முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்துக்கு களப்பயணம்!
,

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்துக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வியாழக்கிழமை (24.04.2025) களப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டார்.
வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு, வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் எந்திரி வ.ஜெகானந்தன், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.ஜசிந்தன், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பிரதம பொறியியலாளர் எஸ்.ரகுநந்தன், மாந்தை கிழக்கு பிரதேச சபையின் செயலாளர் திருமதி பா.சிவதர்சினி ஆகியோருடன் மாந்தை கிழக்கு பிரதேச சபை தலைமை அலுவலகத்தில் ஆளுநர் கலந்துரையாடல் நடத்தினார்.
மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட வீதிகளின் திருத்தங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
அதன் பின்னர் குத்துப்பால வீதியை ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது நீர்பாசனத் திணைக்கள பொறியியலாளர்களும் இணைந்து கொண்டனர். அந்த வீதியில் அமைந்துள்ள குத்துப்பாலம் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில் மழை காலத்தில் பயணிக்கவே முடியாத நிலைமை இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
பாலத்தின் சேதங்களை தற்காலிகமாக உடனடியாகப் புனரமைப்பதற்கும், பாலத்தை நிரந்தரமாக நிர்மாணிப்பதற்கான வடிவமைப்பை வீதி அபிவிருத்தித் திணைக்களத்தையும் மேற்கொள்ளுமாறு ஆளுநர் பணித்தார்.
அதனைத் தொடர்ந்து பாலிநகர் - பாண்டியன்குளம் பிரதான வீதியை ஆளுநர் பார்வையிட்டார். அந்த வீதி நீர்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமாகவுள்ள நிலையில், அதன் புனரமைப்புப் பணிகளுக்காக பிரதேச சபையிடம் கையளிப்பதற்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. அதைச் சாதகமாக ஆளுநர் கவனத்திலெடுத்து தொடர் நடவடிக்கையை முன்னெடுக்கப் பணிப்புரைவிடுத்தார்.
கரும்புள்ளியான் - மல்லாவி இணைப்பு வீதியையும் ஆளுநர் பார்வையிட்டார். இதன்போது வீதியால் மக்கள் பயணிப்பதற்கு பெரும் அவலங்களை எதிர்கொள்வதையும் நேரில் கண்டார். மூன்றரை கிலோ மீற்றர் நீளமான அந்த வீதியும் நீர்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமாகவுள்ள நிலையில் அதனையும் பிரதேச சபையிடம் கையளித்து புனரமைப்பை முன்னெடுக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆளுநர் இணக்கம் வெளியிட்டார்.
இதன் பின்னர் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சிராட்டிக்குளம் பிரதான வீதியையும் ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார்.
அந்த வீதியில் 8 கிலோ மீற்றர் பிரதேச சபைக்குச் சொந்தமானதாகவுள்ள நிலையில் அதனை வீதி அபிவிருத்தித் திணைக்களத்திடம் கையளித்து அவர்கள் ஊடாக புனரமைப்பை முன்னெடுக்க ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.
மேலும், சிராட்டிக்குளம் அ.த.க. பாடசாலை, பாண்டியன்குளம் மகாவித்தியாலயம் என்பனவற்றையும் ஆளுநர் நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன், அந்தப் பாடசாலைகளின் தேவைகளையும் அவர் கேட்டறிந்தார்.