மனித உரிமைகள் உள்ளிட்ட விவகாரங்களில் இலங்கையின் முன்னேற்றத்தை அங்கீகரியுங்கள் - சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளிடம் வெளிவிவகார அமைச்சர் வேண்டுகோள்
ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபடுமாறும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் அமைச்சர் விஜித்த ஹேரத் கேட்டுக்கொண்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்த அமைச்சர் விஜித்த ஹேரத், நாட்டின் சமகால நிலைவரங்கள் மற்றும் குறிப்பாக மனித உரிமைகள்சார் நகர்வுகள் தொடர்பில் விரிவாக விளக்கமளித்தார்.
இதன்போது இலங்கையினால் இதுவரை அடையப்பட்டிருக்கும் முன்னேற்றங்களை அங்கீகரிக்குமாறும், ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபடுமாறும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் அமைச்சர் விஜித்த ஹேரத் கேட்டுக்கொண்டார்.
அதேபோன்று மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதை முன்னிறுத்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும், பயங்கரவாதத்தடைச்சட்ட நீக்கம் மற்றும் புதிய சட்ட உருவாக்கம் உள்ளடங்கலாக எதிர்வருங்காலங்களில் மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் இராஜதந்திரிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.