பலதும் பத்தும். 15,08,2025 - மன்னாரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மடுமாதா
விஷ சாராயம் அருந்தியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

மன்னாரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மடுமாதா
மன்னாரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மடுமாதா தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா இன்று (15) ஆரம்பமானது.
இன்று காலை 6:15 மணிக்கு ஆசீர்வாத ஆராதனையுடன் திருவிழா தொடங்கியது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக ஏராளமான பக்தர்கள் மடு தேவாலயத்தில் கூடியுள்ளார்கள்
இந்தியாவின் 79வது சுதந்திர தினம்
இந்தியாவின் 79வது சுதந்திர தினமான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய தேசியக்கொடி கொடியேற்றப்பட்டு, சுதந்திர தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டது.
யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் காலை 9மணியளவில் இந்தியாவின் தேசியக் கொடியை துணைத் தூதர் சாய் முரளி ஏற்றிவைத்தார்.
அதனை தொடர்ந்து, சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவரின் வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் வாசித்தார்.
இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள் , அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விஷ சாராயம் அருந்தியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
குவைத் நாட்டில் விஷ சாராயம் அருந்தியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
குவைத் நாட்டில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த அநேகர் தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு விஷ சாராயம் குடித்ததில் 63 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பான்மையோனோர் இந்தியர்கள் எனக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட 63 பேரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இருப்பினும் அதில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
ஏனையோர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதோடு, சிலருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொலம்பிய நாட்டு கூலிப்படையினர், 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்,
சூடானின் டார்பர் மாகாணத்தின் விமான நிலையத்தில், இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், கொலம்பிய நாட்டு கூலிப்படையினர், 40 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆபிரிக்க நாடான சூடானில், 2021இல் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து அதிகார மோதலால், ஆர்.எஸ்.எப்., எனப்படும் துணை இராணுவப் படை, இராணுவத்துக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் துணை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நியலா விமான நிலையத்தின் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் , கொலம்பிய நாட்டைச் சேர்ந்த, 40 கூலிப் படையினர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், துணை இராணுவப் படைக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அனுப்பியுள்ள ஆயுதங்களுடன் வந்த விமானமும் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளவி கொட்டுக்கு நபர் மரணம்.
குளவி கொட்டுக்கு இலக்கான நபர் வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற வேளையில் மரணம்.
இச் சம்பவம் இன்று மதியம் இடம் பெற்று உள்ளது.
குளவி கொட்டுக்கு இலக்காணவர் சாமி மலை ஹொரன பெருந் தோட்ட மார்க்கத்திற்கு உரித்தான ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவைச் சேர்ந்த சிவா கணகரட்னம் வயது 36 உடையவர் ஆவார்.
இவர் இன்று மதியம் தான் வளர்க்கும் பசுவிற்கு புள் வெட்டி கொண்டு குடிநீர் குழாய் செப்பனிட சென்ற வேளையில் அதி விஷமுள்ள பம்பர குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற வேளையில் மரணித்து உள்ளார்.
இவரது உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள சவ சாலையில் வைக்க பட்டு உள்ளது.
இது குறித்து மஸ்கெலியா பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித்திகதி ஓகஸ்ட் 12ஆம் திகதி நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி ஓகஸ்ட் 7 ஆம் திகதி ஒன்லைனில் வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான மறுமதிப்பீட்டு முடிவுகளால் பாதிக்கப்பட்ட விண்ணப்ப தாரர்களுக்கு இந்த நீடிப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேலும் நீடிப்புகள் வழங்கப்படாது என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொள்கலன் ஒன்று வாகனத்தின் மீது விழுந்ததில் சாரதியொருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்று வாகனத்தின் மீது விழுந்ததில் சாரதியொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (08) கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில் ப்ரைம் மூவர் வாகனத்தில் கொள்கலன் ஒன்றை ஏற்ற முயற்சிக்கையில் அது மற்றுமொரு கொள்கலனுடன் மோதி வாகனத்தின் மீது விழுந்ததில் குறித்த சாரதி பலத்த காயமடைந்துள்ளார்.
காயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக கொழும்பு துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெடிகமவைச் சேர்ந்த 36 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த கொள்கலனை இயக்கிய இயந்திர இயக்குநரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.