திடீரென வந்த விஜயகாந்த்! அதிர்ந்த தூய்மைப் பணியாளர்கள் - அடுத்து நடந்த நெகிழ்ச்சி!
விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களை கெளரவிக்கும் வகையில், தொண்டு நிறுவனத்தின் சர்ப்ரைஸ் ஏற்பாடு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, அவரை போலவே உருவம் கொண்ட நபரை வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கு விருந்து அளித்த தொண்டு நிறுவனத்தின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, தனக்கென தனி இடத்தை உருவாக்கியவர் விஜயகாந்த். திரையில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் ஏழை மக்களுக்கு பல உதவிகளை செய்தவர் அவர். தனது அலுவலகத்திற்கு எந்நேரமும் யார் வந்தாலும் உணவு வழங்கி உபசரித்த அவரை, 'கேப்டன்' என மக்கள் அன்போடு அழைத்து வந்தனர்.
அவரது பிறந்து நாள் ஆகஸ்ட் 25-ம் தேதி இன்று கொண்டாடப்படுகிறது. தேமுதிக சார்பிலும் விஜயகாந்தின் ரசிகர்கள் சார்பிலும் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தஞ்சையில் தேமுதிக சார்பில் மக்களுக்கு உணவு, புத்தாடை என பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, தஞ்சை மாநகராட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இன்று தெருக்களை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு கார் வந்து வேகமாக நிற்க, உள்ளே இருந்து விஜயகாந்தை போலவே இருந்த நபர் ஒருவர் இறங்கினார்.
இதை பார்த்து, ஒருசில நொடிகள் தூய்மைப் பணியாளர்கள் ஆடிப் போயினர். பின்னர், வந்தது விஜயகாந்த் அல்ல என உணர்ந்த அவர்கள், அவர் அருகே சென்றனர். தொடர்ந்து, அந்த நபர் தூய்மைப் பணியாளர்களின் கைகளை பிடித்து நலம் விசாரித்தார். மேலும் அவர்களிடம் பேசிய அவர், “தாய்க்கு தாயாக... இருந்து மக்களின் அசுத்தங்களை சுத்தம் செய்யும் உங்களால் தான் நாடு ஆரோக்கியமாக உள்ளது. உண்மையில் நீங்கள் அனைவரும் தான் ’பொட்டு வைத்த தங்கக்குடங்கள்’. தினமும் அதிகாலை முதல் மாலை வரை உழைக்கிறீர்கள்.
குடியிருப்புப் பகுதிகள், வீதிகள், கடைத்தெரு, பேருந்து நிலையம் என அனைத்தையும் தூய்மையாக வைத்து கொள்கிறீர்கள். எனது பிறந்து நாளன்று உங்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்” என கூறி, தூய்மைப் பணியாளர்களின் பணியை பாராட்டி ரொக்கமும், புத்தாடையும் வழங்கினார்.
தொடர்ந்து, தஞ்சை மாநகராட்சியின் டிவிஷன் 9 மற்றும் டிவிஷன் 14ஐ சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை உணவகத்துக்கு அழைத்து சென்று அவர்கள் விருப்பப்படி சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, முட்டை, மட்டன் கோலா, செட்டிநாடு சிக்கன் மசாலா, மீன் வறுவல், சாதம், ரசம், மோர் என தடபுடல் விருந்தை அளித்தார்.
தூய்மைப் பணியாளர்களை கெளரவிக்கும் வகையில், தொண்டு நிறுவனம் ஒன்று இந்த ஏற்பாட்டை செய்திருந்தது. இதற்காக விஜயகாந்தை போலவே உருவ ஒற்றுமை கொண்ட கலைஞரான 'விஜயகாந்த்' கணேசனை வைத்து இந்த விருந்தினை அந்த தொண்டு நிறுவனம் வழங்கியது.