காலம் கனிந்துவிட்டது! BRICS+ ஆடப்போகும் ஆட்டம்! டிரம்ப் பற்ற வைத்த வர்த்தக போர்...ஆட்டம் காணப்போகும் அமெரிக்கா!
தேசிய நாணயத்தில் வர்த்தகத்தை தொடங்குவது பற்றி பிரிக்ஸ் நாடுகள் ஏற்கெனவே பேசி வந்த நிலையில், இதற்கான சரியான தருணம் இதுதான்!

வரி மூலமாக டிரம்ப் வர்த்தக போரை தொடங்கியிருக்கிறார். இது இந்தியா உட்பட ஏராளமான நாடுகளை பாதிக்க இருக்கிறது. இந்நிலையில், பிரிக்ஸ் அமைப்பு தன்னுடைய ஆட்டத்தை தொடங்கியிருக்கிறது.
தேசிய நாணயத்தில் வர்த்தகத்தை தொடங்குவது பற்றி பிரிக்ஸ் நாடுகள் ஏற்கெனவே பேசி வந்த நிலையில், இதற்கான சரியான தருணம் இதுதான் என்று பிரேசில் நிதி அமைச்சகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர் டாட்டியானா ரோசிட்டோ கூறியிருக்கிறார். அநேகமாக இந்த ஆண்டு நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது.
நேற்றைய தினம் நடந்த 'பிரிக்ஸ் பிரேசில் 2025' ஆன்லைன் பேட்டியில் பேசிய டாட்டியானா, "பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே தேசிய நாணயங்களை பயன்படுத்தும் யோசனையை பிரேசிலின் பொருளாதார அமைச்சகம் வரவேற்கிறது. பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே வர்த்தகம் செய்யும்போது அமெரிக்க டாலரின் பயன்பாட்டை குறைக்கும் முயற்சிக்கு பிரேசில் ஆதரவளிக்கும்" என்று கூறியிருக்கிறார். இதனை ரஷ்ய ஊடகமான TASS உறுதி செய்திருக்கிறது. இவருடைய பேச்சு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் வரி அறிவிப்புக்கு மத்தியல், தேசிய நாணயங்களை பயன்படுத்துவது பற்றி பேசியிருப்பது நிச்சயம் டிரம்ப்புக்கு எரிச்சலை ஏற்படுத்தும். தேசிய நாணயம் மட்டுமல்லாது, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கிக்கு மாற்றாக, 'புதிய வளர்ச்சி வங்கியை' (New Development Bank - NDB) உருவாக்கவும் பிரிக்ஸ் நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன.
இந்த இரண்டு விஷயங்களிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. என்ன சிக்கல் இருக்கிறது? இதில் இந்தியாவுக்கு என்ன லாபம்? என்பதை பற்றி இங்கு டிகோட் செய்வோம்.
1. வர்த்தக பற்றாக்குறை 2. டாலரின் ஆதிக்கத்தை எதிர்கொள்வது முதல் சிக்கலை விரிவாக ஆராய்வோம். இந்தியாவுக்கு அதிக அளவு கச்சா எண்ணெய் தேவை. அதிலிருந்துதான் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. ரஷ்யா நமக்கு எண்ணெய்யை விற்கிறது. அமெரிக்காவும்தான் எண்ணெய்யை விற்கிறது. ஆனால் அவர்களிடம் வாங்க வேண்டுமெனில் நாம் டாலரில் பணம் கொடுக்க வேண்டும். ரஷ்யாவுக்கு அப்படியல்ல. ரூபாய் கொடுத்தால் போதும். அவர்கள் வாங்கிக்கொண்டு எண்ணெய்யை கொடுப்பார்கள். இதற்கு பெயர்தான் தேசிய நாணயங்களில் வர்த்தகம். அதேபோல ரஷ்யாவுக்கு தேவையான பொருட்களை நாம் விற்கிறோம். அவர்கள் ரூபிளை (ரஷ்ய நாட்டு பணம்) கொடுக்கிறார்கள். ஆக எல்லாம் நல்லாதானே இருக்கு.. என்ன சிக்கல்? என கேள்வி எழலாம். விஷயம் என்னவெனில், ரூபாயை வைத்து ரஷ்யா என்ன செய்யும்? என்பதுதான் கேள்வி. இந்தியாவில் மட்டும்தான் ரூபாய் நோட்டுகள் செல்லும். நம் கச்சா எண்ணெய் வாங்க கொடுக்கும் ரூபாயை வைத்து, இந்திய பொருட்களை ரஷ்யா வாங்க வேண்டும். அப்படி வாங்கினால்தான் அவர்களிடம் இருக்கும் ரூபாய் கரையும்.
ஆக இரு நாடுகளும் சமான அளவில் பொருட்களை விற்க வேண்டும். எவ்வளவுதான் கறாராக வியாபாரம் செய்தாலும் சமான அளவுக்கு வர்த்தகம் செய்ய முடியாது. பரவாயில்லை, இருப்பினும் 3-5% அளவுக்கு வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டால் இந்தியா சமாளித்துக்கொள்ளும். அதற்கும் அதிகமாக பற்றாகுறை ஏற்பட்டால் நம்மூர் ரூபாயை ரஷ்யா தலையில் சுமந்து வைத்திருக்க வேண்டி வரும். இந்த நிலை ஏற்படும்போதுதான் டாலர் எட்டி பார்க்கும். இதுதான் இரண்டாவது சிக்கல். டாலர் என்பது தங்கம் போன்றது. எந்த நாட்டில் வேண்டுமானாலும் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே வர்த்தக பற்றாக்குறை ஏற்படும்போது அந்த நாடுகள் டாலரை பற்றி யோசிக்க தொடங்கும். அப்படி யோசித்து டாலர் பக்கம் போய்விட்டால் மொத்த பிளானும் சொதப்பிவிடும். இது நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே முன்கூட்டியே சரியான திட்டமிடல் தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கச்சிதமாக பிளான் செய்யப்பட்டு அது சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டால் வேறு எந்த நாடுகளை விடவும் இந்தியாவுக்குதான் இதில் லாபம் அதிகமாக கிடைக்கும். ஏனெனில் இந்தியாவின் ரூபாய்தான் அமெரிக்க டாலருக்கு எதிராக கடுமையான சரிவை சந்தித்திருக்கிறது. தேசிய நாணயங்களில் வர்த்தகம் செய்வதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இந்தியாவின் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையாமல் வளர்ச்சியடையும். இது போதுமே நம்ம பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த. ஆக பிரேசிலின் முயற்சிக்கு இந்தியா முழு ஆதரவு கொடுக்க வேண்டும். பிரிக்ஸ் கரன்சி என்கிற விஷயம் விவாதமாக எழுந்தபோது, முதல் ஆளாய் போய், "நாங்கள் டாலருக்கு மாற்றாக எந்த கரன்சியையும் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை" என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவிடம் சரணடைந்திருந்தார். தேசிய நாணயங்களில் வர்த்தகம் விஷயத்தில் இப்படி எந்த சொதப்பலும் நடந்துவிடக்கூடாது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.