தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சி வரக்கூடாது! அன்புமணி ராமதாஸ் !
வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் பாமக ஆட்சி அமைக்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் ஆட்சி அமைக்கலாம், ஆனால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனா் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சி அதிகாரம் குறித்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 19 ஆம் தேதி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டத்தில், கட்சியின் விதிகளுக்குப் புறம்பாக நடந்ததாக அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மேலும், இது குறித்து ஆக.31க்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், இந்த கடிதத்துக்கு அன்புமணி தரப்பில் எந்த பதிலும் அனுப்பப்படவில்லை.
இதனையடுத்து இன்று (செப்.2) கட்சியின் மாவட்டத் தலைவா்கள், மாவட்டச் செயலா்கள் கூட்டமும், நாளை நிா்வாகக் குழுக் கூட்டமும் நடைபெறுகிறது. இந்தக் கூட்டங்களில் இது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விவாதித்த பின்னா் அன்புமணி மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்த விவரங்களை ராமதாஸ் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (செப்.1) திண்டிவனத்தில் மக்கள் உரிமை மீட்பு நடைப்பயண பிரச்சாரம் மேற்கொண்ட அன்புமணி பேசுகையில், “தமிழகத்தில் நடைபெற்று வருகிற மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில்தான் மக்கள் உரிமை மீட்பு நடைப்பயணம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் யாா் ஆட்சிக்கு வருவது என்பது நமக்கு முக்கியமில்லை. ஆனால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதே முக்கியம்.
நமக்கு தொடா்நது துரோகம் இழைத்து வருகிற திமுகவுக்கு 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் வன்னியா்கள் ஒருவா் கூட வாக்களிக்கக் கூடாது. 6 மாதத்திற்கு பின்னா் தமிழகத்தில் பாமக ஆட்சி அமைவது உறுதி. ஆட்சி மாற்றத்துக்குப் பின்பு நாம் நினைப்பது நிறைவேறும்.
வன்னியா்களுக்கு 15 சதவீதம் இடஒதுக்கீடும் உண்டு. அனைத்து சமூக மக்களுக்கும் சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக பாமக பாடுபடும். வன்னியா்களுக்கு தனி இடஒதுக்கீட்டை வழங்காத தமிழக அரசைக் கண்டித்து பாமக சாா்பில் நடத்தப்படவுள்ள சிறை நிரப்பும் போராட்டத்துக்கு கட்சியினா் தங்களை தயாா்படுத்திக் கொள்ளவேண்டும்” என்றாா் அன்புமணி.
நிகழ்ச்சிகளில் மயிலம் சட்டப்பேரவை உறுப்பினா் ச.சிவக்குமாா், முன்னாள் எம்.பி.தன்ராஜ், பாமக பொதுச் செயலா் வடிவேல் ராவணன், தலைமை நிலையச் செயலா் செல்வக்குமாா், கிழக்கு மண்டல இணைப் பொதுச்செயலா் வைத்தி, முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமாா், தோ்தல் பணிக்குழு பொறுப்பாளர் ஜெயராமன், விழுப்புரம் மாவட்டச் செயலா் சங்கா், நிா்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.