'ரணிலை வீழ்த்திய புலிகள்' : சர்வதேச அளவில் செல்வாக்கு பெற்றவர் இலங்கை அரசியலில் தனிமரமான கதை!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் வாழ்க்கையில் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றார்.

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், 6 தடவை பிரதமர் பதவியை வகித்தவரும், ஒரு தடவை ஜனாதிபதியாக பதவி வகித்தவருமான ரணில் விக்ரமசிங்க அவ்வப்போது சர்ச்சைகளை எதிர்நோக்கி வருவதை கடந்த பல பத்தாண்டுகளாகவே காணக்கூடியதாக இருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை தன்வசம் கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க, கட்சியின் உள்ளக பிரச்னைகள் முதல் தேசிய அரசியலில் பிரச்னை வரை அவ்வப்போது பல்வேறு சவால்மிகுந்த பிரச்னைகளை எதிர்நோக்கி வந்துள்ளார்.
தனது கட்சியின் உள்ளக பிரச்னைகள், கூட்டணி கட்சிகளின் பிரச்னைகள் என சந்தித்து வந்த ரணில் விக்ரமசிங்க இன்று பதவியை இழந்து கட்சி அரசியலில் மாத்திரம் ஈடுபட்டு வந்த தருணத்தில் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு புதிய வகையான பிரச்னையொன்றை எதிர்நோக்கியுள்ளார்.
வெளிநாட்டு பயணமொன்றின் ஊடாக அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு நேற்று முன்தினம் (26) நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது.
50 லட்சம் ரூபாய் வீதமான 3 சரீர பிணைகளின் கீழ் ரணில் விக்ரமசிங்கவை விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
எனினும், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தருணத்தில் சுகயீனமுற்ற ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை மருத்துவமனையிலிருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவருக்கு பல்வேறு நோய்கள் காணப்படுகின்ற பின்னணியில், அவர் தொடர்ந்தும் சிகிச்சை மருத்துவமனையில் தங்கியிருந்து பெற வேண்டும் என கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவ குழாம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது அரசியல் வாழ்க்கையில் எதிர்நோக்கிய சவால் மிகுந்த சர்ச்சைக்குரிய தருணங்கள் குறித்து இந்த கட்டுரை ஆராய்கின்றது.
ஐ.தே.க கட்சித் தலைவர் பதவியின் சர்ச்சை
படக்குறிப்பு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக 1994ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.
இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்ட மிக முக்கியமான பழைமை வாய்ந்த கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி காணப்படுகின்றது.
சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கத்தை அமைத்த கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக 1994ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.
அன்று முதல் இன்று வரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க பதவி வகித்து வருகின்றார்.
இந்த நிலையில், 1994-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற பெரும்பாலான தேர்தல்களில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியை சந்தித்திருந்த பின்னணியில், கட்சிக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோஷம் 2010-ஆம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் தொடர்ச்சியாக இருந்து வந்தது.
கட்சி தலைவர் பதவி சஜித் பிரேமதாஸவிற்கு வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தரப்பினர் வலியுறுத்திய பின்னணியில், 2015-ஆம் ஆண்டுக்கு பின்னராக காலத்தில் அது வலுப்பெற ஆரம்பித்திருந்தது.
இந்த நிலையில், 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்த குழுவினர் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியிருந்தனர்.
இந்த தேர்தலில் சஜித் பிரேமதாஸ பின்னடைவை சந்தித்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்த குழுவினர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்திருந்தனர்.
ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் மீதான நம்பிக்கை இழப்பே, ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பிக்க பிரதானமான காரணமாக அமைந்திருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்த ஏனைய கட்சிகள் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து வெளியேறி, சஜித் பிரேமதாஸவுடன் கைக்கோர்த்திருந்தனர்.
இந்தப் பின்னணியில், 2020-ஆம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் ரணில் விக்ரமசிங்க தனிமையடைந்திருந்தார்.
2020-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு நாடாளுமன்ற ஆசனத்தைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்த ஐக்கிய மக்கள் சக்தி பிரதான எதிர்க்கட்சியாக மாறியது.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் பெற்றுக்கொண்ட முழுமையான வாக்குகளின் அடிப்படையில் தேசியப் பட்டியல் ஊடாக ஒரு ஆசனம் கிடைக்கப் பெற்றது.
இவ்வாறு கிடைக்கப் பெற்ற ஒரு ஆசனத்தின் ஊடாக புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு 6 மாதங்களின் பின்னர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக தனியாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்திருந்தார்.
படக்குறிப்பு, 2020-ஆம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் ரணில் விக்ரமசிங்க தனிமையடைந்திருந்தார்.
இதையடுத்து, கொரோனா தாக்கத்தின் ஊடாக நாடு பாரிய பொருளாதார சிக்கலை எதிர்நோக்கியது.
தனிநபராக நாடாளுமன்றத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்திய அவர், பொருளாதார சிக்கல் காரணமாக எழுந்த போராட்டத்தினால் ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சிகளுக்கு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அழைப்பு விடுத்தார்.
எனினும், பிரதான எதிர்க்கட்சிகளான சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி ஆகியன ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்த பின்னணியில், தனிநபராக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்த ரணில் விக்ரமசிங்க கோட்டாபய ராஜபக்ஸவின் அழைப்பை ஏற்று பிரதமராக பதவி பிரமாணம் செய்துகொண்டார்.
அதன் பின்னர் வலுப்பெற்ற போராட்டம் காரணமாக நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ஸ, தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, பதில் ஜனாதிபதியாக தெரிவான ரணில் விக்ரமசிங்க, அதனை தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகளின் ஊடாக புதிய ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்துகொண்டார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாது ஒரு ஆசனத்தின் ஊடாக தனது அரசியலை செய்து, இறுதியில் ஜனாதிபதியாக பதவியேற்ற ஒரேயொருவர் ரணில் விக்ரமசிங்கவாக கருதப்படுகின்றார்.
அதன்பின்னர், பொருளாதார ரீதியில் வீழ்ச்சி கண்ட நாடு, ஒரு சில மாதங்களிலேயே வழமை நிலைக்கு திரும்பியது.
எனினும், 2024ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் தோல்வியை சந்தித்திருந்தார்.
பல முறை ஆட்சி பீடம் ஏறி, இறுதியில் ஒரு ஆசனத்தைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட பொறுப்பை அந்த கட்சியின் தலைவராக இருக்கும் ரணில் விக்ரமசிங்க ஏற்க வேண்டும் என பல தரப்பினர் கூறியிருந்தனர்.
எனினும், சவால்களை கடந்து, இறுதியில் தனிநபராக ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தார்.
சந்திரிக்கா கலைத்த அமைச்சரவை
படக்குறிப்பு, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் 2001ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான மக்கள் கூட்டணி தோல்வி அடைந்து, ஐக்கிய தேசியக் கட்சி 109 ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றது.
அதன் ஊடாக இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார்.
நிறைவேற்று அதிகாரம் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான கட்சி வசமும், ஆட்சி அதிகாரம் பிரதமரான ரணில் விக்ரமசிங்க வசமும் காணப்பட்டது.
இதனால், ஆட்சியை உரிய முறையில் செய்வதில் பாரிய இழுப்பறி நிலைமை அந்த காலப் பகுதியில் காணப்பட்டது.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த அந்த காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தி, நாட்டில் போர் நிறுத்தத்தை மேற்கொண்டிருந்தார்.
இவ்வாறான பின்னணியில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு காணப்பட்ட அதிகாரத்திற்கு அமைய, ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி பீடமேறி இரண்டு வருடங்களின் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையை கலைத்து நாடாளுமன்றத் தேர்தலுக்கு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 105 ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றதுடன், ஐக்கிய தேசியக் கட்சி 82 ஆசனங்களை மாத்திரமே பெற்றது.
இந்த நாடாளுமன்ற கலைப்பானது ஜனநாயக விரோத செயற்பாடு என எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. இதுவும் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு சதித்திட்டமாக அந்த காலப் பகுதியில் கருதப்பட்டது.
'ரணிலை வீழ்த்திய விடுதலைப் புலிகள்'
படக்குறிப்பு, தமிழீழ விடுதலைப் புலிகளின் விடுத்த அறிவிப்பே ரணில் விக்ரமசிங்கவின் தோல்விக்கான பிரதானமான காரணமாக அமைந்திருந்ததாக அ.நிக்சன் குறிப்பிடுகின்றார்.
இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் 2005ஆம் ஆண்டு நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஸ வெற்றியீட்டியிருந்தார்.
மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
மஹிந்த ராஜபக்ஸ 4,887,152 வாக்குகளை பெற்றிருந்ததுடன், ரணில் விக்ரமசிங்க 4,706,366 வாக்குகளை பெற்றுக் கொண்டார்.
மஹிந்த ராஜபக்ஸவிடம், ரணில் விக்ரமசிங்க வெறும் 180,786 வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியை சந்தித்திருந்தார்.
2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தோல்வியை தழுவ பிரதானமான காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடே காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதினர்.
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தமிழர் பிரச்னை தொடர்பில் சரியான தீர்வுகளை முன்வைக்க தவறிய பட்சத்திலேயே, விடுதலைப் புலிகள், 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிக்க நடவடிக்கை எடுத்திருந்ததாக கூறப்படுகின்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களை, ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டாம் என தமிழீழ விடுதலைப் புலிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிவிப்பை ஏற்றுக்கொண்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிப்பை பெரும்பாலும் தவிர்த்திருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிவிப்பே ரணில் விக்ரமசிங்கவின் தோல்விக்கான பிரதானமான காரணமாக அமைந்திருந்ததாக மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான அ.நிக்சன் குறிப்பிடுகின்றார்.
''சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வாக்குகளினால் மாத்திரமே ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் வாக்களித்திருந்தால், குறைந்தது இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை ரணில் விக்ரமசிங்க பெற்றுக் கொண்டிருந்திருப்பார். நிச்சயமாக அவர் வென்றிருப்பார். அந்த மக்கள் வாக்களிக்கவில்லை. அதனாலேயே அவர் தோல்வி அடைந்தார். ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்திருந்தாலும் போர் நடந்திருக்கும். கட்டாயம் போர் நடந்திருக்கும். ஆனால், மஹிந்த ராஜபக்ஸ மாதிரி மிக மோசமாக போர் நடந்திருக்காது. ரணில் விக்ரமசிங்க வந்திருந்தால் விடுதலைப் புலிகள் மீதான தடைகளும் சர்வதேச ரீதியாக அதிகரித்திருக்கும்.'' என மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் கூறுகின்றார்.
2018 அரசியலமைப்பு குழப்பம்
படக்குறிப்பு, 2015ம் ஆண்டு முதல் மீண்டும் பிரதமர் பதவியை வகித்த வந்த ரணில் விக்ரமசிங்கவை, மைத்திரிபால சிறிசேன மீண்டும் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி பதவி நீக்கியிருந்தார்.
ராஜபக்ஸ குடும்பத்தின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் 2015ம் ஆண்டு, மஹிந்த ராஜபக்ஸவின் தரப்பிலிருந்த மைத்திரிபால சிறிசேனவை அங்கிருந்து பிரித்து, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் நல்லாட்சி என்ற பெயரிலான அரசாங்கத்தை ஸ்தாபித்திருந்தனர்.
2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியாக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.
2015ம் ஆண்டு முதல் மீண்டும் பிரதமர் பதவியை வகித்து வந்த ரணில் விக்ரமசிங்கவை, மைத்திரிபால சிறிசேன மீண்டும் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி பதவி நீக்கியிருந்தார்.
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 2004ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கத்தை போன்றதொரு சம்பவத்தையே, மைத்திரிபால சிறிசேன மீண்டும் ரணில் விக்ரமசிங்கவிற்கு நிகழ்த்தியிருந்தார்.
இவ்வாறு நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு பதவி விலக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவிற்கு பதிலாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்தார்.
இது இலங்கை அரசியல் வரலாற்றில் அரசியலமைப்பு குழப்ப நிலைமையை ஏற்படுத்தியிருந்தது.
இவ்வாறு ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக்கியமையானது, நாட்டில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து ரணில் விக்ரமசிங்க வெளியேற மறுத்த நிலையில், மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
சுமார் ஒன்றரை மாதங்களுக்கு மேல் நீடித்த இந்த சர்ச்சையை உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தின் ஊடாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
ரணில் விக்ரமசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டு, மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்பட்டமையானது, சட்டவிரோதமான செயற்பாடு என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இதையடுத்து, ரணில் விக்ரமசிங்க மீண்டும் இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இந்த சர்ச்சையானது, இலங்கை அரசியலமைப்பு குழுப்பநிலையை ஏற்படுத்தியிருந்ததுடன், அது நாட்டின் அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
ரணில் விக்ரமசிங்க எதிர்கொண்ட மேலும் சில சர்ச்சைகள்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் வாழ்க்கையில் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றார்.
பட்டலந்தை சித்திரவதை முகாம் நடத்தியதாக கூறப்படும் சம்பவம், மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் என சர்ச்சைகளை எதிர்நோக்கிய ரணில் விக்ரமசிங்க, தற்போது வெளிநாட்டு பயணத்தின் போது அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் தற்போதைய ஆட்சியாளர்களினால் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்ற நிலையில், நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்துள்ளது.
எனினும், ரணில் விக்ரமசிங்க சுகயீனமுற்ற நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
- பிபிசி -