யாழ். செம்மணி அகழ்வில் பேசுபொருளாகியுள்ள என்புக்கூட்டுத் தொகுதி!
5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

யாழ். செம்மணியில் இரண்டாம் கட்ட மூன்றாம் பகுதி அகழ்வாய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்றைய தினம் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ். செம்மணியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் நேற்றைய தினம் 44வது நாளாக, யாழ். மாவட்ட மேலதிக நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதற்கிடையில் செம்மணி மனிதப் புதை குழி அகழ்வுப் பணிகளின் போது நேற்றுமுன் தினம் வியாழக்கிழமை (04) குவியலாக எட்டு மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தன. அவற்றைச் சுத்தம் செய்யும் பணிகள் நேற்று (05) வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டன.
இதன் போது கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் என்புக்கூட்டுத் தொகுதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெளிவான விளக்கத்தைப் பெறும் பொருட்டு யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத் துறை மூத்த விரிவுரையாளர் ரமணராஜா புதைகுழிப் பகுதிக்கு அழைக்கப்பட்டு, அது தொடர்பான அவரது அவதானிப்புகள், விளக்கங்கள் கோரப்பட்டன.
அவர் தனது அவதானிப்பின்படி, மேற்படி மனித என்புத் தொகுதி இந்து முறைப்படி முறையாக அடக்கம் செய்யப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படவில்லை எனவும், என்புக்கூட்டின் கைகள் காணப்படும் நிலைமை உள்ளிட்ட காரணிகளால் அது முறையாக அடக்கம் செய்யப்பட்ட என்புக்கூடு இல்லை எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து அது தொடர்பான விவரமான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ். மேலதிக நீதிவான் செ.லெனின்குமார் உத்தரவிட்டார்.
செம்மணியில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 235 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்விற்கு நீதிமன்றம் 45 நாட்கள் கால அவகாசம் வழங்கியிருந்த நிலையில், இன்றுடன் இரண்டாம் கட்ட மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நிறைவடைகின்றன.
இந்த நிலையில் சித்துபாத்தி மனித புதைக்குழி வளாகத்தில் மேலும் என்புக்கூடுகள் காணப்படக்கூடும் என்பதையொட்டி, 8 வாரங்கள் கால அவகாசம் மேலும் தேவைப்படுவதாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பிலான நீதிமன்றத்தின் அடுத்த வழக்கு விசாரணைகள் இடம்பெறும் நாள் குறித்து, இன்று நீதவானால் அறிவிக்கப்படும் என பாதிக்கப்பட்டோர் சார்பில் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.