புலனாய்வு மேலாளர் விநாயகம் அவர்களுக்கு சீமானின் இரங்கல்!
.
.png)
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், புலனாய்வுத் துறையின் மேலாளர்களில் ஒருவருமான மேலாளர் விநாயகம் என்று போராளிகளால் அன்போடு அழைக்கப்படும் கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி அவர்கள் கடந்த 04/06/2024 அன்று பிரன்சு நாட்டில் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். பல பரிணாமங்களை கொண்ட தமிழீழத் தாயக விடுதலைப் போராட்ட களத்தில் 19 வயதிலேயே தம்மை இணைத்துக் கொண்டு, புலனாய்வுத் துறையின் முகமாகத் திகழ்ந்த, புலனாய்வுத்துறை மேலாளர் விநாயகம் அவர்களின் பங்கு ஈடு இணையற்றது. புலனாய்வுத் துறைக்கான நுண்ணறிவினையும், இரகசியம்காப்பு, வேகம்,விவேகம் உள்ளிட்ட சிறப்புப் பண்புகள் இயற்கையிலேயே அமையப்பெற்ற விநாயகம் அவர்கள், புலனாய்வுத்துறை தலைவர் பொட்டு அம்மான் அவர்களால் கூர்ந்து நோக்கப்பட்டு நேரடியாக புலனாய்வுப் பிரிவில் சேர்க்கப்பட்ட சிறப்புக்குரியவர்.
தமிழீழ தேசிய தலைவர் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்களால் பலமுறை பாராட்டப்பட்ட பெருமைக்குரிய விநாயகம் அவர்கள், தாயக எல்லைக்கு உள்ளேயும் வெளியேயும், எதிரிகள் முகாம்களிலும் புலனாய்வில் ஆற்றிய பெரும் பணிகள் விடுதலை புலிகள் இயக்கத்தை உலகின் வலிமைமிக்க தலைசிறந்த விடுதலைப் போராட்ட இயக்கமாக உருவெடுக்க துணை நின்றது. கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதலுக்கு தலைமை ஏற்று யாதொரு பொதுமக்களுக்கும் எந்தவித சிறு பாதிப்பும் ஏற்படாமல் மிக நேர்த்தியாக படை நகர்த்தி, இலங்கை இனவெறி இராணுவத்தின் பாதுகாப்பு அரண்களை தமது புலனாய்வுப் பேரறிவால் தகர்த்து வெற்றிகரமாக தாக்குதலை நிகழ்த்தி உலக நாடுகளை வியக்கச் செய்த அவருடைய வீரச்செயல்கள் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
போராட்ட காலங்களில் எத்தனை முறை முயன்றபோதும் இறுதிவரை இலங்கை இனவெறி அரசால் கைது செய்ய முடியாத அளவிற்கு தன்னை தக்க வைத்துக்கொண்ட புலனாய்வு புலி விநாயகம் அவர்களின் மறைவு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அய்யாவின் மறைவால் பெரிதும் துயரத்தில் உள்ள உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் உலகெங்கும் பரவி வாழும் தாயகப் பற்றாளர் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கு கொள்கிறேன்.
புலனாய்வுப் புலி விநாயகம் அவர்களுக்கு என்னுடைய வீரவணக்கம்.
நாம் தமிழர் சீமான்