இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவை சம்பள முரண்பாடுகளை நிவர்த்திப்பதாக சட்ட மாஅதிபர் அறிவிப்பு!
.
9.jpeg)
Colombo (News 1st) இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவையின் சம்பள அளவுகளில் காணப்படும் முரண்பாடுகளை நிவர்த்தித்து, சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாக சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்திற்கு இன்று(29) அறிவித்துள்ளார்.
ஆசிரிய ஆலோசகர்களின் சம்பளங்களில் நிலவும் முரண்பாடுகளை நீக்குமாறு கோரி, அகில இலங்கை ஆசிரிய ஆலோசகர்கள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மனுதாரர் தரப்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி நுவன் போப்பகே, ஆசிரிய ஆலோசகர்களின் சம்பளம், ஆசிரியர்களின் சம்பளத்தை விட மிகக்குறைந்த மட்டத்தில் காணப்படுவதாகவும் இதன் காரணமாக தமது சேவைபெறுநருக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாகவும் மன்றில் சுட்டிக்காட்டினார்.
ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளங்களுக்கிடையே சில முரண்பாடுகள் காணப்பட்டாலும் எதிர்காலத்தில் அந்த முரண்பாடுகளை நிவர்த்திசெய்து சம்பளத்தை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் யுரேஷா டி சில்வா தெரிவித்தார்.
இந்த விடயங்கள் தொடர்பில் மனுதாரர் தரப்பினர் இணக்கம் தெரிவித்ததுடன், அதன் பின்னர் குறித்த மனு தொடர்பான விடயங்களை முடிவுறுத்தவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.
மனுவின் பிரதிவாதிகளாக கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சிலர் பெயரிடப்பட்டிருந்தனர்.