வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத மணல் அகழ்வு - நடவடிக்கை எடுக்காத பொலிஸார்!
.

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு தாளையடியில் அமைந்துள்ள கடல் நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலைய வளாகத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
சட்டவிரோத மணல் அகழ்வினை மேற்கொண்டு வரும் கும்பலொன்று தினமும் பல டிப்பர்களில் மண்ணை செம்பியன் பற்று தாளையடி கடற்கரை வீதி வழியாக ஏற்றிச்சென்று விற்பனையில் ஈடுபடுகிறது.
இது தொடர்பாக பல ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த மணல் அகழப்படும் பிரதேசத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மருதங்கேணி பொலிஸ் நிலையம் அமைந்துள்ளது. ஆனாலும் மணல் அகழ்வு விடயத்தில் இதுவரை எந்த சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை.
தொடர்ச்சியாக இடம்பெறும் மணல் அகழ்வால் வடமராட்சி கிழக்கின் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது மட்டுமன்றி, மக்கள் குடியிருக்க முடியாதளவுக்கு கடல் நீர் உட்புகக்கூடிய நிலைமையும் தோன்றியுள்ளது.