பிரான்ஸ் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஆரம்பம்!
வார இறுதியில் பிரான்ஸ் முழுவதும் சாலைகளில் பயணம் செய்வது உங்கள் பொறுமையைச் சோதிப்பதாக அமையும்.

கோடை விடுமுறை முடிந்தது: பிரான்ஸ் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!
இந்த வார இறுதியில் பிரான்ஸ் முழுவதும் சாலைகளில் பயணம் செய்வது உங்கள் பொறுமையைச் சோதிப்பதாக அமையும். கோடை விடுமுறையை முடித்துக்கொண்டு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதால், நாடு முழுவதும் வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று பிரான்சின் தேசிய சாலைத் தகவல் மையமான Bison futé எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 22 முதலே, விடுமுறை முடிந்து திரும்புவோரின் வழியில் போக்குவரத்து கடுமையாக இருக்கும். நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, தென்மேற்கு பிரான்சிலிருந்து வரும் A63, A10 நெடுஞ்சாலைகளிலும், ஆல்ப்ஸ் மலைப்பகுதியை ஒட்டியுள்ள A7 மற்றும் இத்தாலியிலிருந்து வரும் மொன்ட்-பிளோங்க் சுரங்கப்பாதையை அணுகும் வழிகளிலும் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் எதிர்பார்க்கப்படுகிறது. பாரிஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் (Île-de-France), மதியத்திற்குப் பிறகு A10 மற்றும் A6 நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் மெதுவாக நகரத் தொடங்கும். மாலையில், விடுமுறைக்குத் திரும்புவோர் மற்றும் தினசரி வேலை முடிந்து செல்பவர்களின் வாகனங்கள் ஒன்றாகச் சேர்வதால், பாரிஸின் அனைத்து முக்கிய சாலைகளும் ஸ்தம்பிக்கும் அபாயம் உள்ளது.
இந்த வாரத்தின் மிக மோசமான நாளாக நாளை சனிக்கிழமை, ஆகஸ்ட் 23 இருக்கும் எனப் பிரான்சின் தேசிய சாலைத் தகவல் மையம கணித்துள்ளது.விடுமுறை முடிந்து திரும்புவோருக்கு, பிரான்சின் அனைத்து மாநிலங்களிலும் விதிவிலக்கின்றி "மிகவும் கடினமான" (சிவப்பு) போக்குவரத்து இருக்கும். மேலும், மத்திய தரைக்கடல் பகுதியை ஒட்டியுள்ள 11 மாவட்டங்களில் உச்சபட்ச நிலையான "கற்பனை செய்ய முடியாத அளவு கடினமான" (கருப்பு) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அட்லாண்டிக் கடற்கரையிலிருந்து வரும் A63, A10, A11.
மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து வரும் A7, A8, A9, A61.
நாட்டின் மையப்பகுதி வழியாகச் செல்லும் A75, A71, A20.போன்ற முக்கிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் காலை முதல் இரவுவரை வாகனங்களால் நிரம்பி வழியும். பாரிஸ் பகுதியில், A10 மற்றும் A6 சாலைகளில் காலை முதலே போக்குவரத்து ஸ்தம்பித்து, இரவுவரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சனிக்கிழமையுடன் ஒப்பிடும்போது, ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 24 அன்று திரும்புவது சற்று சிறந்த தேர்வாக இருக்கும். அன்று நாடு முழுவதும் "ஓரளவு கடினமான" (ஒரஞ்சு) போக்குவரத்து இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தெற்குப் பகுதிகளில் இருந்தும், தலைநகர் பாரிஸை நோக்கியும் வரும் சாலைகளில் நெரிசல் அதிகமாகவே காணப்படும். குறிப்பாக A9, A75, A8, A7 மற்றும் பாரிஸ் நோக்கிய A10, A11, A71 ஆகிய நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் கவனத்துடன் பயணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
எனவே, இந்த வார இறுதியில் பயணம் செய்யத் திட்டமிடுபவர்கள், முடிந்தால் தங்கள் பயணத்தைத் தள்ளி வைக்குமாறும் அல்லது அதிகாலை மற்றும் நள்ளிரவு நேரங்களில் பயணம் செய்யுமாறும் பிரான்சின் தேசிய சாலைத் தகவல் மையம் பரிந்துரைத்துள்ளது.