“திடீர் தளபதி, குட்டி தளபதி” - விஜய் குறித்து ‘மதராஸி’ படவிழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!
மதராசி படம் பார்க்கும்பொழுது சிவகார்த்திகேயன் துப்பாக்கியை எவ்வளவு வலிமையாக பிடித்திருக்கிறார் என்பது தெரியும் என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

என்னை ‘குட்டி தளபதி’, ‘திடீர் தளபதி’ என்றெல்லாம் பலர் கூறுகின்றனர். ஆனால், அண்ணன் அண்ணன்தான் தம்பி தம்பிதான் என்று மதராசி படவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் 23-வது திரைப்படமான 'மகராசி' படம், வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் அறிமுக விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது.
இதில், நடிகர் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர்கள் ஸ்ரீ லக்ஷ்மி பிரசாத், கலைப்புலி தானு, ஆர்.பி.சவுத்ரி ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது மேடையில் இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில், “இயக்குநர் முருகதாஸ் யானை இல்லை குதிரை. கீழே விழுந்தால் வீரியத்துடன் எழுந்து வெற்றியை நிலை நாட்டுவார். சிவகார்த்திகேயனும், நானும் ஒரே சமயத்தில்தான் திரைத்துறையில் அடி எடுத்து வைத்தோம். ‘3’ திரைப்படத்தில் அவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எதிர்நீச்சல் திரைப்படம் எனக்கும், அவருக்கும் ஒரு திறப்பு முனையாக அமைந்தது.
தற்போது வரையில் எட்டு திரைப்படங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளோம். இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து பயணிப்போம். அவர் ரூ.100 கோடி 200 கோடி வசூல் நாயகனாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் அவருடைய நல்ல மனது. நடிப்பில் எனக்கு அபிப்பிராயம் இல்லை. இசை மட்டுமே எனது முழு கவனம். 'ஜனநாயகன்' படத்தில் விஜய் சார் காம்பினேஷனில் என்னுடைய பாடல் சூப்பராக ஒர்க் அவுட் ஆயிருக்கு. அவரோட ஸ்கிரீன் பிரசன்ஸ் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது” என்றார்.
சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கி உள்ளது:
இதனையடுத்து, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசுகையில், “சிவகார்த்திகேயன் வளர்ச்சி மிகவும் வேகமாக நடக்கிறது. பல இளைஞர்கள் சிவகார்த்திகேயனை பார்த்து ஊக்கமடைந்து திரையுலகுக்கு வந்துள்ளனர். தற்போது அவரிடம் ‘துப்பாக்கி’ இருக்கிறது. இந்தப் படத்தை பார்க்கும்போது, அவர் துப்பாக்கியை எவ்வளவு வலிமையாக பிடித்திருக்கிறார் என்பதை உணருவீர்கள்” என்று தெரிவித்தார்.
பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய போது, "மான் கராத்தே படத்தின் ஆடியோ வெளியீட்டில் நான், ஏ.ஆர்.முருகதாஸ் , ஷங்கர் சார் படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை தெரிவித்தேன். அதற்காக பலர் என்னை கிண்டல் செய்தார்கள். ஆனால், இன்று முருகதாஸ் இயக்கிய ‘மதராஸி’ படத்தில் நான் நடித்துள்ளேன். சூப்பர் ஸ்டார், சல்மான் கான் உடன் பணியாற்றிய அவர், அந்த பட்டியலில் என்னையும் சேர்த்ததற்கு நன்றி. என் அப்பா இருந்திருந்தால் இந்த படத்தை பெருமையாக பார்த்திருப்பார்” என்றார்.
தொடர்ந்து, அனிருத்தும், நானும் சேர்ந்து 8 படங்களும், ஏராளமான ப்ரோமோ வீடியோக்கள் செய்திருக்கிறோம். நான் அனிருத்திடம் அவருடைய திருமணம் பற்றி கேட்டேன். பொதுவாக திருமணமானவர்களுக்கு இரவு 8 மணிக்கு, ‘எங்கே இருக்கிறீர்கள்?’ என்று மனைவியிடமிருந்து போன் வரும். ஆனால், அனிருத் எழுந்திருக்கும் நேரமே இரவு 8 மணிதான். அவருக்கு திருமணமா? ஹிட் பாடல்களா? என்று நான் யோசித்தேன். இறுதியில் ஹிட் பாடல்களையே தேர்வு செய்தேன்.
அண்ணன் அண்ணன்தான் தம்பி தம்பிதான்:
GOAT படத்தில் தன்னிடம் விஜய் சார் துப்பாக்கியை வழங்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த காட்சி எனக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருந்தது. அதற்கு பிறகு, என்னை ‘குட்டி தளபதி’, ‘திடீர் தளபதி’ என்று பலர் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. அண்ணன் அண்ணன்தான் தம்பி தம்பிதான்” என்றார்.