தவெக மாநாட்டு திடலில் ‘சீமான் ஒழிக’ கோஷம்!
புலி வேட்டைக்கு போகும் போது வழியே அணில்கள் ஓடிக் கொண்டிருக்கிறது.

இன்று மாலை நடைபெறவுள்ள தவெக மாநாட்டிற்கு காலையிலேயே வருகை தந்திருக்கும் தொண்டர்கள் ஒன்று சேர்ந்து, ‘சீமான் ஒழிக, சீமான் ஒழிக’ என்று கோஷமிட்டனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநாடு மதுரை பாரபத்தியில் இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில், நேற்று இரவிலிருந்தே மாநாட்டு திடலுக்கு தொண்டர்கள் வரத் தொடங்கி விட்டனர். அதிலும் இன்று காலையிலேயே முதல் பார்க்கிங் நிரம்பிவிட்ட நிலையில், போடப்பட்டிருக்கும் இருக்கைகள் நிரம்ப ஆரம்பித்திருக்கின்றன. இந்நிலையில், அங்கு வந்துள்ள தொண்டர்கள் ஒன்று திரண்டு தவெக துண்டை அசைத்தபடி, ‘சீமான் ஒழிக! சீமான் ஒழிக!’ என்று கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
முன்னதாக, கடந்த 18 ஆம் தேதி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் செஞ்சியில் நடைபெற்ற கோனேரி கோன் கோட்டை மீட்பு பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், தவெக கட்சியையும், தொண்டர்களையும் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, தவெக தொண்டர்களிடம் கொள்கை குறித்து கேட்டால், அவர்கள் ‘தளபதி... தளபதி...’ என்று கத்துவதாகவும், அது தனக்கு ‘தலைவிதி... தலைவிதி...’ என்று கேட்பதாகவும், எதற்காக வந்திருக்கிறீர்கள்? என்று கேட்டால், TVK… TVK... என்று கூச்சலிடுவதாகவும், அது தனக்கு 'டீ விக்க.. டீ விக்க' என்று கேட்பதாகவும் கடுமையாக கேலி செய்தார்.
குறிப்பாக, “புலி வேட்டைக்கு போகும் போது வழியே அணில்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. குறுக்கே வராமல் பத்திரமாக மரத்தில் ஏறிக்கோங்க. அணிலை வேட்டையாடி சாப்பிட்டால் புலிக்கு என்ன பெருமை?” என்று விமர்சித்தார்.
சீமானின் இந்த பேச்சை கடந்த சில நாட்களாகவே தவெக தொண்டர்கள் கண்டித்து வந்த நிலையில், சமூக ஊடகங்களிலும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலையில் இருந்தே மாநாட்டு திடலுக்கு வந்த தவெக தொண்டர்கள் பலர், ஒன்று சேர்ந்து தவெக கட்சித் துண்டை அசைத்தபடி, "சீமான் ஒழிக" என்று கோஷமிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியது. முன்பெல்லாம் "அன்பு தம்பி விஜய்" என்று கூறி வந்த சீமான், தற்போது 'அணில்' என்று அவரை விமர்சித்து வருகிறார்.
ஒவ்வொரு முறையும் தன்னை விமர்சிப்பவர்களுக்கு அடுத்த மேடையில் பதிலடி கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கும் விஜய், இந்த முறை சீமானுக்கு தக்க பதிலடி கொடுப்பார் என்று அவரது தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.