Breaking News
*அரேபிய சிங்கம் உமர்முக்தார்* அவர்கள் ஷகீதாக்கப்பட்ட நாள் 16.09.2025.
உமர் முக்தாரின் கடைசி கர்ஜனை!

1920 களிலும் 30 களிலும் லிபியாவை இத்தாலி ஆக்கிரமித்திருந்த போது இத்தாலிக்கு எதிராக ஜிஹாத் செய்தவர்தான் உமர் முக்தார். நவீன தொழில்நுட்பம், இராணுவ வலிமை ஆகிய அனைத்திலும் இத்தாலியை விட பல மடங்கு பின்தங்கியிருந்த நிலையிலும் இத்தாலி ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் உமர் முக்தார்.
பலமாக காயமுற்ற நிலையில் அவர் சிறை பிடிக்கப்படுகின்றார். அவருடைய கைகளிலும் கால்களிலும் சங்கிலிகளால் பிணைத்து இத்தாலிக்கு அழைத்துச் சென்றார்கள்.
ஏற்கனவே தீர்ப்பு தீர்மானம் செய்யப்பட்டு விட்ட நிலையிலும் நீதிமன்ற விசாரணை என்கிற நாடகத்தை இத்தாலி ஏகாதிபத்திய அரசு நடத்தியது. அந்த இராணுவ நீதிமன்றத்தில் நீதிபதிக்கும் உமர் முக்தாருக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கேட்டிருக்கின்றீர்களா? இன்றும் மனத்தை சிலிர்க்கச் செய்கின்ற, நெஞ்சை உருக வைக்கின்ற, பரபரவென்று செயல்படத் தூண்டுகின்ற உரையாடல் அது. கேளுங்கள்.
நீதிபதி: ‘இத்தாலிய அரசுக்கு எதிராகப் போராடினீர்களா?’
உமர் முக்தார்: ‘ஆம்.’
நீதிபதி: ‘இத்தாலிக்கு எதிராகப் போராடும்படி மக்களைத் தூண்டினீர்களா?’
உமர் முக்தார்: ‘ஆமாம்’.
நீதிபதி : ‘இதற்காக உமக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பது உமக்குத் தெரியுமா?’
உமர் முக்தார்: ‘தெரியும்’.
நீதிபதி: ‘இத்தாலிக்கு எதிராக எத்தனை ஆண்டுகளாய்ப் போராடிக் கொண்டிருக்கின்றீர்கள்?’
உமர் முக்தார்: ‘இருபது ஆண்டுகளாய்’.
நீதிபதி: ‘உம்முடைய இந்தச் செயல் குறித்து உமக்கு வருத்தம் இருக்கின்றதா?’
உமர் முக்தார்: ‘இல்லை’
நீதிபதி: ‘இதனால் நீர் தூக்கிலிடப்படுவீர் என்பதை உணர்ந்திருக்கின்றீர்களா?’
உமர் முக்தார் : ‘ஆமாம்’
நீதிபதி: ‘அது உம்மைப் போன்ற மனிதருக்குப் பரிதாபமான முடிவாக இருக்கும்.’
உமர் முக்தார் உரத்த குரலில் சொன்னார்: ‘இல்லை. அதற்கு நேர்மாறாக என்னுடைய வாழ்க்கையை முடிப்பதற்கான சிறப்பான வழிதான் அது.
ஜிஹாதை நிறுத்தும்படி உம்முடைய முஜாஹிதீன்களுக்குக் கோரிக்கை விடுப்பீர்களேயானால் உம்மை விடுதலை செய்து சொந்த நாட்டுக்கும் திருப்பி அனுப்புவேன் என்று இறுதியில் ஆசை காட்டினார் நீதிபதி.
லிபியாவின் சிங்கமான உமர் முக்தார் கர்ஜித்தார்:
"நாங்கள் சரணடைவதில்லை.
ஒன்று வெற்றி பெறுவோம் அல்லது இறந்துபோவோம்"