தனியார் வங்கியிலிருந்து மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனம் பெற்றுக்கொண்ட கடனை மீள் செலுத்தாமை தொடர்பில் கோப் குழுவின் கவனத்திற்கு
.

மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனத்தினால் தனியார் வங்கியிலிருந்து பெறப்பட்ட கடனை மீள் செலுத்தாதது தொடர்பில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பான பரிந்துரைகள் வழங்கப்பட்டன.
இலங்கை துறைமுக அதிகாரசபையின் 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயல்திறனை ஆராய்வதற்காக, பாராளுமன்றத்தின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் கடந்த 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தப் பரிந்துரைகள் வழங்கப்பட்டன.
மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனம் 2013 ஜூலை 05 ஆம் திகதி நிறுவப்பட்டது என்றும், அந்த நிறுவனம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்ற அனுமதிப்பத்திரம் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிபொருள் விநியோகஸ்தராக செயற்பாடுகளை ஆரம்பித்து 2014 ஆம் ஆண்டில் தனியார் வங்கியொன்றிலிருந்து துறைமுக அதிகாரசபையின் நிறுவன உத்தரவாதத்தின் (Corporate Guarantee) மூலம் 24 மில்லியன் டொலர் கடன் பெற்றிருந்தமை இங்கு தெரியவந்தது. எனினும், இந்தத் தொகையில் 18.82 மில்லியன் டொலர்கள் (6836 மில்லியன் ரூபாய்) 2023 டிசம்பர் வரை செலுத்தப்படாமல் இருந்ததாகவும், இந்தக் கடன் தொகையை மீளப் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட வங்கி 2019 ஆம் ஆண்டில் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் அதிகாரசபைக்கு எதிராக இரண்டு வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளதாகவும் இங்கு தெரியவந்தது.
குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், இது தொடர்பாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். அத்துடன், 2022 ஜூன் மாதம் முதல் கலைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனத்தை மூடும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அதற்கமைய, இது தொடர்பாக குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இவ்விடயத்தில் இலங்கை துறைமுக அதிகாரசபை தனது பொறுப்பை நிறைவேற்றுவதில் திருப்தியடைய முடியாது என குழு இதன்போது சுட்டிக்காட்டியது. அத்துடன், நிறுவனத்தை மூடுவதன் மூலம் மாத்திரம் திருப்தியடைய முடியாது என சுட்டிக்காட்டிய குழு, கடன் செலுத்தும் செயன்முறையை துரிதப்படுத்துமாறு பரிந்துரைத்தது. அத்துடன், இது தொடர்பாக ஒரு உள்ளக விசாரணை நடத்தி அதற்குரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறும், உள்ளகக் கணக்காய்வுப் பிரிவை சரியாக மேற்பார்வையிடுவதற்கான ஒரு பொறிமுறையை தயாரிக்குமாறும் குழு பரிந்துரைத்தது. அதற்கமைய, இந்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் குழுவிற்கு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது.
அதற்கு மேலதிகமாக, அதிகாரசபையின் கூட்டுத் திட்டம் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, டி.வி. சானக்க, எம்.கே.எம். அஸ்லம், (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, திலித் ஜயவீர, லெப்டினன்ட் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, திலின சமரக்கோன், சமன்மலி குணசிங்க, சுனில் ராஜபக்ஷ, சந்திம ஹெட்டியாராச்சி, தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.