ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல்!:இந்தியாவை குற்றம்சாட்டும் மைத்திரி Facebook Twitter Pinterest
சுருங்கச் சொன்னால் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டியது.

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் பல புதிய தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம், இலங்கை மன்ற கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலின் சூத்திரதாரியை தேடிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும், அதனை பொதுமக்களுக்கு வெளிப்படுத்த முடியாது” எனக் கூறியிருக்கிறார். அந்த பிரதான சூத்திரதாரியுடன், இலங்கையினால் மோத முடியாது என்றும் அந்தளவுக்கு இலங்கை பலம் வாய்ந்த நாடு அல்ல என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருக்கிறார்.
அப்படியானால் அந்த சூத்திரதாரி யார்?
அதனை பகிரங்கமாக மைத்திரிபால சிறிசேன கூறவில்லை. ஆனால் பூடகமாகப் பேசியிருக்கிறார். “பிரதான சூத்திரதாரியை அரசாங்கங்கள், இராணுவம், புலனாய்வு பிரிவினர் அனைவரும் நன்றாக அறிவார்கள், அதனை நான் குற்றப்புலனாய்வு பிரிவின் விசாரணையின் போதும் கூறியிருக்கிறேன்” என மைத்திரிபால சிறிசேன பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறார்.
அவ்வப்போது இப்படி குண்டுகளை போட்டு பரபரப்பை ஏற்படுத்துவது மைத்திரிபால சிறிசேனவின் வழக்கமான அரசியல் தான். ஆனாலும் அவரது இந்தக் கருத்துக்களை புறக்கணிக்க முடியாது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள், மைத்திரியின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றன. இந்தத் தாக்குதலினால் அவர் வலுவாக பாதிக்கப்பட்டார்.
இந்தத் தாக்குதலில் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. அது நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 100 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்னமும் இது பற்றிய விசாரணைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன, அது மாத்திரமன்றி அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விரட்டப்பட்டார், இதனால் சீரழிந்து போகும் நிலை ஏற்பட்டது.
ஒட்டுமொத்தத்தில் மைத்திரிபால சிறிசேனாவின் அரசியல் வாழ்க்கை சீரழிக்கப்பட்டதற்கு பிரதான காரணம் இந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தான். அந்த விரக்தியும் அவருக்கு இருக்கிறது. பிரதான சூத்திரதாரியுடன் இலங்கையினால் மோத முடியாது என்றும் அந்தளவுக்கு இலங்கை வலுவான நாடல்ல என்றும் மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பது சாதாரண விடயம் அல்ல.
அவ்வாறாயின், இலங்கையை விட வலுவான ஒரு சக்தி தான், இந்த தாக்குதல்களில் சூத்திரதாரி என்பதை புரிந்து கொள்ளலாம். இதுபற்றி ஏற்கெனவே அரசாங்கங்களுக்கு தெரியும் புலனாய்வாளர்களுக்கு தெரியும் என கூறியிருக்கும் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், அது ஒரு நாடு அல்லது அது ஒரு நாட்டின் வலுவான அமைப்பு என்பதை புரிந்து கொள்வது கடினமல்ல. அப்படியானால் அது யார்?
2024 ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வுப் பிரிவில் சாட்சியம் அளித்த மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி இந்தியாவே என குற்றம்சாட்டியிருந்தார்.
அவரது அந்த சாட்சியம் தொடர்பான தகவல், அப்போது ஆங்கில வார இதழ் ஒன்றில் வெளியாகியது. அதற்கான காரணத்தையும் அப்போது மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருந்தார்.
இலங்கை அரசாங்கம், இந்தியாவுடன் இணைந்து செயற்படவில்லை என்றும் திட்டங்களை அது சீனாவுக்கு வழங்குகிறது என்றும் இந்தியாவுக்கு கோபம் ஏற்பட்டது என்றும் இலங்கையை தன் பக்கம் திருப்புவதற்காகவே இந்தத் தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டதாகவும் மைத்திரிபால சிறிசேன சாட்சியமளித்திருப்பதாக ஆங்கில வார இதழ் குறிப்பிட்டிருந்தது.
இவ்வாறான நிலையில், இப்பொழுது மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக வெளியிட்டிருக்கிற கருத்தானது, இந்தியா போன்ற ஒரு வலுவான தரப்பே இதன் பின்னணியில் இருந்திருக்க வேண்டும் என்ற ஊகத்தை உருவாக்குகிறது. இந்தியாவுக்கு இந்த தாக்குதலை நடத்த வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது என்ற கேள்வி முக்கியமானது.
இலங்கையில் தலையீடு செய்வதற்கு- இலங்கையில் செல்வாக்கு செலுத்துவதற்கு – இந்தியா காலத்திற்கு காலம் பல்வேறு வழிகளில் முயன்றிருக்கிறது. இலங்கையில் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் இயக்கங்களுக்கு இந்தியா ஆயுதங்களையும் பயிற்சியையும் வழங்கியது, அதன் ஒரு கட்டம். அதே இந்தியா தான், விடுதலைப் புலிகளை முழுமையாக அழிப்பதற்கும் காரணமாக இருந்தது.
சுருங்கச் சொன்னால் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டியது.
இந்தியா தனது தேவைக்கு ஏற்ப, இலங்கையில் செயற்படுகிறது, தீர்மானங்களை எடுக்கிறது, நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்ற பொதுவான ஒரு குற்றச்சாட்டுப் பரவலாக இருக்கிறது. 1987 ஆம் ஆண்டு வடமராட்சியை கைப்பற்றும் ஒப்பரேசன் லிபரேசன் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பின்னர், அடுத்த கட்டமாக யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் நடவடிக்கையை அரச படையினர் ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தனர்.
அதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியிருந்த நிலையிலேயே, இந்தியா தனது விமானங்களின் மூலம், உணவுப் பொதிகளைப் போட்டு, அந்த இராணுவ நடவடிக்கையை இடைநிறுத்தச் செய்தது. அதற்குப் பின்னரே இந்திய -இலங்கை ஒப்பந்தம் உருவானது.
அப்போது போர்முனையில் இருந்த இராணுவத் தளபதிகள் பலர் எழுதியுள்ள நூல்களில், விடுதலைப் புலிகளை முற்றாக ஒழிக்கின்ற வாய்ப்பை, இந்தியாவே தடுத்தது என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தியா தனது தேவைக்காக, விடுதலைப் புலிகளை அப்போது பாதுகாத்தது என அவர்கள் கருதுகின்றனர். அவர்களின் இந்தக் கருத்து சரியா, தவறா என்பது வேறு விடயம்.
ஆனால், இந்தியா தொடர்பாக, இலங்கை இராணுவத் தளபதிகள் மத்தியில் அவ்வாறான ஒரு எண்ணப்பாடு இருந்தது. இப்போதும் இருக்கிறது. அதேவேளை, விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள், இந்தியா தமக்கு பயிற்சி அளித்ததையோ அல்லது ஆயுதங்களை வழங்கியதையோ ஒருபோதும் மறுத்ததில்லை.
இந்தியா தனது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, அதனை முன்னெடுத்ததே தவிர, தமிழ் மக்களின் நலன்களுக்காக, அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக, முன்னெடுத்தது என்று கருதுவது தவறு. இலங்கை மன்றக் கல்லூரியில் உரையாற்றிய, மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் நேரடியாக தொடர்புபடுத்தி, இந்தியாவை பகிரங்கமாக குற்றம்சாட்டாது போனாலும், அவரது உரையில், இந்தியாவின் தலையீடுகள், இலங்கைக்கு நன்மையை தராது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஜே.ஆர்.ஜயவர்தனவை அச்சுறுத்தி இந்திய -இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட செய்தது, 13 ஆவது திருத்தச் சட்டம், அதனால் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் போன்றவற்றை அவர் வீண் சுமை என்று வருணித்திருக்கிறார். இவை இந்தியாவின் அழுத்தங்களின் பேரிலேயே உருவாக்கப்பட்டன என்றும், இதனால் இப்பொழுது எந்தப் பயனும் இல்லை என்றும் மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பது கவனிக்க வேண்டிய விடயம்.
அவர் இப்பொழுது இந்திய எதிர்ப்புவாதத்தைக் கையில் எடுத்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்வது கடினம் அல்ல. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு பின்னால் இந்தியாவே சூத்திரதாரியாக இருந்தது என்றால், அது தற்போதைய அரசாங்கத்துக்கும் சிக்கலான ஒன்றாக இருக்கும்.
தற்போதைய அரசாங்கமும் உண்மைகளை வெளிப்படுத்த முடியாத நிலையில் இருக்குமேயானால், அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏனென்றால் ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டுபிடித்து அவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுப்போம் என வாக்குறுதியை கொடுத்து தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது.
தற்போது அதனை அடியொற்றி விசாரணைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த விசாரணைகளின் மூலம், ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்படாமல் போனால், அதன் விளைவுகள் இந்தியாவுக்கு அல்ல, இலங்கையின் இப்போதைய அரசாங்கத்துக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.
தாக்குதல் நடப்பதற்கு முன்னர் பலமுறை இந்திய புலனாய்வு அமைப்பிடம் இருந்து, மிகத் துல்லியமான புலனாய்வு எச்சரிக்கைகள் வழங்கப்பட்டிருந்தன. எங்கு -எப்போது -யாரால் குண்டுகள் வெடிக்கவுள்ளன என்ற விபரங்கள் கூட வழங்கப்பட்டன. அவை எப்படி இந்திய புலனாய்வு அமைப்பிற்குக் கிடைத்தன என்ற கேள்வி அலட்சியம் செய்யத்தக்கதல்ல.
ஆனால் அந்த புலனாய்வு தகவல்களை அலட்சியம் செய்தது இலங்கையின் புலனாய்வு அமைப்புகள். ஒருவேளை அந்த புலனாய்வு அறிக்கைகளை சரியான முறையில் பயன்படுத்தியிருந்தால், ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல்களை தடுத்திருக்க முடியும். ஆனால் அதனை தடுக்க தவறிய முன்னைய ஆட்சியாளர்கள் இந்தியாவை நோக்கி குற்றச்சாட்டை முன்வைக்கின்ற போது, அது எந்தளவுக்கு பெறுமதியானது என்ற கேள்வி இருக்கவே செய்யும்.
ஏனென்றால் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்கள் இந்த தாக்குதலை தவறு தடுக்க தவறியவர்கள் என்ற குற்றச்சாட்டை இப்போதும் எதிர்கொண்டு வருகிறார்கள்.
-சுபத்ரா-