அதிமுகவில் மீண்டும் சலசலப்பு? செப். 5-ல் மனம் திறக்கிறேன்! செங்கோட்டையன் பேட்டியால் பரபரப்பு!
திமுகவில் செங்கோட்டையனை இணைக்க அக்கட்சி முயன்று வருவதாக பல மாதங்களாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வரும் நிலையில், செப்.5-ல் செங்கோட்டையனின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அதிருப்தியில் இருந்து வருவதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வரும் 5 ஆம் தேதி மனம் திறந்து பேசவுள்ளதாக அறிவித்திருப்பது அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. அதிமுகவில் அந்தியூர் ராஜா மற்றும் முன்னாள் எம்எல்ஏ வி.கே.சின்னச்சாமி மகன் சிவக்குமாருக்கு மாநில அளவிலான பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அவர்களுக்கு கட்சி பொறுப்பு வழங்கக் கூடாது என செங்கோட்டையன் வலியுறுத்தினார். இங்கு தான் இருவருக்கும் இடையே மோதம் போக்கு தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கட்சி பதவியில் இருந்து அவர்கள் இருவரும் நீக்கப்பட்டனர்.
எடப்பாடி பழனிசாமி Vs செங்கோட்டையன்
தொடர்ந்து, அதிமுக கூட்டங்களில் கலந்து கொண்டு வந்த செங்கோட்டையனுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் தான், அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்கு நன்றி தெரிவித்து எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெற்றது. இதில், எம்எல்ஏ செங்கோட்டையன் பங்கேற்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், இந்த விழா விளம்பர பலகைகளில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்கள் இடம்பெறவில்லை என அவர் குற்றச்சாட்டியிருந்தார். தொடர்ந்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை 2 முறை செங்கோட்டையன் சந்தித்ததால் அவர் பாஜகவின் இணையவுள்ளார் என்ற பேச்சும் அடிப்பட்டது.
மேட்டுப்பாளையம் பிரச்சாரம்
இந்த நிலையில், ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் நடந்த பிரச்சார கூட்டத்துக்கு கோபி வழியாக சென்றார். இந்த கூட்டத்திற்கும் செங்கோட்டையனை அழைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், கோபி வந்த எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் சார்பில் வரவேற்பு அளிக்கப்படவில்லை. தொடர்ந்து இபிஎஸ் பங்கேற்ற பேரணியிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. இவ்வாறு இருவருக்கும் இடையில் மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று (செப்.2) கோபிசெட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்ளுடன் செங்கோட்டையன் ஆலோசானை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “வரும் 5 ஆம் தேதி கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் மனம் திறந்து பேச உள்ளேன். எனது முடிவை அறிவிக்க உள்ளேன். அதுவரை காத்திருங்கள்” என தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகுவாரா? இல்லை கட்சியில் தொடர்வாரா? என்பது குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செங்கோட்டையனின் இந்த அறிவிப்பால் அதிமுகவில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.