பலதும் பத்தும். 25,08,2025 - ரணிலின் நிலை பற்றி கேள்வி எழுப்பிய மூன்று நாடுகளின் ஜனாதிபதிகள்.
கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவற்துறை மா அதிபர் கைது!

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை
நல்லூர் தேர் திருவிழாவை முன்னிட்டு 21.08.2025 அன்று யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறைக்கு அமைவான பதில் பாடசாலை நாள் எதிர்வரும் சனிக்கிழமை 30.08.2025 அன்று நடைபெறும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவித்துள்ளார்.
லயன்ஸ் கழகத்தின் 2025/2026 உறுப்பினர்கள் தெரிவு செய்யும் நிகழ்வு.
சாவகச்சேரி லயன்ஸ் கழகத்தின் 2025/2026 ஆண்டுக்கான புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யும் நிகழ்வு நேற்றைய தினம் (24) நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது.இதில் சர்வதேச லயன்ஸ் கழக உப மாவட்ட ஆளுநர் T.உதயசூரியன் பிரதம விருந்தினராகவும் கழகத்தின் உறுப்பினர்களும் பங்கு பற்றி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் முடி!
நேற்று (24) பிற்பகல் 4.00 மணி முதல் தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் முடிவுறுத்தப்பட்டு தீர்மானிக்கப்பட்டபடி கடைகளுக்காக சமூகமளிப்பதற்கு தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவித்ததாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
தபால் தொழிற்சங்கம் மற்றும் அமைச்சர் இடையே நேற்று (24) நடைபெற்ற கலந்துரையாடலில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
மத்திய தகவல் பரிமாற்றத்தின் நிர்வாகம் மற்றும் செயற்பாடுகள் என இரு பிரிவுகளும் கைவிரல் அடையாளம் இட்டு இன்று(25) முதல் செயல்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்!
வேலை நிறுத்தத்தினால் ஆறு நாட்கள் ஏற்பட்ட இழப்புகள் காணப்படுகின்றன. குவிந்த கடிதங்கள் மற்றும் பொதிகள் பாரிய தொகை மலைபோல் காணப்படுகின்றன. அவற்றை நிவர்த்தி செய்து தர வேண்டும்.
தொழிற்சங்கங்களுக்கு சம்பந்தப்பட்ட சகலரும் வருகை தந்து இவற்றை முடிந்தவரை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் தொழிற்சந்தை!
மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்படும் மாவட்ட தொழிற்சந்தை இன்று (25) காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 1.00 மணிவரை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் தொழில் வழங்குனர்களாக தனியார் நிறுவனங்களும் உள்ளூர் ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் பல தொழிற்பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் கலந்து கொள்வதனால் மாவட்டத்தில் உள்ள இளைஞர், யுவதிகள் தங்களின் ஆற்றல் இலக்கு ஆகியவற்றின் அடிப்படையில் தங்களின் தொழிற்சவாலை வெற்றி கொள்ளக் கூடியதாக இந்த தொழிற்சந்தை இருக்கும்.
ஆகவே தொழில்தேடுநர்கள் இந்த தொழிற்சந்தையில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அரச மொழிகள் திணைக்களத்தினால் மொழிப்பயிற்சிகள்!
அரசாங்கத்தினால் அரச உத்தியோகத்தர்களின் மொழித்துறையை விருத்தி செய்யும் நோக்கில் அரச மொழிகள் திணைக்களத்தினால் மொழிப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் தமிழ்மொழி மூலம் கடமை புரியும் உத்தியோகத்தர்களின் சிங்கள மொழித்துறையை விருத்தி செய்யும் நோக்கில் அரச மொழிகள் திணைக்களத்தினால் (100 மணித்தியாலயம்) சிங்களப்பயிற்சியைப் பூர்த்தி செய்த வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார உதவியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வைத்தியசாலையின் கேற்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அரச கரும மொழிகள் திணைக்களத்தின் சிரேஷ்ட போதனாசிரியர் எம்.எம்.செயினுதீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எப்.பி.மதன் அவர்களும் கௌரவ அதிதியாக 232 வது ராணுவ காலாட்படையின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஆர்.ஆர்.சீ.கருணாரத்ன அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் சிறப்பு அதிதிகளாக அரச கரும மொழிகள் திணைக்களத்தின் சிரேஷ்ட போதனாசிரியர் எம்.ஐ.பாரூக், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.ஜெமீல், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் ஆர்.ஜுனைத், தி/கந்/சோமபுர மகா வித்தியாலய அதிபர் எஸ்.ஐ.எம்.பிரியந்த, ஓய்வுபெற்ற முன்னாள் அதிபர் ஏ.ஜி.பிர்தௌஸ் மற்றும் பாடநெறியின் இணைப்பாளர் வை.வாசுகி உள்ளிட்ட வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் 58 சுகாதார உதவியாளர்கள் இப்பாடநெறியைப் பூர்த்தி செய்துள்ளதுடன், அவர்களது கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன், அதிதிகளுக்கு ஏற்பாட்டாளர்களால் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் மகோற்சவ திருவிழா
வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் மகோற்சவ திருவிழா இன்று (25) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
அதிகாலை 05 மணிக்கு பூஜைகள் ஆரம்பமாகி, காலை 10 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய துர்க்கை அம்மாவின் மகோற்சவ திருவிழாவில் 06ஆம் திகதி மாலை மஞ்ச திருவிழாவும், 11ஆம் திகதி காலை 09 மணிக்கு தேர் திருவிழாவும், மறுநாள் 12ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும், மாலை கொடியிறக்கமும் இடம்பெறும்.
மகோற்சவ காலங்களில் பகல் வேளைகளில் ஆலயத்தில் அன்னதானம் நடைபெறவுள்ளது. அதற்காக பிடியரிசி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, அன்னதானத்திற்கு அரசி சேகரிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
ஒரே நேர அட்டவணையின் கீழ் இயங்கவுள்ள அரச மற்றும் தனியார் பேருந்துகள்.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையின் நீண்ட தூர பேருந்து சேவைகளின் ஒன்றிணைந்த நேர அட்டவணை இன்று முதல் அமுல்படுத்தப்பட உள்ளது.
மேலும் இன்று நள்ளிரவு முதல் கொழும்பு, பெஸ்டியன் மாவத்தையில் அமைந்துள்ள தனியார் பேருந்து வளாகத்தில் இருந்து இந்த பயண சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபாலா தெரிவித்தார்.
மேலும் பேருந்து சாரதிகளின் ஓய்வுக்காக பேருந்துகள் அரை மணி நேர பயணத்திற்குப் பிறகு நிறுத்தப்படும்,
பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு உணவகத்தில் சுகாதாரமான உணவு வசதிகள் உள்ளனவா? என்பதை உறுதி செய்ய தொடர்ந்தும் கண்காணிப்போம் எனவும் தெரிவித்தார்.
இதற்கமைய, கொழும்பு - சிலாபம், கொழும்பு - புத்தளம், கொழும்பு - ஆனையிறவு, கொழும்பு - எலுவன்குளம், கொழும்பு - கல்பிட்டி, நீர்கொழும்பு - கல்பிட்டி, கொழும்பு - மன்னார், கொழும்பு - தலைமன்னார்,
கொழும்பு - குளியப்பிட்டி, கொழும்பு - அனுராதபுரம், கொழும்பு - வவுனியா, கொழும்பு - கிளிநொச்சி, கொழும்பு - யாழ்ப்பாணம், கொழும்பு - காங்கேசன்துறை,
கொழும்பு - காரைநகர், கொழும்பு - துணுக்காய் மற்றும் கொழும்பு - நிக்கவெரட்டிய ஆகிய வழித்தடங்களை இந்த கூட்டு நேர அட்டவணை முறையின் கீழ் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரணிலின் நிலை பற்றி கேள்வி எழுப்பிய மூன்று நாடுகளின் ஜனாதிபதிகள்.
கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிலைமை தொடர்பில் மூன்று நாடுகளின் ஜனாதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேகுணவர்தனவுடன் தொலைபேசியில் உரையாடிய போதே ரணிலை பற்றி விசாரித்ததாக அக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் குழுவொன்று நேற்று மாலை கொழும்பிற்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவைச் சந்தித்தது.
இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ள அமெரிக்க தூதுக்குழுவையும் சந்திக்க ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.
இதேவேளை, ரணிலின் கைது தொடர்பான விவரங்களைக் கோரி பல முக்கிய சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்திலிருந்து ரணிலுக்கு வந்த அழைப்புக் கடிதம் போலியா? சிஐடி விசாரணை!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாக கூறப்படும் லண்டன் வால்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின்
பட்டமளிப்பு விழாவிற்கான அழைப்பிதழ் கடிதம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க மற்றும் அவருடைய மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க ஆகியோருக்கு இங்கிலாந்தின் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அவர்களால்
2023 செப்டம்பர் 22 ஆம் திகதி நடைபெறவிருந்த பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினருக்கான உத்தியோகப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
தற்போது குறித்த ஆவணம் போலியாக உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடங்கி மூன்று மாதங்களுக்குப் பிறகு ரணில் விக்கிரமசிங்க சார்பில் இந்த கடிதம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது தான் இந்த சந்தேகத்திற்கான காரணம்.
மேலும் கோட்டை நீதவான் திருமதி நிலுபுலி லங்கா பிரவீன் உத்தரவின் பெயரில் இந்த கடிதம் தொடர்பான விசாரணைகளை சிஐடியினர் அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ளனர்.
கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவற்துறை மா அதிபர் கைது!
கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவற்துறை மா அதிபர் உதித்த லியனகே இன்று (25.08.25) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட குற்றச்சாட்டில் குறித்த காவற்துறை மா அதிபரின் மனைவி உட்பட 8 பேரை அநுராதபுரம் காவற்துறையினர் முன்னதாக கைது செய்திருந்தனர்.
இதனை அடுத்து தாம் பிரதி காவற்துறை மா அதிபர் என்றும், தமது மனைவியை உடனடியாக விடுவிக்குமாறும் அநுராதபுரம் காவற்துறையினருக்கு சந்தேநபர் தொலைபேசியில் அழுத்தம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், இன்றைய தினம் சந்தேகநபரை கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.