இறப்புச் சான்றிதழ் வழங்கும் சேவைகள், ஓய்வூதியச் சேவைகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சேவைகள், மோட்டார் வாகனப் பதிவுகள், கம்பனிப் பதிவுகள், சுகாதார சேவைகள் – கண் பரிசோதனை மற்றும் மருத்துவ சேவைகள், ஏற்றுமதிக்கான வாய்ப்புக்கள், வடக்கு மாகாணத்தின் சகல அமைச்சிற்குரிய சேவைகள், பிரதேச செயலகம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்குரிய சேவைகள் உள்ளிட்ட சேவைகள் நடைபெறவுள்ளது.
மேற்படி நடமாடும் சேவைக்கான முன்னாயத்த ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக, நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்திற்கும், உடுவில் பிரதேச செயலகத்திற்கும் – மேலதிக மாவட்ட செயலர்(நிர்வாகம்) கே. சிவகரன், மேலதிக மாவட்ட செயலர் (காணி) பா. ஜெயகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ.தர்சினி ஆகியோர் சகிதம் சென்று உரிய முன்னாயத்த அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கினார்.
இவ் முன்னாயத்த ஏற்பாடுகளில் பருத்தித்துறையில் பருத்தித்துறை உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தரும், உடுவிலில் உதவிப் பிரதேச செயலாளரும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.