ஆண் பாதி - பெண் பாதி - தேர்தல் வியூகம் குறித்து பேசிய சீமான்!
நாம் தமிழர் கட்சி கொள்கைதான் திமுகவை வீழ்த்தும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் பாதி ஆண், பாதி பெண் என்கிற நிலைப்பாட்டில் நாம் தமிழர் கட்சி தலைமை இறங்கவுள்ளது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் தி.கிட்டு இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆட்டி' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (ஆக.23) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், படத்தின் இயக்குனர் கிட்டு, தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணன் உள்ளிட்ட படக்குழுவினர், சமூக வலைதள பிரபலம் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்திரனராக சீமான் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணன் பேசுகையில், “தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸை தாண்டி எந்த படத்தையும் எடுக்க முடியாது. சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆயிரம் திரையரங்குகளில் வெளியானது. ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டால்தான் யாருக்கு வெற்றி என்று தெரியும். ஓடுபவர் ஒருவராக இருந்தால் எந்த விதத்தில் நியாயம்?
ஆந்திரா, கேரளா, மும்பை போன்ற இடங்களில் இந்த நிலைமை இல்லை. அங்கு தயாரிப்பாளர்கள் கையில் திரையுலகம் உள்ளது. இங்கும் இந்த நிலைமை மாறும். தவெக தலைவர் விஜய், கடந்த மாநாட்டின் போது பெரியாரை பற்றி பேசியதால் மிகப்பெரிய எதிர்வினை வந்தது. அதன் விளைவாக இந்த மாநாட்டில் எம்ஜிஆர் பற்றியும், அண்ணாவை பற்றியும் பேசியுள்ளார்” என்றார்.
தொடர்ந்து மேடையில் பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ் குடிகளில் 90 சதவீதம் பெண் குலதெய்வங்கள் இருக்கின்றன. பெரியார், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா இவர்கள்தான் தமிழர்களுக்கான வரலாறு என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். இவர்களுக்கு முன்பாகவே செக்கிழுத்த செம்மல் வ.உ.சி, ம.பொ.சி, வேலுநாச்சியார், கரிகால சோழன் ஆகியோரின் வரலாறுகள் உள்ளன.
பாதி பெண், பாதி ஆண்: அதே போல், ‘பொன்னியின் செல்வன்’ வரலாறு இல்லை. அது வெறும் புதினம் மட்டுமே. சாதி, மதம், திரை மயக்கம் இவை எல்லாம்தான் இன்று அரசியலை இயக்கிக் கொண்டிருக்கின்றன. தமிழை ’சனியன்’ என்று பெரியார் கூறியுள்ளார். முதலில் அவரை ஒழிக்க வேண்டும். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகள் பாதி பெண், பாதி ஆண் என்கிற நிலைப்பாட்டில் நாம் தமிழர் கட்சி தலைமை இறங்க உள்ளது.
எனக்கு ஏதாவது பிரச்சனையை ஏற்பட்டால் நானே இறங்கி அடிப்பேன். ஆள்வைத்து அடிக்க மாட்டேன்” என்று பேசினார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து சீமான் கூறுகையில், ”திமுகவுக்கு நேர் எதிராக தேர்தல் களம் இருப்பதாக அதிமுக கூறி வருகிறது. தவெக தலைவர் விஜய்யும், திமுகவிற்கு எதிராகவே போட்டி என கூறியுள்ளார். திமுகவின் கொள்கை எதிரி என விஜய் கூறுகிறார். திமுகவின் கொள்கை எதிரியாக சினிமா எப்படி இருக்க முடியும்? நாம் தமிழர் கொள்கைகள்தான் திமுகவை வீழ்த்தும் ஆயுதம். வீழ்வது யாராயினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்கிற நிலையிலிருந்து, வீழ்வது தமிழ், வாழ்வது நாமாக இருக்கட்டும் என்கிற நிலைப்பாட்டிற்கு விஜய் மாறியுள்ளார்.
எனது கருத்திற்கு வாக்கு செலுத்துங்கள் என்று விஜய் கூறவில்லை. என் முகத்திற்கு வாக்கு செலுத்துங்கள் என கூறுகிறார். இந்த முகத்திரை ஐந்து வருடம் கழித்து இதேபோல் இருக்காது. முகத்திற்கு தமிழக மக்கள் வாக்கு செலுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றார்.