அதிமுக அனைத்து பொறுப்புகளிலிருந்தும் செங்கோட்டையன் நீக்கம் - எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை!
அதிமுக ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பு மற்றும் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்குவதாக இபிஎஸ் அறிவித்துள்ளார்.

அதிமுகவின் அனைத்து பதவிகளிலிருந்தும் செங்கோட்டையனை நீக்குவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துவந்த நிலையில், இருவரும் நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்துவந்தனர். இந்நிலையில், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க எடப்பாடி பழனிசாமி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு 10 நாட்கள் கெடு விதிப்பதாகவும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.
செங்கோட்டையனின் இந்த அறிவிப்புக்கு அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் ஓபிஎஸ் உட்பட பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி என்ன முடிவெடுக்கப் போகிறார் என எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், இன்று அதிமுகவில் செங்கோட்டையன் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவரை நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பு மற்றும் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்குவதாக அறிவித்துள்ளார். மேலும் செங்கோட்டையனின் ஆதரவாளர்களையும் நீக்கி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.