சென்டினல் தீவுக்கு தேங்காய், கோக் உடன் போன அமெரிக்க இளைஞர்.. அந்தமானில் மீண்டும் நடந்த அத்துமீறல்!
வெளி உலக தொடர்பு அறவே இல்லாத பழங்குடி மக்கள் அந்தமான் நிகோபாரில் உள்ள தீவில் வசித்து வருகிறார்கள்.

அந்தமான் நிக்கோபார் தீவில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியாகவும் மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் உள்ள சென்டினல் தீவு பகுதிக்கு அத்துமீறி நுழைந்த அமெரிக்க இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆபத்து மிக்க தீவுப்பகுதிக்கு அவர் செல்ல திட்டமிட்டது ஏன் என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
வெளி உலக தொடர்பு அறவே இல்லாத பழங்குடி மக்கள் அந்தமான் நிகோபாரில் உள்ள தீவில் வசித்து வருகிறார்கள். மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே சென்டினல் தீவு என அழைக்கப்படும் இந்த தீவில் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். தங்கள் தீவுக்குள் அந்நியர்கள் வந்தால் உடனே அம்புகள் உள்பட தங்களிடம் வைத்து இருக்கும் கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கிவிடுவார்கள்.
சென்டினல் தீவு
கிட்டத்தட்ட 12 ஆயிரம் வருடமாக அவர்கள் அங்கு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட அங்கு செல்ல முயன்று போது ஜான் ஆலன் என்ற அமெரிக்கர் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை கூட எடுக்க சென்டினல் தீவு மக்கள் அனுமதிக்கவில்லை. சென்டினல் தீவு மக்களின் பழக்கவழக்கத்தை பாதுகாக்கும் விதமாக அந்த தீவை பாதுகாக்கப்பட்ட தீவாக அரசு அறிவித்துள்ளது.
அங்கு செல்வதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது. அத்துமீறி உள்ளே சென்றால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது என்பதால் அங்கு வெளி உலக மக்களும் செல்ல துணிவது இல்லை. இந்த நிலையில், தான் வடக்கு சென்டினல் தீவுக்குள் நுழைய முயன்ற அமெரிக்க நபர் ஒருவரை சிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த மார்ச் 31 ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மியாகலியோ விக்டோரோவிச் பாலியாகோவ் (வயது 24) என்ற அமெரிக்க இளைஞர், போர்ட் பிளேருக்கு கடந்த 26 ஆம் தேதி வந்துள்ளளார்.
பைனாகுலர் வழியாக பார்த்த அமெரிக்க நபர்
பின்னர் குர்மா தீரா கடற்கரை வழியாக வடக்கு சென்டினல் தீவுக்கு படகில் செல்ல முயன்றுள்ளார். தனது படகில் இளநீர், கோக் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு நள்ளிரவு 1 மணியளவில் புறப்பட்டுள்ளார். காலை 10 மணியளவில் வடக்கு சென்டினல் தீவின் வடகிழக்கு தீவுப்பகுதியை நெருங்கி சென்ற மிகாலியோ, பைனாகுலர் வழியாக பார்த்து இருக்கிறார். ஆனால் அங்கு யாருமே தென்படவில்லை.
இதனால் கடலோர பகுதியில் கிட்டத்தட்ட அரை மணி நேரம் இருந்துள்ளார். அங்கு யாரும் இருக்கிறார்களா என பார்க்க விசில் அடித்து பார்த்துள்ளார். ஆனால் எந்த ரெஸ்பான்சும் இல்லாததால், சென்டினல் தீவு கடற்கரைக்கு சென்று இருக்கிறார். 5 நிமிடங்கள் வரை கடற்கரைக்கு சென்ற அவர், தான் கொண்டு வந்த பொருட்களை அங்கேயே வைத்துவிட்டு மணல் உள்ளிட்டவற்றையும் சேகரித்ததோடு, வீடியோவும் எடுத்துவிட்டு தனது படகில் திரும்பியுள்ளார்.
சென்டினல் தீவுக்கு செல்ல முயன்றது ஏன்?
குர்மா தேரா கடற்கரைக்கு இரவு 7 மணியளவில் வந்த அவரை உள்ளூர் மீனவர்கள் பார்த்துள்ளானர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் அமெரிக்க வாலிபரை கைது செய்து இருக்கிறார்கள். சென்டினல் தீவுக்கு செல்ல முயன்றது ஏன்? அவரின் நோக்கம் என்ன? என்பது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். அந்தமானில் அவர் எங்கு தங்கியிருந்தார் என்பது தொடர்பாக விசாரிப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
ஜிபிஎஸ் கருவியை பயன்படுத்தி நன்கு திட்டமிட்டு அமெரிக்க வாலிபர் பயணித்து உள்ளார் எனவும் தற்போது போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியிருக்கிறார். அந்தமான் நிகோபார் தீவுக்கு அவர் வருவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் வந்து இருக்கிறார். அப்போது மிதவை படகு மூலமாக சென்டினல் தீவு செல்ல முயன்று உள்ளார். ஆனால் ஹோட்டல் ஊழியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கற்காலத்தில் வசித்ததை போல
அதேபோல ஜனவரி மாதமும் போர்ட் பிளேர் வந்த இவர், ஒரு மோட்டோர் படகை வாங்கி பராடாங் தீவு பகுதிக்கு சென்று ஜார்வா பழங்குடியினரை சட்ட விரோதமாக வீடியோ எடுத்ததாக சொல்லப்படுகிறது. நார்த் சென்டினல் தீவுக்குச் செல்வதற்கு மத்திய அரசு தடை விதித்து இருக்கிறது. மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும், பழங்குடியினர் பாதுகாப்புப் பகுதி மற்றும் இந்திய வனத்துறை சட்டத்தின் கீழும், இந்த தீவுக்கு வெளி நபர்கள் செல்ல தடை உள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு சுனாமிக்குப் பின் சென்டினல் தீவில் உள்ள சென்டினல் பழங்குடி மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மத்திய அரசு தரவுகள் கூறுகின்றன. உலகின் மற்ற மனிதர்கள் துணை எதுவும் இன்றி கிட்டதட்ட கற்காலத்தில் வசித்ததை போல வாழும் சென்டினல் பழங்குடி மக்கள் மொத்தம் 3 பெண்கள், 12 ஆண்கள் என 15 பேர் வரை மட்டுமே இருக்கலாம் என 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும், சென்டினல் தீவில் மக்கள் தொகை 400 பேர் வரை இருக்கலாம் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.