இஸ்லாமியர்களை சிறுபான்மையினர் என அழைக்கக் கூடாது: சீமான் தடாலடி பேச்சு!
திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி என்று கூறுவது மட்டுமே ஒரு கட்சியின் கொள்கையாக இருக்க முடியாது. தவெக கொள்கை என்ன என்பதை விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் சிறுபான்மையினர் எனக் கூறக்கூடாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
உலக தமிழ் கிறிஸ்தவர் இயக்கம் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று (ஆக.27) நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு கிறிஸ்தவர்களுடன் கலந்துரையாடினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசினார். அவர் கூறுகையில், "நமக்கான அரசியல் எது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்களை சந்தித்து கலந்துரையாடி வருகிறேன். இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் சிறுபான்மை என கூறக்கூடாது. அனைவரும் தமிழர்களே. உலகெங்கும் மனிதர்களை மொழி வழியாகத்தான் கணக்கிடுகிறார்கள். மதத்தின் அடிப்படையில் உலகில் எந்த நாடும் கணக்கிடுவது கிடையாது.
இந்துவாக இருக்கும் இளையராஜா பெரும்பான்மை. இஸ்லாமியத்தை ஏற்றுக்கொண்ட அவரது மகன் யுவன் சங்கர் ராஜா சிறுபான்மையா?. மதம் மாறிக்கொள்ள முடியும். ஆனால், மொழி, இனம் மாற முடியாது" என்றார். அப்போது குறுக்கிட்ட நிருபர், "கல்வி, வேலைவாய்ப்பில் இன்னும் சிறுபான்மையினர்கள் பின்தங்கி இருக்கிறார்களே.." எனக் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த சீமான், "அவர்கள் பின்தங்கியதற்கு யார் காரணம்? சாதி, மதம் பார்த்துதான் கல்வி கற்க விடுவீர்களா? கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் அனைவருக்கும் பொது இல்லையா?” என ஆவேசமாக கேட்டார்.
தவெக கொள்கை என்ன?
பின்னர் தவெக குறித்து பேசிய சீமான், “பாஜகவை கொள்கையை எதிரி என தவெக தலைவர் விஜய் கூறுகிறார். அப்படியென்றால், காங்கிரஸ் குறித்து அவருடைய நிலைப்பாடு என்ன ? காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் என்ன கொள்கை வேறுபாடு உள்ளது? காங்கிரஸ், பாஜக, அதிமுக, திமுக போன்ற கட்சி கொடிகளில் வண்ணம் மட்டுமே மாறுகிறது; கொள்கை மாறாது. ஆர்எஸ்எஸ் கோட்பாடு என்ன? பாஜகவின் அதிகாரம் மிகவும் ஆபத்தானது.
பாஜக கொள்கை எதிரி எனவும், திமுக அரசியல் எதிரி என சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? அரசியலுக்கும், கொள்கைக்கும் என்ன வேறுபாடு உள்ளது? திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி என்று கூறுவது மட்டுமே ஒரு கட்சியின் கொள்கையாக இருக்க முடியாது. தவெக கொள்கை என்னஎன்பதை விஜய் தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.
தலைமைக்கு நோக்கம் இருக்க வேண்டும்
தொடர்ந்து, கூட்டணி ஆட்சிதான் சரி என்று பிரேமலாத விஜயகாந்த் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு, “இந்தியாவில் கூட்டணி ஆட்சிதான் பலமுறை நடந்துள்ளது. ஆனால், அதனால் என்ன நன்மை கிடைத்தது? தலைமையின் நோக்கம் தவறாக இருக்கும்போது எவ்வளவு படை உடன் இருந்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை. தலைமைக்கு சரியான நோக்கம் இருக்க வேண்டும்” என்றார்.
மீண்டும் வாக்குச்சீட்டு முறை
வாக்கு திருட்டை சரி செய்ய வேண்டும். அதற்கு மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும். வாக்குச்சீட்டு முறையால் 90 சதவீதம் தேர்தல் நேர்மையாக நடைபெற வாய்ப்புள்ளது. தேர்தல் நடைபெறுவதில் மாற்றம் வர வேண்டும். வாக்கு திருட்டுக்கு எதிராக முதலமைச்சர் பீகாருக்கு சென்று பேரணி செல்வது தேர்தல் அரசியல். வாக்குக்கு பணம் கொடுப்பதை எதிர்த்து ராகுலும், ஸ்டாலினும் பேரணி நடத்துவார்களா ?
பெரியார் பிறக்காத பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகிறார்கள். ஆனால், பெரியார் பெயரை கூறி, சமூக நீதி பேசுபவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது ஏன்? பெரியாரின் சிந்தனைகளிலிலிருந்து நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிந்தனை எதுவுமில்லை. அடிப்படையில் நாங்கள் வரலாற்று பகை ஆகிவிட்டோம். தமிழ் மொழியை ஒழிக்க வேண்டும் என கூறியவரை, நான் எப்படி ஏற்று கொள்ள முடியும்? சமூக நீதி, பெண் விடுதலை, கடவுள் மறுப்பு என அனைத்திலும் பெரியார் தோல்வி அடைந்துவிட்டார். ஆனால், தமிழ் மொழியை அழிப்பதில் வெற்றி அடைந்துள்ளார்” இவ்வாறு சீமான் கூறினார்.