வடக்கு மாகாணத்திலுள்ள வளங்களைப் போன்று இலங்கையில் வேறு எந்த மாகாணங்களிலும் வளங்கள் இல்லை!
எமது மாகாணத்திலுள்ள பல வளங்களை நாங்கள் இன்னமும் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை!...?

வடக்கு மாகாணத்திலுள்ள வளங்களைப் போன்று இலங்கையில் வேறு எந்த மாகாணங்களிலும் வளங்கள் இல்லை. ஆனால் எமது மாகாணத்திலுள்ள பல வளங்களை நாங்கள் இன்னமும் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. எதைச் செய்து வருகின்றோமோ அதைத் தொடர்வதற்குத்தான் விரும்புகின்றோமே தவிர மாற்றங்களுக்கு எங்களைத் தயார்படுத்த தவறுகின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வவுனியாப் பல்கலைக்கழக வியாபார இணைப்பு அலகு மற்றும் முயற்சியாண்மை கற்கைநெறி மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக முயற்சியாளர் தின நிகழ்வும் வர்த்தகச் சந்தையும் வவுனியாப் பல்கலைக்கழகத்தில் இன்று திங்கட் கிழமை காலை (25) நடைபெற்றது.
நிகழ்வில் வர்த்தக சந்தைக் கண்காட்சியை பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் திறந்து வைத்தார். அதன் பின்னர் மேடை நிகழ்வுகள் நடைபெற்றன.
வவுனியாப் பல்கலைக்கழக துணைவேந்தர் மூத்த பேராசிரியர் ஏ.அற்புதராஜா, வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சில மாதங்களுக்கு முன்னர் அவருடன் நடந்த சந்திப்பிலேயே இவ்வாறானதொரு நிகழ்வுக்கான தொடக்கப்புள்ளி போடப்பட்டது என்றும், அவருடைய ஆலோசனையின் அடிப்படையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முயற்சியாளர்கள் பயன்பெறும் வகையில் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில், வடக்கில் 4 மாவட்டங்களில் மாவட்டச் செயலராகப் பணியாற்றியிருக்கின்றேன். நான் பணியாற்றிய மாவட்டங்களில் அதிகளவு வளங்களைக் கொண்ட மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டமே இருக்கின்றது. ஆனால் வறுமையிலும் உச்சமான மாவட்டமாக அதுவே இருக்கின்றது. எங்கள் வளங்களை நாங்கள் உரிய வகையில் பயன்படுத்தவில்லை என்பதுதான் இதனூடாகப் புலப்படுகின்ற உண்மை.
நாங்கள் படிக்கின்ற காலத்தில் பல்கலைக்கழகங்களுக்கும் சமூகங்களுக்கும் இடையிலான உறவு அவ்வளவு சிறப்பானதாக இருக்கவில்லை. ஆனால் இன்று அது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சமூகத்தின் தேவையறிந்து பல்கலைக்கழகங்கள் செயற்படுகின்றன. இதற்குச் சிறப்பாகச் செயற்படும் துணைவேந்தர் அற்புதராஜா அவர்களைப் பாராட்டுகின்றேன்.
ஏன் எங்கள் மக்களை மாற்றக்கூடாது. நாங்களும் இலங்கையின் முதற்தர மாகாணமாக மாறவேண்டும். பொருளாதாரத்துக்கு அதிகூடிய பங்களிப்புச் செய்கின்ற மாகாணமாக மாறவேண்டும். அதற்குரிய அடித்தளங்களை அமைப்பதற்குரிய காலச்சூழல் இப்போதுள்ளது. இதைப்பயன்படுத்தி எங்கள் மக்களுக்குரியதை நாங்கள் பெற்றுக்கொடுக்கவேண்டும். அதைச் செய்யத்தவறுவது நாங்கள் எங்கள் மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.
போர் முடிந்த காலத்தில் எமது மாகாணத்தில் ஒன்றிரண்டு முயற்சியாளர்கள்தான் இருந்தார்கள். இன்று அது அதிகரித்திருக்கின்றது. அன்று அவர்களின் உற்பத்திகளின் முடிவுகள் சிறப்பாக அமையவில்லை. ஆனால் இன்று சிறப்பாக உள்ளன. இதை இன்னும் விரிவாக்க வேண்டும். குறிப்பாக எங்களின் பலமான விவசாயம் மற்றும் கடல்வளத்திலிருந்து பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும்.
தாய்லாந்து தூதுவர் அண்மையில் என்னைச் சந்தித்தபோதுகூட இதைத்தான் கேட்டிருந்தேன். அவர்கள் சகல உற்பத்திகளையும் சிறப்பாக பெறுமதிசேர் உற்பத்திகளாக மாற்றியிருக்கின்றார்கள். அதைப்போல எங்களுக்கு அயலிலுள்ள இந்தியாவிலும் பனை மர உற்பத்தியை பெறுமதிசேர் உற்பத்தியாக மாற்றி பல பொருட்களை உற்பத்தி செய்கின்றார்கள். ஆனால் நாங்கள் பனை வளத்தைக் கொண்டுள்ளபோதும் பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றம் செய்வதில் பின்னிலையில் இருக்கின்றோம்.
இவ்வாறான நிகழ்வுகள், கலந்துரையாடல்கள் எதிர்காலத்தில் எங்கள் மாகாணத்தை தன்னிறைவுள்ள மாகாணமாக மாற்றுவதற்கு உதவி செய்யட்டும். அதைப்போல இங்கு கல்வி பயிலும் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை வெளியில் செல்லும்போது சுயதொழில் முயற்சியாளராக மாறவேண்டும். அதைச் செய்வீர்கள் என்று நம்புகின்றேன் என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.