பெரியாரை படித்ததால்தான் திமுகவை ஆதரிக்கிறேன்; 2 சீட்டுக்காக அல்ல - திருமாவளவன்
அதிமுகவில் நிலவும் அனைத்து பிரச்சனைக்கும், குழப்பங்களுக்கும் காரணம் பாஜகவின் தலையீடுதான் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பெரியாரை படித்திருப்பதால்தான் திமுகவை ஆதரிக்கிறேன், 2 சீட்டுக்காக அல்ல என்று எதிர்கட்சிகளின் விமர்சனத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார்.
மனோஜ் மிட்டா எழுதிய 'Caste Pride' என்னும் ஆங்கில நூலினை, மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.விஜயசங்கர் 'சாதி பெருமை' என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். இந்நூலின் அறிமுகம் விழா நேற்று (செப்.11) சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில், "நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்று நினைத்த விடுதலை போராட்ட வீரர்கள், சாதி என்கிற சமூக கூறு குறித்து சிந்திக்கவில்லை என்பதை இந்த புத்தகத்தின் வாயிலாக தெரிந்து கொண்டேன். எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. மிக ஆழமான தரவுகளையும், செய்திகளையும் இந்த புத்தகம் நமக்கு தருகிறது. இந்த புத்தகம் படித்தால் திராவிட அரசியல் இன்றியமையாத தேவை என்பது அனைவருக்கும் புரியும்.
இந்தியாவில் எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும், எதை தொட்டாலும் சாதியை ஒரு அளவுகோளாக எடுத்துக்கொள்கிறார்கள். பிராமணர்களை நாங்கள் வெறுப்பதில்லை. அவர்களை பற்றி படிக்க வேண்டும் என்றால், முதலில் பெரியாரை படிக்க வேண்டும். அதன் பிறகு 'சாதி பெருமை' நூலை படிக்க வேண்டும்.
சீட்டுக்காக திமுகவுடன் கூட்டணி?
பெரியாரை பயின்றவன் என்பதால்தான் திமுகவை நான் ஆதரிக்கிறேன். வெறும் 2 சீட்டுக்காக திமுகவுடன் இருக்கிறேன் என்று பலர் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால், அந்த 2 சீட்டை கூட சிலரால் வாங்க முடியவில்லை. பாஜக சராசரியான அரசியல் கட்சி இல்லை. கருத்தியல் பின்னடைவை சரி செய்ய அவர்களுக்கு 50 ஆண்டுகள் ஆகும். அந்த அளவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் கருத்தியல் பின்னடைவையும், ஆதிக்க வெறியையும் பாஜக காட்டியுள்ளது. பெரியாரை, திமுகவை எதிர்க்கிறோம் என்கிற பெயரில் திராவிட அரசியலை எதிர்க்கப் பார்க்கிறார்கள்” என திருமாவளவன் பேசினார்.
அதிமுகவில் நிலவும் குழப்பத்திற்கு பாஜகதான் காரணம்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஓபிஎஸ் தனிமைப்பட்டு நிற்பதற்கும், டிடிவி தினகரன் தனிக் கட்சி தொடங்கியதற்கும், செங்கோட்டையன் அதிமுக தலைமைக்கு எதிராக பேசுவதற்கும் யார் காரணம்? அதற்கு ஒரே பதில் பாஜகதான். பாஜகவின் தலையீடுகளால்தான் அதிமுக இப்படி இருக்கிறது.
இதனை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் புரிந்து கொண்டால், முன்னெச்சரிக்கை முடிவுகளை எடுக்க முடியும். அதிமுகவையும் காப்பாற்ற முடியும் என்பது எனது நம்பிக்கை. பாஜகவின் கலாச்சாரமே தன்னோடு இணைந்து இயங்குகிற கூட்டணி கட்சிகளை கபளீகரம் செய்வதுதான். இது நல்லெண்ணத்தின் அடிப்படையில் சொல்லும் ஒரு கருத்தே தவிர, வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது. அதிமுகவின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த காழ்ப்புணர்வும் இல்லை” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், புத்தக நூலாசிரியர் மனோஜ் மிட்டா, புத்தக மொழிபெயர்ப்பாளர் ஆர்.விஜயசங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.