பிள்ளைகளை தொழில்நுட்பத்திலிருந்து விலக்கி வைப்பது நமது பொறுப்பல்ல - ஹரிணி அமரசூரிய,
கொழும்பு ITC ரத்னதீப் ஹோட்டலில் நடைபெற்ற TikTok சமூக வலைத்தளம் மூலம் சமூகமயப்படுத்தும் "STEM Feed" அறிமுக விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிள்ளைகளை தொழில்நுட்பத்திலிருந்து விலக்கி வைப்பது நமது பொறுப்பல்ல, மாறாக அறிவுபூர்வமாகவும், விவேகத்துடனும், ஆக்கபூர்வமாகவும் அதனைப் பயன்படுத்த அவர்களுக்கு வழிகாட்டுவதே நமது பொறுப்பு - பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர்.
கொழும்பு ITC ரத்னதீப் ஹோட்டலில் நடைபெற்ற விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளுக்கான கல்வி உள்ளடக்கங்களை TikTok சமூக வலைத்தளம் மூலம் சமூகமயப்படுத்தும் "STEM Feed" அறிமுக விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட போதே கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட உலகில், TikTok மூலம் கல்விக்கான வாய்ப்பினை ஏற்படுத்துதல், அறிவைப் பகிர்தல், கல்வியை வலுவூட்டுதல் ஆகியவற்றுக்கான பின்புலத்தை உருவாக்குவதன் மூலம் நாட்டின் இளைஞர்களுக்கான டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் கற்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் இந்த சந்தர்ப்பம் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,
சமமான அணுகல், எதிர்காலத்திற்கு ஏற்றதும் குழந்தைகளுக்குத் தாங்குபிடிக்கக்கூடியதுமான ஒரு கல்வி முறையை அறிமுகப்படுத்துவதற்காக கல்வி அதிகாரிகள், கல்விமான்கள், அறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சிறுவர் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் தனியார் துறை பங்காளிகள் ஆகியோர் உள்வாங்கப்பட்ட ஒரு செயலணியை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சியை வலியுறுத்தினார்.
தேசிய முன்னுரிமைகளுடன் இணைந்து STEM துறைகளில் இளைஞர்களை ஊக்குவிப்பதற்கும், பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட அறிவை பெறுவதற்கான புதிய வழிகளை அறிமுகப்படுத்துவதற்கும் TikTok போன்ற உலகளாவிய தளங்களின் ஆதரவைப் பாராட்டிய பிரதமர், ஒரு புதிய, சமநிலையான மற்றும் ஊக்குவிக்கப்பட்ட இளைஞர் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு கலை மற்றும் மனிதநேயத் துறைகள் உட்பட STEAM துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த TikTok சமூக வலைத்தளத்தின் தெற்காசிய அரச கொள்கை மற்றும் பொது உறவுகளின் தலைவர் Ferdous Mottakin, இலங்கையில் STEM Feed ஐ அறிமுகப்படுத்துவது கல்வி உள்ளடக்கங்களுக்கான அணுகலை விரிவுபடுத்துவதுடன், அத்தகைய கற்றல் பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் நம்பகமான டிஜிட்டல் சூழலில் நடைபெறுவதை உறுதிப்படுத்தவும் உதவும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் TikTok சமூக வலைத்தளத்தின் தெற்காசிய அரச கொள்கை மற்றும் மக்கள் தொடர்பு பிரிவின் தலைவர் Ferdous Mottakin, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரீ, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஏ. சரத் ஆனந்த மற்றும் அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.