குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி வேட்பு மனு தாக்கல்!
மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் சுதர்சன் ரெட்டி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்திய குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் ஜூலை 21 ஆம் தேதி உடல்நலக் குறைவால் தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்தார். அதனைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று (ஆகஸ்ட் 20) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டி இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது வேட்புமனுவை மாநிலங்களவை செயலாளரும், குடியரசு துணைத் தலைவர் தேர்தலை நடத்தும் அலுவலருமான பி.சி.மோடியிடம் தாக்கல் செய்தார்.
இந்தியா கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சுதர்சன் ரெட்டி ஆந்திராவைச் சேர்ந்தவர். ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய இவர், அதன்பிறகு, ஆந்திர மாநில அரசின் தலைமை வழக்கறிஞராகவும், மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.
அதன் பிறகு, ஆந்திர உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி வகித்து, பின்னர் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சுமார் 10 ஆண்டுகள் அங்கு பதவி வகித்த இவர், 2007-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற இவர் 4 ஆண்டுகள் அந்த பதவியை வகித்தார். இந்நிலையில் தற்போது குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடுகிறார்.
முதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருச்சி சிவா, இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று சொல்லப்பட்ட நிலையில், பின்னர் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக அறிவித்தார்.