"ஏழைகள் வாழ நீ செய்த தியாகம்..." மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் கேப்டனின் பிறந்த தினம் இன்று!
லட்சக்கணக்கான மக்களின் இதயங்களின் 'கேப்டனாக' சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளதை காட்டிலுமா, வேறு ஒரு பதவி விஜயகாந்துக்கு சிறப்பு சேர்ந்துவிட போகிறது!

அது ஒரு தேர்தல் காலம்... 2016 மக்கள் நலக் கூட்டணியின் தளகர்த்தாகவாக அப்போது இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், கட்சி நிர்வாகிகளை தனது கோயம்பேடு அலுவலகத்தில் சந்தித்தார். அடுத்த சில வாரங்களில் தேர்தல் என்பதால் கட்சி நிர்வாகிகள் அவரை சூழ்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது சிலர் ஓரமாக நிற்பதை கவனித்த விஜயகாந்த் ஏன்... நீங்க வரலையா? என தனக்கே உரிய மிரட்டல் தொணியில் கேட்டார்.
பதில் ஏதும் சொல்ல முடியாமல் அவர்கள் கையை பிசைந்தவாறு தலைவரே.... என அமைதியாக நிற்க, அவர்களை ஒவ்வொருவராக அழைத்து, கட்சி நிர்வாகிகள் கொடுத்திருந்த பூங்கொத்துக்களை அவர்களை கையில் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். "நீங்கள் என்ன பாக்க வந்தா சந்தோசப்படுவேனே தவிர, நீங்க கையில என்ன கொண்டு வரிங்கண்ணு பார்க்க மாட்டேன், அடுத்த தடவை எல்லாம் இந்த மாதிரி மூலையில போய் நிக்க கூடாது" என தனையனை திட்டும் தந்தை போல அன்பாக கடிந்து கொண்டார் விஜயகாந்த.
70-களின் பிற்பகுதியில் எம்ஜிஆர், சிவாஜி அலை ஓரளவு குறைந்திருந்த நேரம், கமல், ரஜினி தங்களுக்கான தடத்தை வலுவாக பதிக்க ஆரம்பித்த அந்த காலத்தில் தமிழ் சினிமாவில் வாய்ப்பை தேடி மதுரையில் இருந்த சென்னைக்கு ரயில் ஏறினார் விஜயகாந்த். ஆனால், தமிழ் சினிமாவில் பல தசாப்தங்களுக்கு, தான் தவிர்க்க முடியாத சக்தியாக மாறப் போகிறோம் என்பது அவருக்கு அப்போது தெரியவில்லை. சென்னை அவரை மாலை போட்டு வரவேற்கவில்லை, இருக்க இடமோ, சாப்பிட உணவோ அவருக்கு சரி வர வாய்க்கவில்லை. ஆனால், கிடைத்த வேலைகளை செய்து கொண்டு தான் சிறு வயது ஹீரோ எம்ஜிஆர் போல என்றாவது ஒருநாள் சினிமாவில் மட்டும் தலைகாட்டி விட வேண்டும் என்பதில் மதுரைகாரர்களுக்கே உரிய வைராக்கியத்தோடு இருந்தார்.
வாய்ப்பு என்று யார் அழைத்தாலும் ஓடினார், நடித்துக் காட்டினார்... சில இடங்களில் 'நல்லா இருக்குப்பா' என்ற வெகுமானமும், பல இடங்களில் 'உனக்கெல்லாம் சினிமா ஆசையா' என்ற அவமானங்களையும் பெற்றார். ஆனால், தோல்வியால் துவண்டு விடவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தார், சூரியனுக்கு முன் எழுந்து ஓடினார், சூரியன் தலைசாய்ந்தும் ஓய்வெடுக்காமல் ஓடிக் கொண்டே இருந்தார். தன்னை நம்பி இருக்கிற உடன் பிறந்தவர்களை கரை சேர்க்க வேண்டுமே என்ற எண்ணத்தை தவிர, தன்னை பற்றியோ, தனது எதிர்காலத்தை பற்றியோ வேறு எந்த சிந்தனையும் அவருக்கு இல்லை.
ஆனால், அந்த இக்கட்டான காலகட்டத்திலும், தான் வாழ்க்கையில் நல்ல நிலையில் வந்தால், பசியோடு யாரும் இருந்துவிடக் கூடாது, அனைவருக்கும் வயிறார சாப்பாடு போட்டு அனுப்ப வேண்டும் என்பதை தன் ஆழ்மனதில் பதிய வைத்துக் கொண்டார்.
அந்த நாளும் வந்தது.. முதல் சினிமா வாய்ப்பு அவரை தேடி வந்தது. 70-களில் வாய்ப்பு தேடி வந்த அவருக்கு, 80-களில் படங்களுக்கு தேதி கொடுக்க முடியாமல் திணறினார். வாய்ப்பும், வசதியும் வந்தாலும் ஆணவமோ, படாபடமோ அவரை எட்டிக் கூட பார்க்கவில்லை. தன் உடன் பிறந்தவர்களுக்கு எல்லாம் கோலாகலமாக திருமணம் செய்து வைத்தார். ஆனால், 35 வயதை கடந்து தன்னை பற்றி அவர் சிந்திக்கவில்லை. நண்பர்களும், உறவினர்களும் அவரை கட்டாயப்படுத்தியதால், திருமணம் செய்து கொண்டார்.
பணம், புகழ், மனைவி, குழந்தைகள் என வாழ்க்கை அடுத்தகட்டத்துக்கு போய் விட்டது, நிறைவாக வாழ்ந்து விட்டு போகலாம் என்று அவர் அமைதியாக இல்லை. பசி என்று யாரும் இருக்கக் கூடாது என்று தான் வசித்த விருகம்பாக்கம் இல்லத்துக்கு அருகிலேயே சமைத்து ஏழை மக்களுக்கு உணவளித்தார். அன்று அவர் பற்ற வைத்த அந்த அடுப்பு, அவர் வாழும் காலம் வரை எரிந்து இல்லாதவர்களுக்கு பசியாற்றியது.
சாகும் வரையில் சராசரியான ஒரு வீட்டில் வாழ்ந்த அவருக்கு, மாட மாளிகைகள் தேவைப்படவில்லை. தான் எப்படி இருந்தாலும், தன்னை நம்பி வந்தவர்கள் கஷ்டப்பட்டு விடக் கூடாது என்பதில் மட்டும் கடைசி வரை உறுதியாக இருந்தார். பிறர் மீது காட்டிய அக்கறையை, தமிழக மக்கள் அவர் மீது காட்டினார்கள். அதனால் தான், பின்னாளில் அவர் அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்ட போது, அவரை 'வெற்றி வீரராக' சட்டமன்றம் அனுப்பி வைத்தனர்.
ஆயிரம் காரணங்களால் அவர் உச்ச பதவியை அடையாமல் போய் இருக்கலாம்... ஆனால், லட்சக்கணக்கான மக்களின் இதயங்களின் 'கேப்டனாக' சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளதை காட்டிலும், வேறு எந்த பதவி அவருக்கு கூடுதல் சிறப்பு சேர்ந்துவிட போகிறது? விஜயகாந்த் அரசியலில் வீழ்த்தப்பட்டிருக்கலாம். ஆனால் இன்றைக்கும், என்றைக்கும் மக்கள் மனதில் அவர் காவியமாகவே வாழ்வார்... வாழ்ந்து கொண்டே இருப்பார்.