Auchan மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல்: லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருட்டு!
"இந்தச் சைபர் தாக்குதல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது"

Auchan மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல்: லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருட்டு! - வங்கிக் கணக்குகள் தப்பியதா?
பிரான்சின் முன்னணி பல்பொருள் அங்காடி சங்கிலியான Auchan (ஓஷான்) மீது நடத்தப்பட்ட மோசமான சைபர் தாக்குதலில், அதன் Carte de fidélité யில் உள்ள வாடிக்கையாளர்கள் "பல லட்சக்கணக்கானோரின்" தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தச் சம்பவம் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (வியாழக்கிழமை, ஆகஸ்ட் 21, 2025) Auchan வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்தச் சைபர் தாக்குதல் (cyber attack) நடந்ததை உறுதி செய்துள்ளது.
இந்தத் தாக்குதலால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவி வரும் நிலையில், எந்தெந்த தகவல்கள் திருடப்பட்டன, எவை பாதுகாப்பாக உள்ளன என்பதைAuchan நிறுவனம் தெளிவாகப் பட்டியலிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தகவல்கள்:
முழுப் பெயர் (Name, Prénom)
மின்னஞ்சல் முகவரி (Email address)
தபால் முகவரி (Postal address)
தொலைபேசி எண் (Phone number)
Carte de fidélité எண்
பாதுகாப்பாக உள்ள தகவல்கள் (திருடப்படாதவை):
வங்கிக் கணக்கு விவரங்கள் (Bank details)
கடவுச்சொல் (Password)
Carte de fidélité பின் எண் (PIN code)
"இந்தச் சைபர் தாக்குதல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது" எனAuchan நிறுவனம் உறுதியளித்துள்ளது.
தகவல்கள் திருடப்பட்டுள்ளதால், குற்றவாளிகள் இதனைப் பயன்படுத்தி "ஃபிஷ்ஷிங்" (Phishing) மோசடிகளில் ஈடுபட வாய்ப்புள்ளது என Auchan எச்சரித்துள்ளது.
அதாவது, வாடிக்கையாளர்களுக்கு Auchan பெயரில் போலியான எஸ்.எம்.எஸ் அல்லது மின்னஞ்சல்களை அனுப்பி, அவர்களை ஏமாற்றி வங்கி விவரங்கள் அல்லது கடவுச்சொற்களைத் திருட முயற்சி செய்யலாம். எனவே, சந்தேகத்திற்கிடமான எந்த லிங்க்கையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும், தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம் என்றும் வாடிக்கையாளர்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இதுகுறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும், பிரான்சின் தேசிய தகவல் மற்றும் சுதந்திர ஆணையத்திற்கு (Cnil) முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் Auchan கூறியுள்ளது.
பிரான்சில் பெரிய நிறுவனங்கள்மீது சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவது இது முதல் முறையல்ல. Auchan நிறுவனம் கடந்த 2024 நவம்பரிலும் இதே போன்ற ஒரு தாக்குதலுக்கு உள்ளானது.
2025-ம் ஆண்டில் பிரான்ஸ் பல பெரிய சைபர் தாக்குதல்களைச் சந்தித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், Bouygues Telecom நிறுவனத்தின் 60 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்பட்டன. அதைத் தொடர்ந்து Orange நிறுவனமும் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
சிவா சின்னப்பொடி