Breaking News
இளையராஜா நாகூர் அனிபா இருவருக்கும் இடையே உள்ள தொடர்பு!
.

அன்னக்கிளிக்கு முன்பே இளையராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்த நாகூர் ஹனிபா; இதை எங்கும் இசைஞானி சொல்லவே இல்லையா? இளையராஜா நாகூர் அனிபா இருவருக்கும் இடையே தொடர்பு உள்ளது. தமிழ் திரையிசையின் முடிசூடா மன்னராகத் திகழும் இசைஞானி இளையராஜாவைச் சுற்றி புகழ்மாலையும் சர்ச்சை புயலும் சுழன்றபடியே உள்ளது. ஆனால், அவர் இவை எதையும் கண்டுகொள்ளாமல் தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இசைஞானி இளையராஜா ஒரு நிகழ்ச்சியில் சினிமாவில் இசையமைக்க வேண்டும் என நான் யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்டதில்லை என்று கூறியிருந்த நிலையில், நாகூர் அனிபா தனது இசைத் தட்டுக்கு இசையமைக்க இளையராஜா வாய்ப்பு கேட்டதாகப் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டின் தென் மாவட்டத்தில் பண்ணைபுரம் என்ற எங்கோ ஒரு கிராமத்தில் இருந்து வந்து தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியதோடு மட்டுமில்லாமல் 50 ஆண்டுகளாக திரையிசையில் கோலோச்சி வருகிறார். 1973-ம் ஆண்டு பஞ்சு அருணாச்சலம் இயக்கத்தில் அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜாவுக்கு அதற்கு பிறகு வெற்றிமுகம்தான். அதே போல, திராவிட இயக்க மேடையில் கம்பீர குரலால் முழங்கியவர் பாடகர் நாகூர் அனிபா. திராவிட இயக்க பாடல்களைப் பாடியவர். அதோடு, இறைவன் அல்லாஹ்வின் பெயரில் பாடல்களைப் பாடியவர். இசைமுரசு நாகூர் ஹனிபா என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். இளையராஜா நாகூர் அனிபா இருவருக்கும் இடையே தொடர்பு உள்ளது. அன்னக்கிளி படத்தில் இசையமைப்பதற்கு முன்பே இளையராஜாவுக்கு நாகூர் அனிபா இசையமைக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். அது என்ன நிகழ்வு என்று இங்கே பார்ப்போம்.
நாகூர் அனிபா ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “நான் 1972 - 73-ல் எம்.எல்.சி-யாக இருந்தேன். அப்போது எம்.எல்.சி விடுதியில் இருந்தேன். ஒரு நாள் எனது அறை கதவைத் தட்டப்பட்டது. போய் பார்த்தால் ஒரு வாட்டமான இளைஞன், வாட்டமான முகம், வாட்டமான உடல். நான் தம்பி நீங்கள் யார், என்ன விஷயம் என்று விசாரித்தேன்.அதற்கு அந்த இளைஞர் ஐயா, என் பெயர் ராசய்யா. நான் பாவலர்ஸ் பிரதர்ஸ் என்று ஒரு இசைக்குழு வைத்திருக்கிறோம். நீங்கள் நபிகள் பெயரில் இசைத்தட்டு வெளியிடுவதாகக் கேள்விப்பட்டேன். அதற்கு இசையமைக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்று கூறினார். அதற்கு நான், தம்பி இசையமைப்பாளர் யார் என்பதை எல்லாம் எச்.எம்.டி நிறுவனம்தான் முடிவு செய்வார்கள், நீங்கள் அவர்களைப் போய் பாருங்கள் என்று கூறினேன். அதற்கு அந்த இளைஞர் அவர்கள் சொல்லித்தான் நான் உங்களைச் சந்திக்க வந்தேன் என்று கூறினார். இதற்கு அப்படி என்றால், சரி என்று அவரை உள்ளே அழைத்துச் சென்று. எனது அறையில் இருந்த ஆர்மோனியத்தைக் கொடுத்து ஒரு பாடல் வரிகளைச் சொல்லி இசையமைக்கச் சொன்னேன். தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு, கொஞ்சம் நில்லு எங்கள் திருநபியிடம் சென்று சலாம் சொல்லு என்று கூறினேன். அதற்கு அந்த பையன், இல்லை இன்றைக்கு பெரிய மனுஷன், அற்புதமாக இசையமைத்தார். தென்றல் காற்றே வந்தது போல இருந்தது. அவர் இசையமைத்ததைக் கேட்டு தம்பி உனக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்று கூறினே. அந்த இசைத் தட்டுக்கு அவர்தான் இசையமைத்தார். அந்த இசைத்தட்டும் நன்றாக விற்பனையானது என்று நாகூர் அனிபா கூறியுள்ளார்.
இதனிடையே, இசைஞானி இளையராஜா ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, சினிமாவில் இசையமைக்க வாய்ப்பு கொடுங்கள் என்று நான் யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்டதில்லை. என்னுடைய சகோதரர் பாஸ்கர்தான் எனக்காக போய் வாய்ப்பு கேட்டு வருவார் என்று கூறியுள்ளார். அதனால், சமூக வலைதளங்களில் சிலர், இளையராஜா, அன்னக்கிளி படத்தில் இசையமைப்பதற்கு முன்பு நாகூர் அனிபா இசைத்தட்டில் வாய்ப்பு வழங்கியதை எங்காவது சொல்லியிருக்கிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இசைஞானி இளையராஜா இசையில், பாடகர் நாகூர் அனிபா சினிமாவில் சில பாடல்களையும் பாடியுள்ளார். மிகவும் பிரபலமான பாடல் என்றால், “எம்மதமா, உம்மதமா ஆண்டவன் எந்த மதம்” என்ற பாடல் மிகவும் புகழ்பெற்ற பாடல்.