அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!
முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள அரசமாளிகையில் இருந்து இன்று வெளியேறவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
அரசமாளிகையில் இருந்து தங்காலையிலுள்ள தனது கால்டன் இல்லத்தில்-மஹிந்த குடியேறவுள்ளார் எனவும், இதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரியவருகின்றது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகள் அனைத்தும் நீக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்திருந்தது.
இதற்கமைய அரச மாளிகையில் இருந்து வெளியேறுமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு ஊடக சந்திப்புகள் மூலம் வலியுறுத்தப்பட்டது.
எனினும், தனக்கு சட்டப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே அது தொடர்பில் பரிசீலிக்க முடியும் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
இதனால் இந்த மாளிகை தொடர்பான விவகாரம் அரசியல் ரீதியில் பெரியளவு பேசுபொருளானது.
இவ்வாறான பின்னணியில், ஜனாதிபதிகளுக்குரிய உரித்துரிமைகளை நீக்கு தற்குரிய சட்டமூலம் நேற்று நிறைவேற் றப்பட்டுள்ளது.
இதனை சபாநாயகர் சான்றுரைப்படுத்தியுள்ளதால் சட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இதனையடுத்தே அரச மாளிகையில் இருந்து இன்று வெளியேறுவதற்கு மஹிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலையே ராஜபக்சக்களின் பூர்வீகம்.
அரசியல் கோட்டை,அங்கிருந்தே மஹிந்தவின் அரசியல் பயணம் கூட ஆரம்பமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய சட்டத்தின் கீழ் உத்தியோகப்பூர்வ இல்லங்களை இழக்கவுள்ள முன்னாள் ஜனாதிபதிகள்!
“ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குதல் சட்டத்தின்” விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகப்பூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் திருப்பித் தர வேண்டி ஏற்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
நேற்று (10) நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தின்படி, அவர்கள் அந்த சலுகையை இழந்துள்ளனர்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் தங்கள் உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பார்கள் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பந்தப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் ஒப்படைக்கப்படாவிட்டால், எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், “ஜனாதிபதி சிறப்புரிமைகளை நீக்குதல்” சட்டத்தின் விதிகளின்படி எதிர்காலத்தில் செயல்பட எதிர்பார்ப்பதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கூறுகிறது.
ஜனாதிபதியின் சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது, தொடர்புடைய வாக்கெடுப்பில், ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன.
ஜனாதிதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குதல் சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் நேற்று (10) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவாகின.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் 2025 ஓகஸ்ட் 07ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் 1986ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க சனாதிபதிகளின் உரித்துரிமைகள் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலமாகும்.
நீக்கப்பட்ட சட்டத்தின் 2 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் சனாதிபதிக்கு அல்லது முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஏதேனும் வதிவிடம் அல்லது செலுத்தப்பட்ட மாதாந்த படி, நீக்கப்பட்ட சட்டத்தின் 3 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிக்கு அல்லது முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மாதாந்த செயலகப் படித்தொகை, வழங்கப்பட்ட அலுவலக போக்குவரத்து மற்றும் அத்தகைய வேறு வசதிகள், நீக்கப்பட்ட சட்டத்தின் 4 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மாதாந்த ஓய்வூதியம் என்பன இரத்துச் செய்யப்படும்.
அத்துடன், “ஜனாதிபதிகளின் சிறப்பு ரிமைகள் நீக்குதல்” சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று பிற்பகல் தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
இதற்கு அமைய குறித்த சட்டமூலம் 2025 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் சிறப்பு ரிமைகள் (நீக்குதல்) சட்டமாக நடைமுறைக்குவரும்.
உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறினார் சந்திரிக்கா!
முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தான் பயன்படுத்திவந்த உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
நேற்று (10) நாடாளுமன்றில் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதனை சபாநாயகர் நேற்றைய தினமே சான்றுரைப் படுத்தியிருந்தார்.
இதன்படி குறித்த சட்டம் நேற்றுமுதல் அமுலுக்கு வந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் இல்லங்களை விட்டு வெளியேறியுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறவுள்ளார்.