வங்கதேசத்தில் ஆட்சியை கைப்பற்றும் ராணுவம்? பதறியடித்து விளக்கமளித்த முகமது யூனுஸ்..
இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ்

வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்க்கு எதிராக அந்த நாட்டின் ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளதாக ராணுவ உயரதிகாரிகளுடன் அவர் அவசர மீட்டிங் நடத்திய பிறகு இந்த தகவல் வெளியானது. இதனை முகமது யூனுஸ் முற்றிலுமாக மறுத்துள்ளார். அதோடு தற்போது வதந்திகளின் திருவிழா நடப்பதாக கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டம் நடந்தது. இது வன்முறையானது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்தார். தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார்.
இவர் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறார். இதற்கிடையே தான் வங்கதேசத்தின் ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் மற்றும் முகமது யூனுஸ் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லாததை காரணமாக வைத்து முகமது யூனுஸ் அரசை கவிழ்க்க ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
அதுமட்டுமின்றி இதுதொடர்பாக வங்கதேச ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான், ராணுவ உயரதிகாரிகளுடன் அவசர மீட்டிங்கை நடத்தினார். இந்த மீட்டிங் என்பது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கான முதற்படி என்ற தகவல்கள் வெளியாகின. இது முகமது யூனுஸ் தரப்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இப்படியான சூழலில் தான் முகமது யூனுஸ் பதறியடித்து விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக முகமது யூனுஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: இடைக்கால அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வதந்திகளின் திருவிழா நடந்து வருகிறது. நாட்டை சீர்குலைப்பதற்காக ஒன்றன் பின் ஒன்றாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. நாட்டை உருக்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தவறான தகவல்களை பரப்பி மக்களை தவறாக வழிநடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக அனைத்து வழிகளிலும் வதந்திகள் என்பது பரப்பப்பட்டு வருகிறது. ஒரு போட்டோவை இன்னொரு போட்டோவுடன் இணைத்து தவறான தகவல்களை பரப்புகின்றனர். பிற நாட்டில் நடக்கும் சம்பவங்களை வங்கதேசத்தில் நடத்துவதாக கூறி வலைதளங்களில் பரப்புகின்றனர். இன்னும் தேர்தல் நெருங்க நெருங்க, தவறான தகவல்களின் தீவிரம் அதிகரிக்கும். இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? ஏன் இருக்கிறார்கள்? என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்த வதந்திகள் மற்றும் தவறான கோட்பாடுகள் பரவுவதால் ஐநா சபையின் ஒத்துழைப்பை நாடி உள்ளோம். இந்த விஷயத்தில் ஒத்துழைப்பு தருவதாக ஐநா சபையின் பொதுச்செயலாளர் உறுதியளித்துள்ளார்'' என்றார். இதன்மூலம் வங்கதேசத்தில் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை தொடர்பான தகவல் வதந்தி என்று அவர் கூறினார்.
முன்னதாக வங்கதேச ராணுவ தளபதி முகமது உஸ் ஜமான் ராணுவ அதிகாரிகளுடன் அவசர மீட்டிங்கை நடத்தி உள்ளார். இந்த மீட்டிங் என்பது நேற்று வங்கதேசத்தின் ராணுவ தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த மீட்டிங்கில் ராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். குறிப்பாக அந்த நாட்டின் 5 லெப்டினன்ட் ஜெனரல், 8 மேஜர் ஜெனரல்கள், தனி அதிகாரம் படைத்த கமாண்டிங் ஆபிசர்ஸ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். அப்போது மக்கள் மத்தியில் இடைக்கால அரசின் மீதான நம்பிக்கை குறைந்து வருவது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் நல்ல சூழலை ஏற்படுத்துவது பற்றியும், இதற்கு ராணுவம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் நாட்டில் தற்போதைய சூழல் தொடரும் பட்சத்தில் வங்கதேச மக்கள் பெரும் பாதிப்பை சந்திக்கலாம். இதனால் பதற்றத்தை தணிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டில் விரைவில் எமர்ஜென்சி நிலையை கொண்டு வர வேண்டும் அல்லது முகமது யூனுஸின் ஆட்சியை கவிழ்க்க ராணுவம் சார்பில் அந்த நாட்டின் அதிபருக்கு அழுத்தம் கொடுக்கலாம் என விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இப்படியான சூழலில் தான் முகமது யூனுஸ் அதனை மறுத்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.