Breaking News
முள்ளிவாய்க்கால் கொலைக்களம் முகநூல் பதிவிலிருந்து
,

முள்ளிவாய்க்காலில் சரண் அடைந்த விடுதலைப் புலித் தளபதிகள் போராளிகள் எங்கே?
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் மே 18 அன்று ஸ்ரீலங்கா இராணுவம் சுட்டுக் கொல்வதற்கு சற்று முன்பதாக பிரித்தானிய மற்றும் அமெரிக்க இராசதந்திரிகளோடு பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இந்தப் பேச்சு வார்த்தையில் அய்நா செயலாளர் நாயகத்தின் முக்கிய அதிகாரி விஜய் நம்பியாரும் (United Nations secretary generals chief of staff ) ஈடுபட்டிருந்தார். இறப்பதற்கு முன்னர் வி.புலித் தலைவர்கள் நோர்வே நாட்டு சுற்றுச்சூழல் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் எரிக் சொல்கேய்ம் அவர்களோடும் தொடர்பில் இருந்தார்கள். வெள்ளைக் கொடியோடு சரண் அடைந்த விடுதலைப் புலித் தலைவர்களை சிறீலங்கா இராணுவம் இயந்திரத் துப்பாகிகளால் சுட்டுப் படுகொலை செய்த செய்தியை பிரித்தானிய செய்தித்தாள்கள் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தன. British newspapers expose cold-blooded killing of LTTE leaders in Sri Lanka!
நடேசன் என்னிடம் மூன்று அம்சங்களை அய்நா வுக்கு அறிவிக்குமாறு கேட்டிருந்தார்: நாங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கத் தயார், அமெரிக்கா அல்லது பிரித்தானியா நாடுகளிடம் இருந்து தங்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரவேண்டும், சிறீலங்கா அரசு சிறுபான்மைத் தமிழ்மக்களது உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்கும் ஒரு அரசியல் செயல்முறைக்குச் சம்மதிக்க வேண்டும். உயர்மட்டத்தில் இருக்கும் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய அதிகாரிகள் மூலம் கொழும்பில் உள்ள அய்நா சிறப்புத் தூதுவர், அய்நா செயலாளர் நாயகம் பான் கி மூன் அவர்களது முக்கிய அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோரோடு தொடர்பு ஏற்படுத்தி இருந்தேன். சரண் அடைவதற்கு வி.புலிகள் முன்வைத்த நிபந்தனைகளை விஜய் நம்பியாரிடம் சொன்னேன். அவர் அதனை சிறீலங்கா அரசுக்குத் தெரிவிப்பதாக என்னிடம் சொன்னார்.
மோதல் ஒரு அமைதியான முடிவுக்கு வருவது போல் தென்பட்டது. பதுங்கு குழியில் இருந்து ஜாலியான, மூக்குக் கண்ணாடி அணிந்த புலித்தேவன் தனது படத்தை எனக்கு அனுப்புவதற்கு அவருக்கு அந்த நெருக்கடியிலும் நேரம் இருந்திருக்கிறது. இருந்தும் ஞாயிறு இரவு இராணுவம் நெருக்கிக் கொண்டிருந்த போது புலிகளிடம் இருந்து அரசியல் கோரிக்கைகளோ அல்லது படங்களோ வருவது நின்றுவிட்டது. நடேசன் என்னை அழைத்தபோது “சரண்” என்ற சொல்லைப் பயன்படுத்த மறுத்துவிட்டார். ஆனால் அதைத்தான் அவர் செய்ய நினைத்தார். புலிகளது பாதுகாப்பை உறுதிப்படுத்த நம்பியார் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மேலும் ஒரு முறை நியூ யோர்க்கில் உள்ள அய்நாவின் 24 மணித்தியால கட்டுப்பாட்டு மையம் கொழும்பில் உள்ள நம்பியாரோடு என்னைத் தொடர்பு படுத்தியது. அப்போது நேரம் திங்கட்கிழமை (மே 18) காலை 5.30 மணி. நான் அவரை நித்திரையில் இருந்து எழுப்பினேன்.
நான் சொன்னேன் வி.புலிகள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டார்கள் என்று. அவர் (நம்பியார்) சொன்னார் சிறீலங்காவின் சனாதிபதி தனக்கு வாக்குறுதி அளித்துள்ளார். நடேசன் மற்றும் புலித்தேவன் இருவரும் பத்திரமாகச் சரண் அடையலாம். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ‘வெள்ளைக் கொடியை உயரப் பிடிக்க வேண்டியதுதான்’ எனச் சொன்னார். நான் நம்பியாரிடம் கேட்டேன் ‘வடக்கில் இடம்பெறும் சரணாகதியை நேரில் பார்க்க நீங்கள் போகவேண்டிய அவசியம் இல்லையா?’ அதற்கு அவர் இல்லை, அப்படிப் போக வேண்டிய அவசியம் இல்லை: சனாதிபதியின் வாக்குறுதிகள் போதுமானது என்றார்.
இலண்டனில் அப்போது ஞாயிறு (மே 17) நள்ளிரவு. நான் நடேசன் அவர்களோடு செய்மதி தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் நான் அதில் தோல்வி கண்டேன். எனவே தென் ஆபிரிக்காவில் உள்ள ஒரு புலிகளது தொடர்பாளரோடு பேசினேன். அவரிடம் நம்பியாரின் செய்தியைச் சொன்னேன்: வெள்ளைக் கொடியை உயரப் பிடித்து அசைக்கவும்.
தென்னாசியாவில் இருந்த வேறொரு புலித் தொடர்பாளரிடம் இருந்து வந்த தொலைபேசி என்னை நித்திரையில் இருந்து 5.30 மணிக்கு எழுப்பியது. அவரால் நடேசனோடு தொடர்பு கொள்ள முடியவில்லை. “நான் நினைக்கிறேன், எல்லாம் முடிந்துவிட்டது” என்று அவர் சொன்னார். “அவர்கள் எல்லோரும் இறந்து போய்விட்டார்கள்.” அன்று மாலை சிறீலங்கா இராணுவம் அவர்களது உடல்களை காட்சிப் படுத்தியது. சரணடைவு ஏன் பிழைத்துப் போனது? அதனை நான் விரைவில் அறிந்து கொண்டேன்.
சிறீலங்கா நடாளுமன்ற தமிழ் உறுப்பினர் றோகன் சந்திர நேருவை நடேசன் ஞாயிறு இரவு அழைத்திருந்தார் என்பதைக் கண்டு பிடித்தேன். சந்திர நேரு ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர். அவர் இராசபக்சேயை உடனடியாகத் தொடர்பு கொண்டார். அடுத்த சில மணித்தியாலங்கள் நடந்த சம்பவங்களை அந்த நாடாளுமன்ற உறுப்பினர் விபரித்துச் சொன்னார்: “நடேசன் மற்றும் அவரது குடும்பத்துக்கு முழு அளவிலான பாதுகாப்புக் கொடுக்கப்படும் என என்னிடம் சனாதிபதியே சொன்னார். நடேசன் தன்னிடம் 300 பேர் இருக்கிறார்கள் எனச் சொன்னார். அதில் சிலர் காயம்பட்டவர்கள்.” நான் சனாதிபதிக்குச் சொன்னேன் ‘நான் போய் அவர்களது சரணடைவை பார்வையிடுகிறேன்’என்றேன்.
“இராசபக்சே சொன்னார், “இல்லை, எங்களது இராணுவம் மிகவும் பெருந்தன்மை படைத்தது. அதோடு மிகவும் கட்டுப்பாட்டோடு நடப்பது. நீங்கள் போர் வலையத்துக்குப் போக வேண்டிய தேவையில்லை. அதுமட்டுமல்ல உங்களுடைய உயிரை ஆபத்துக்குள்ளாக்க வேண்டிய அவசியமும் தேவையற்றது.”
சந்திர நேரு சனாதிபதியின் சகோதரர் பசில் தன்னை அழைத்ததாகச் சொன்னார். “அவர் சொன்னார், ‘அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். அவர்கள் வெள்ளைக் கொடியை மேலே உயர்த்திப் பிடிக்க வேண்டும். அத்தோடு அவர்கள் போக வேண்டிய வழியை அவர் எனக்குத் தந்தார்.” திங்கட்கிழமை (மே 18) காலை 6.20 மணிக்கு நடாளுமன்ற உறுப்பினர் நடேசன் அவர்களோடு தொடர்பு கொண்டார். அப்போது துப்பாக்கிச் சூட்டின் சத்தம் முன்னரைவிட அதிகமாகக் கேட்டது.
“நாங்கள் ஆயத்தம்” என நடேசன் சந்திர நேருவுக்குச் சொன்னார். “நான் வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு நடந்து செல்லப் போகிறேன்.” “நான் சொன்னேன் ‘அண்ணை உயரப் பிடியுங்கள் – அவர்கள் அதைப் பார்க்க வேண்டும். நான் உங்களை மாலை சந்திக்கிறேன்” என்றார் சந்திர நேரு.
கொலைக் களத்திலிருந்து ஒருவாறு தப்பிய ஒரு தொகுதியில் இருந்த ஒரு தமிழர் அங்கு என்ன நடந்தது என்பதை விளக்கினார். இவர், பின்னர் ஒரு தொண்டு நிறுவனத் தொழிலாளியோடு பேசியவர், அவர் சொன்னார் ‘நடேசன் மற்றும் புலித்தேவன் சிறீலங்கா இராணுவம் நிலைகொண்டு நின்ற பக்கம் ஒரு வெள்ளைக் கொடியோடு ஒரு பத்துப் பன்னிரண்டு ஆண், பெண் குழு சகிதம் நடந்து போனார்கள். உடனே இராணுவம் இயந்திரத் துப்பாக்கிகளால் அவர்களை நோக்கிச் சுடத் தொடங்கியது.’ நடேசனது மனைவி, அவர் ஒரு சிங்களப் பெண், சிங்களத்தில் அந்த இராணுவத்தினரை நோக்கிச் சத்தம் போட்டார். “அவர் சரணடைய முயற்சிக்கிறார், நீங்கள் அவரைச் சுடுகிறீர்கள்” என்றார். அவரும் சுட்டு வீழ்த்தப்பட்டார்.
முப்பது ஆண்டுகால ஆயுதப் போர் முடிவுக்கு வந்த போது இராணுவம் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளையும் போராளிகளையும் பொது மக்களையும் சரண் அடையுமாறு அறிவித்தது. இந்த அறிவித்தலை அடுத்து மே 16, 17, மே 18 நாட்களில் ஆயுதங்களை மவுனித்துவிட்டு விடுதலைப் புலிகள் இராணுவத்திடம் சரண் அடைந்தார்கள். மே 18, 2009 அதிகாலை அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தலைமையில் திருமதி நடேசன், தமிழீழவிடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண சிறப்புத் தளபதி கேணல் இரமேஷ், தமிழீழ காவல்துறையின் பொறுப்பாளார் இரமேஷ் (இளங்கோ), சமாதான செயலகத்தின் பொறுப்பாளர் சீவரட்னம் புலித்தேவன் மற்றும் 300 போராளிகள் வெள்ளைக் கொடியுடன் சரண் அடைந்தார்கள். இவர்களது சரண் அய்யன்னா அதிகாரி விஜய் நம்பியாரின் மேற்பார்வையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விஜய் நம்பியார் சனாதிபதி மகிந்த இராசபக்சே மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய இராசபக்சே ஆகியோருடன் பேசினார். விடுதலைப் புலிகள் வெள்ளைக் கொடியுடன் சரண் அடையுமாறு அறிவுறுத்தப்பட்டது. அரசியல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் உட்பட தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் இரமேஷ் அவர்களும் இலங்கை இராணுவத்திடம் மே 18 காலை சரணடைந்ததாக அன்றைய வெளியுறவுச் செயலாளர் பாலித கோஹன தெரிவித்திருந்தார்.
மே 18 காலை மக்களுடன் மக்களாக சரணடைந்த பா. நடேசன், கேணல் இரமேஷ், புலித்தேவன் போன்றோர் உயிருடன் இருக்கின்றனரா இல்லையா என்ற சர்ச்சை நீடித்துவந்த பின்புலத்தில் பா.நடேசன் ஆகியோருடன் இலங்கைப் படையினரது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் சென்றதாக நம்பப்படும் கேணல் இரமேஷ் அவர்களை படையினர் தடுத்து வைத்து கடும் தொனியில் விசாரணை செய்யும் காணொளிகள் வெளிவரத் தொடங்கின. நடேசன் மற்றும் புலித்தேவன் சிறீலங்கா இராணுவம் அணிவகுத்து நின்ற பக்கம் ஒரு வெள்ளைக் கொடியோடு 67 ஆண், பெண் குழு சகிதம் விடுதலைப் புலிகளின் முக்கியக் கட்டளைத் தளபதிகள் நடந்து போனார்கள். உடனே இராணுவம் யந்திரத் துப்பாக்கிகளால் அவர்களை நோக்கிச் சுட்டது. நடேசனது மனைவி, அவர் ஒரு சிங்களப் பெண், சிங்களத்தில் அந்த இராணுவத்தினரை நோக்கி சத்தம் போட்டார். “அவர் சரண் அடைய முயற்சிக்கிறார், நீங்கள் அவரைச் சுடுகிறீர்கள்” என்றார். அவரும் சுட்டு வீழ்த்தப்பட்டார். , மாணிக் ஃபார்ம் முகாமில் ஒரே நேரத்தில் 500 இளம் தமிழ் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்து சித்திரவதைக்குப் பின்னர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கேணல் ரமேஷ் அவர்களை சிறீலங்கா இராணுவம் மே மாதம் 22 ஆம் நாள் விசாரணைக்கு உட்படுத்தியது. அப்போது எடுக்கப்பட்ட காணொளிகள் வெளியாகி இருந்தன. அதில் இரமேஷ் அவர்கள் சாதாரண உடையில் இருந்தார். ஆனால் விசாரணை நடைபெறும் வேளை அவரை சிறீலங்கா இராணுவம் இராணுவ உடையை போடச் சொல்கிறது. அதனை அடுத்து அவர் இராணுவத்தின் சீருடையை அணிகிறார். அக் காட்சிகள் தெள்ளத் தெளிவாக காணொளில் பதிவாகியுள்ளது. இராணுவத்தின் சீருடையை அவர் அணியும்போது அவரை “டேய்” என்று விளித்து இராணுவம் அவமானப்படுத்துகிற காட்சியும் பதிவாகியுள்ளது. இராணுவம் தன்னை விசாரணை செய்யும் ஆனால் அடித்துக் கொலை செய்யும் என இரமேஷ் எதிர்பார்த்திருக்க மாட்டார். சிறீலங்கா இராணுவம் கடுமையாக தாக்கி வதை செய்து கொலைசெய்தது. விசாரணையின் போது அவர் அணிந்த இராணுவ உடையில் தான் அவர் இறந்து கிடக்கும் புகைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து பா.நடேசன், சீவரட்னம் புலித்தேவன் தீக்காயங்களுடன் இறந்து கிடக்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்தன. இவர்களும் இரமேஷ் போலவே சித்திரவதைக்குப் பின்னர் கொல்லப்பட்டிருக்க வேண்டும். இந்த சம்பவம் மே 18 காலை இராணுவம் இரக்கமற்ற முறையில் விலங்குகளைக் கொல்லுமால் போல் கொன்று குவித்ததைக் கோடிட்டுக் காட்டியது. அநேகமாக வி.புலிகளின் எல்லா உயர்மட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்களும் இவ்வாறுதான் சித்திரவதைக்குப் பின்னர் கொல்லப்பட்டிருக்க வேண்டும். பா.நடேசனோடு சிறீலங்கா இராணுவத்திடம் சரண் அடைந்த தமிழீழ காவல்துறையின் பொறுப்பாளார் இரமேஷ் (இளங்கோ) மற்றும் பாலகுமாரன் உள்ளிட்ட புலிகளின் அரசியல்பிரிவு தலைவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை. அவர்களும் கொல்லப்பட்டிருக்க வேண்டும். மே 17-ம் தேதி அதிகாலை வெள்ளமுள்ளி வாய்க்கால் பகுதியில் வெள்ளையுடை அணிந்து, வெள்ளைக் கொடிகளைத் தாங்கியவாறு அவர்கள் வெளியில் வந்தனர். இந்த நேரத்தில் இந்த விஷயம் கோத்தபயவுக்கு தெரியவும், சவேந்திர சில்வாவை அழைத்து எல்லோரையும் சுட்டுக் கொல்லும்படி அவர்தான் உத்தரவிட்டி ருக்கிறார். அதன்படியே, அத்தனை பேரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் எண்ணிக்கை தொடர்பாக நிலவும் குழப்பத்தை, கோத்தபாய இராசபக்சே நிகழ்த்திய உரை தெளிவு படுத்தியுள்ளது. போரின் முடிவில் 11,989 விடுதலைப் புலிகள் சரணடைந்ததாகவும் அவர்களுள் இதுவரை 10,965 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் 636 விடுதலைப் புலிகள் இன்னமும் மருதமடு, கண்டகாடு, வெலிக்கந்த, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களை விட மேலும் 383 விடுதலைப் புலிகள் சட்ட நடவடிக்கைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ள, மற்றும் தற்போதும் தடுப்பிலுள்ள விடுதலைப் புலிகளின் மொத்த எண்ணிக்கை 11,984 பேர் மட்டுமேயாகும்.
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் பலரது நிலை இன்னமும் அறியப்படாதுள்ள நிலையில், அவர்களில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபாய இராசபக்சே அளித்துள்ள புள்ளிவிபரங்களே அந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளன.
இராணுவம் விடுதலைப் புலிகளின் கடைசி எதிர்ப்பு மையங்களையும் துடைத்தழித்தார்கள். போர் வலையத்தில் அகப்பட்டுக்கொண்ட இரண்டரை இலட்சம் மக்கள் பற்றி இராணுவம் அக்கறைப்படவே இல்லை. பெரும்பாலும் அவரும் நடேசன் மற்றும் புலித்தேவன் போல் மரணத்தை சந்தித்திருப்பார். இராசபக்சே பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கான பொறுப்பை மறுத்துரைக்கும் போது அய்நா வின் மதிப்பீட்டின் அடிப்படையில் வெளியே கசியவிடப்பட்ட அறிக்கைகள் சனவரி (2009) தொடக்கம் 169,796 க்கும் மேலான மக்கள் கொல்லப்பட்டார்கள் எனச் சொல்கிறது,
தமிழர் தாயகம்