தமிழீழ விடுதலைக்காக மறவழியில் போராட துணிந்தெழுந்து வந்த போராளி இளைஞர்களில் ஒருவரான தராக்கி சிவராம்! சிவராமைக் கொல்ல வேண்டிய தேவை எவர்களுக்கெல்லாம் இருந்திருக்கிறது?
'தராகி' என்ற புனைபெயரில் ஆங்கிலத்தில் கொழும்பில் இருந்து வெளிவரும் ”The Island” ஏட்டில் தமது முதலாவது கட்டுரையை 1989-இல் எழுதினார்.

சிவராம் 'தராகி' என்ற புனைபெயரில் ஆங்கிலத்தில் கொழும்பில் இருந்து வெளிவரும் ”The Island” ஏட்டில் தமது முதலாவது கட்டுரையை 1989-இல் எழுதினார். அரசியல், போரியல் மற்றும் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக அவரது கட்டுரைகள் அமைந்திருந்தன. உள்நாட்டிலும் அனைத்துலக மட்டத்திலும் அவரது கட்டுரைகள் பெயர்பெற்றிருந்தன.
தர்மரத்தினம் சிவராம் அல்லது தராக்கி சிவராம் ஆகஸ்ட் 11, 1959 – ஏப்ரல் 28, 2005 இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளரும் தமிழ்நெட்டின் பிரதான எழுத்தாளரும் முன்னாள் போராளியுமாவார். கொழும்பு பம்பலப்பிட்டியில் காவல் நிலையம் முன்பாக வெள்ளை நிற கூடுந்து (வான்) ஒன்றில் வந்த ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட இவர் தாக்கப்பட்ட பின்னர் வாகனமொன்றில் கொண்டு வரப்பட்டு இலங்கை பாராளுமன்றத்துக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார். தலையை இலக்கு வைத்து, 9 மில்லி மீட்டர் வகை கைத்துப்பாக்கியினால் இவர் சுடப்பட்டிருந்தார்.
சிவராம் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பில் மகேஸ்வரி, புவிராஜகீர்த்தி தர்மரட்ணம் இணையருக்கு மகனாகப் பிறந்தார். சிவராமின் தந்தையார் கேம்பிறிட்ச் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அவரின் பாட்டனார் சபாபதிப்பிள்ளை தர்மரெட்ணம் (வன்னியனார்) 1938-ஆம் ஆண்டில் மட்டக்களப்பின் இரண்டாவது தெரிவு செய்யப்பட்ட இலங்கை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.
1989 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் யோகரஞ்சனி என்பவரை வாழ்க்கைத் துணையாக ஆக்கிக்கொண்ட சிவராமிற்கு வைஸ்ணவி,வைதேகி என்ற இரு மகள்களும் சேரலாதன் என்ற மகனும் இருந்தனர்.
ஆரம்பக் கல்வியை புனித மிக்கேல் கல்லூரியில் கற்றார். அதைத் தொடர்ந்து கொழும்பில் அக்குவானாஸ் கல்லூரியில் தொடர்ந்தார். பல்கலைக்கழகத்திற்கு தெரிவான இவர் பேராதனைப் பல்கலைகழகத்தில் அனுமதிபெற்றார். செப்ரெம்பர் 1981இல் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார், ஆங்கிலத்தினையும் ஒரு பாடமாகக் கொண்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே அங்கு பயின்ற பின்னர், அரசியல் ஈடுபாட்டினாலும், 1983 ,ல் இடம்பெற்ற இனக்கலவரங்களினாலும் பல்கலைக்கழகக் கல்வியைக் கைவிட்டார்.
கலை மற்றும் இலக்கியத்துடனான தனது ஊடாட்டத்தினால் தன்னிடமிருந்த சமூக வாஞ்சையை இடைவிடாத அரசியல் வாசிப்புகளின் மூலம் கூர்மைப்படுத்தியதன் விளைவாக தமிழின விடுதலையை அளவற்று நேசித்துத் தமிழீழ விடுதலைக்காக மறவழியில் போராட துணிந்தெழுந்து வந்த பல்லாயிரக் கணக்கான போராளி இளைஞர்களில் ஒருவரான தராக்கி சிவராம் அவர்களின் விடுதலைப் பயணமானது அரசியல் வகுப்புகள், போர்ப்பயிற்சிகள், போர்க்களம் என்று நகரும் பெருமளவான போராளி இளைஞர்களின் வாழ்க்கைச் சூழலுடன் முற்றுப்பெற்றுவிடாமல், ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பின் பல்துறைகளிலும் பல மட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் வாய்ப்பை அவருக்கு அளித்ததன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியமாக சிவராம் அவர்களை காலம் தமிழர்களுக்குக் கையளித்திருக்கின்றது என்று கூறுவது மிகையல்ல.
போராளிகளிற்கு அரசியல் வகுப்பெடுப்பது, மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்களை அரசிற்படுத்துவது, போர்ப்பயிற்சி பெறுதல், உலகளாவிய விடுதலைப் போராட்ட வரலாறுகளை கசடறக் கற்பது, தான் சார்ந்த விடுதலை இயக்கத்தின் பேராளராக பல்வேறு கருத்துநிலைகொண்ட விடுதலை அமைப்புகளுடன் உறவினைப் பேணுவது, போர்க்கருவிகளைக் கொள்வனவு செய்வது தொடர்பான வலையமைப்பைக் கட்டுவதற்காக பல்வேறுபட்ட சந்திப்புகளில் கலந்துகொள்வது, தலைமறைவு வாழ்வு, போர்க்களம், அரசியல் ஆய்வு, போரியல் ஆய்வு என்று பரந்துபட்ட தளங்களில் சிவராம் அவர்கள் பெற்ற பட்டறிவுகள், படிப்பினைகள் என்பனவற்றோடு அவரின் நுண்மான் நுழைபுலமும் இணைந்து அவரினை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உயிர்ப்புள்ள இயங்காற்றலாக உருவாக்கியதென்பதை தமிழீழதேசியத் தலைவரால் அவரிற்கு வழங்கப்பட்ட "மாமனிதர்" என்ற உயரிய மதிப்பு உறுதிசெய்கிறது.
மறவழிப் போராட்ட வாழ்விலிருந்து அவர் வெளியேறி ஊடகராகப் பணியாற்றத் தொடங்கிய காலங்களிலிருந்து 1997 வரையான அவரது பயணம் என்பது சிங்களதேசத்தவர்களுடனேயே இருந்தது என்பதை யாவருமறிவர். தமிழர்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனவொடுக்குமுறை குறித்து சிங்கள மக்களிற்கு எடுத்துச்சொல்லி அவர்களின் மனங்களை வென்றிடலாம் என முயன்ற புத்திசீவிகள் என அடையாளப்படுத்திக் கொள்ளும் பலர் போலவே சிவராம் அவர்களும் அந்த முயற்சியில் ஈடுபட்ட காலத்தில், உழைக்கும் சிங்கள மக்களிடம் கூட ஆழமாகப் புரையோடியிருக்கும் மகாவம்சம் என்ற வரலாற்றுப் புரட்டின் தாக்கமானது சிங்கள பௌத்த பேரினவாத அரசை எப்பொழுதும் தூக்கித் தாங்கி தமிழினவழிப்பை சிங்கள ஒடுக்கும் அரசு தங்குதடையின்றிச் செய்ய வழியமைக்கின்றது என்பதைப் புரிந்துகொண்டார். அதன் விளைவாக, சிங்களதேசத்திடம் பேசிப் பயனில்லை என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுக்கும் மறவழிப்போராட்டத்தை ஏற்றுக்கொண்டு மறவழிப்போராட்ட வெற்றிகளை தமிழீழதேச அரசமைக்கும் அரசியற் போராட்ட வெற்றிகளாக மாற்றும் செயன்முறையில் தன்னைப் போன்றவர்கள் பங்காற்ற வேண்டும் என்று உணர்ந்து தன்முனைப்பேதுமின்றி தமிழீழதேச விடுதலைக்காக ஊடகர் என்ற அடையாளத்துடன் பாடாற்றும் உறுதியுடன் முன்வந்த போராளி ஊடகராகவும் ஊடகப் போராளியாகவும் சிவராம் அவர்கள் இருந்தார் என்பதே சிவராம் அவர்கள் அனைவரிலும் தனித்து வெளித்தெரியக் காரணமாயிற்று எனலாம்.
போரியலில் படைத்துறை, இராணுவ அறிவியல் குறித்த ஆய்வுகள், அரசறிவியலில் கோட்பாட்டாய்வு, புவிசார் அரசியல், ஒடுக்குமுறை அரசுகளின் சூழ்ச்சித் திட்டங்கள், உலக வல்லாண்மையாளர்களின் அதிகார அரசியல் தொடர்பான ஆய்வுகள், வரலாற்றில் உலகலாவிய விடுதலைப் போராட்ட வரலாறுகள் தொடர்பான ஆய்வுகள், ஊடக அரசியல் தொடர்பான ஆழமான ஆய்வுகள் என தராக்கி சிவராம் அவர்கள் ஒரு முழுநிறைவான அரசியல் வகுப்புகளை தனது கட்டுரைகள் மூலம் மக்களிற்கு மட்டுமல்லாது போராளிகள், ஆய்வாளர்கள், தமிழர்களின் பேராளர்கள், இயக்கப் பொறுப்பாளர்கள் என அனைவரிற்கும் வழங்கினார் என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள்.
மிக ஆழமான ஆய்வுகளை அனைவரும் புரியும் படியாகவும் வாசிக்கத் தூண்டும் படியாகவும் எழுதுவதில் அவருக்கிருந்த ஈடிணையற்ற ஆற்றல் என்பது அவருக்கிருந்த இலக்கியப் புலமையால் விளைந்தது என்பதை அறியும் போது சிவராம் அவர்கள் ஒரு மலைக்க வைக்கும் பன்முக ஆளுமை என்பதையிட்டு மகிழ்ச்சி பொங்கும் அதேவேளையில் இப்படியொரு ஊடக ஆளுமை விட்டுச்சென்ற வெற்றிடத்தை இட்டு நிரப்ப முடியுமா என்ற ஏக்கமும் கவலையும் எம்மை வருத்துகிறது.
நிலமானிய சமூகத்தின் எச்ச சொச்சங்களும் காலனிய அடிமை மனநிலையும் தமிழ்ச் சமூகத்தில் புரையோடிக் கிடப்பதைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத தராக்கி சிவராம் அவர்கள் தமிழ்ச் சமூகத்தில் ஒரு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்திட வேண்டுமென்ற வேட்கையில் தன்னாலியன்ற அத்தனை முன்னெடுப்புகளையும் செய்ததோடு தனது எழுத்துகளின் மூலம் அப்படியான ஒரு சிந்தனை மாற்றத்தின் தேவையை அனைவரும் உணரவும் செய்தார். தராக்கி சிவராம் அவர்கள் 2002 - 2005 காலப்பகுதியில் எழுதிய கட்டுரைகளாவன தமிழ் மக்களை அரசிற் தெளிவடையச் செய்ய இன்றும் பயனுள்ளனவாக இருக்கின்றன.
அமைதிப்பேச்சினை முன்னெடுக்கவென நோர்வே தமிழீழத்திற்கு வந்த போது "அமெரிக்காவின் கொடிய முகம் இஸ்ரேல், அமைதி முகம் நோர்வே" என்ற தெளிவிலே தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமை இருந்தது. அத்துடன் தமிழர்களின் தன்னாட்சி உரிமையானது பேச்சுமேடையில் பேரம்பேசலுக்குட்படுத்தக் கூடிய விடயமே அல்ல என்பதுடன் அது விட்டுக்கொடுக்கவே முடியாத தமிழர்களின் அடிப்படை உரிமை என்பதில் திடமாக இருந்த தலைமையானது நீண்ட நெடுங்காலமாக போரின் துன்பத்தில் வடுக்களுடன் வாழும் தமிழீழ மக்கள் அதிலிருந்து தேறிக்கொள்வதற்கான போரோய்வுக் காலமாகவே அமைதிப்பேச்சுக் காலத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நோக்குகின்றது என்பதை தனது சந்திப்புகளின் மூலம் புரிந்துகொண்ட சிவராம் அவர்கள் மக்களைக் குறித்துவைத்து இது தொடர்பில் மாறான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த முயன்ற ஊடக அரசியல் குறித்து விழிப்படைந்ததுடன் அந்த இழிநிலை ஊடக அரசியலை முறியடிக்கும் முகமாக கட்டுரைகளை எழுதினார்.
மேற்குலகின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கைகொள்ளுமாறான செய்தியிடல்கள் மூலம் எழுச்சிகொண்ட தமிழீழதேச விடுதலைப் போரில் முன்னணிப்படையாக இருந்த தமிழ் மக்களை வெளியாருக்காகக் காத்திருக்கவும், இனிப் போராட வேண்டியிராது என்ற எதிர்ப்புரட்சி மனநிலையில் இருக்கவும் பழக்கப்படுத்த முயன்ற ஊடக அரசியலை முறியடிக்க "நாம் ஏமாற்றப்பட்டோம் என்ற உணர்வே தமிழ்மக்களைப் போராடத்தூண்டியது" என்று அவர் தனது கட்டுரையில் எழுதிய ஒரு வசனமானது தமிழர்கள் மீண்டும் ஏமாற்றப்படப் போகிறார்கள் என்ற எச்சரிக்கை உணர்வை தமிழ்மக்களிடம் ஏற்படுத்துமளவிற்கு அவரின் எழுத்துகள் மிகவும் ஆழமானதாக இருந்தது.
தமிழ்மக்கட்கான தேவதூதர் போல எரிக்சொல்கெய்மை ஊடகங்கள் உருவகப்படுத்திய போது, பாலஸ்தீன மக்களின் எழுச்சிமிகு விடுதலைப் போராட்டத்தை அமைதிப்பேச்சு எனும் போர்வையில் புகுந்த நோர்வே எப்படி சூழ்ச்சியாக அழிக்க முயன்றது என்பது குறித்தும், பிலிப்பைன்சின் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடிய புதிய மக்கள் படை என்ற இயக்கத்தை நோர்வே அமைதிப்பேச்சுக்கு அழைத்து வலுவிழக்கச் செய்தது என்பது குறித்தும் எழுதி நோர்வே குறித்தும் மேற்குலகின் சூழ்ச்சி வலைப்பின்னல் குறித்தும் தமிழ்மக்களிடம் தனது எழுத்துகள் மூலம் தராக்கி சிவராம் அவர்கள் விழிப்பூட்டினார்.
அமைதிப்பேச்சுக் காலத்தைப் பயன்படுத்தி மேற்குலக, ஜப்பானிய மற்றும் இந்திய மூலதனங்களை இலங்கைத்தீவில் முதலிட ஊக்குவிப்பதன் மூலம் தமது முதலீட்டிற்கான பாதுகாப்பையும் அந்த நாடுகள் உறுதிப்படுத்திக்கொள்ளும் என்பதால் அமைதிப்பேச்சுகள் மூலம் ஏமாறப்போகும் தமிழர்கள் மீண்டும் தமது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க இயலாத சூழல் உருவாகிவிடும் என்ற சூழ்ச்சியோடு சிங்களதேசம் தனது அரசியலை நகர்த்துகின்றது என்பதை அழுத்தந்திருத்தமாக தமிழ்மக்களிற்கு எடுத்துச்சொல்லி உலக வல்லாண்மையாளர்களின் சூழ்ச்சி வலைப்பின்னலைப் புரிந்துகொள்ளும் ஆற்றலுடையோராகத் தமிழ்மக்களை மாற்றும் முயற்சியில் தராக்கி சிவராம் அவர்கள் பெரும் பங்கு வகித்தார்.
நாகலாந்து தேசத்தைப் பொய் வாக்குறுதிகள் மூலம் வன்கவர்ந்த இந்தியாவானது எவ்வாறு அந்த தேசவிடுதலைப் போராட்டத்தை வலுவிழக்கச் செய்ய அமைதிப்பேச்சுகள் எனும் சூழ்ச்சி வலையை விரித்தது என்பது குறித்துத் தனது எழுத்துகள் மூலம் சிவராம் அவர்கள் தெளிவூட்டியதோடு அதே பாங்கில் இந்தியாவனது தமிழீழத்திலும் அமைதிப்பேச்சுக் காலத்தைப் பயன்படுத்தும் என்று எச்சரிக்கையும் செய்தார். அத்துடன் தமிழர்கள் இலங்கைத்தீவில் ஒற்றையாட்சிக்குள் வாழப்பழக வேண்டுமென்பதையே இந்தியா எப்போதும் விரும்பும் என்பதைச் சுட்டிக்காட்டி இந்தியாவின் தமிழினப்பகை குறித்து இயன்றவரை எழுதி வந்தார்.
அரச சார்பற்ற நிறுவனங்களின் (NGO) அரசியல் தமிழர்களின் அரசியல், பொருண்மிய வாழ்வில் எத்தகைய கேடினை விளைவிக்கப் போகிறது என்பதனை லத்தீன் அமெரிக்காவில் கெய்ட்டி தந்த படிப்பினையைத் தெளிவுறச் சுட்டிக்காட்டித் தமிழ்மக்களிடம் பாரிய அரசியல் விழிப்பை சிவராம் அவர்கள் ஏற்படுத்தினார்.
தமிழர்கள் மீது மேற்குலக - இந்திய கூட்டுச் சூழ்ச்சி வலைகள் பின்னப்படும்போதெல்லாம் இந்தோனேசியாவில் ஆச்சே தேசத்திலிருந்து படிப்பினை, கொலம்பியாவில் பார்க் விடுதலை இயக்கத்திடமிருந்து படிப்பினை என பொருத்தமான எடுத்துக்காட்டுகளைக் காட்டித் தமிழ்மக்களிற்கு தனது கட்டுரைகள் மூலம் அரசியல் வகுப்பெடுத்த சிவராமின் அரசியற் போராட்டமும் அவர் தமிழ்மக்களிடம் எதிர்பார்த்த அரசியல் விழிப்பும் தமிழர் அரசியலின் இற்றைத் தேவையாகவும் உள்ளது என்பதைத் தெரிந்து தெளிவதோடு அவரின் எழுத்துகளை ஊன்றிப் படித்து அவை தொடர்பில் உரையாடல்களை மேற்கொள்ள வேண்டியமையானது தமிழ்த்தேசிய அரசியலின் இயங்காற்றலை வேகப்படுத்த இன்றும் இன்றியமையாதது எனத் துணிந்து கூறலாம்.
பன்னாட்டின் நல்லெண்ணத்தைப் பெறுவதென்று காலவிரயம் செய்யாமல் தமிழ் மக்களை அரசியற்படுத்துவதில் அக்கறைகொள்ளுமாறு சிவராம் அவர்கள் வேண்டினார். தமிழ்ச்சமூகமானது தனது அகமுரண்பாடுகளை முனைப்புப்படுத்த இடங்கொடாமல் முற்போக்கான புரட்சிகர மக்கள் கூட்டமாக அணிதிரள வேண்டுமென சிவராம் அவர்கள் வாஞ்சைப்பட்டார். மேற்குலகு மற்றும் இந்தியா அடங்கலான உலக வல்லாண்மையாளர்களின் சூழ்ச்சிகளிற்குப் பலியாகாமல் தமிழ்மக்கள் தமது விடுதலைப் போரட்டத்தைப் புரட்சிகரமாக முன்னெடுக்க வேண்டுமென்ற விழிப்புப்பெற சிவராம் அவர்கள் பாடாற்றினார். சிங்களதேசத்துடன் பேசிப் பயனில்லை என்றும் தமிழீழ விடுதலையே தீர்வு என்பதை சிங்களதேச அரசியலை நாடிபிடித்துப் பார்த்த பட்டறிவுகொண்டு உரக்கக் கூறிவந்தார் சிவராம் அவர்கள். இதனாலே தான் சிங்கள பௌத்த பேரினவாத அரசு சிவராமைக் கடத்திக் கொன்றது.
அமைதிப்பேச்சுக் காலத்தில் இந்தியாவோ, மேற்குலகோ நினைத்திருந்தால் சிவராமைக் காப்பாற்றியிருக்க முடியும். சிங்களதேசத்திற்கு அப்படியான அழுத்தங்களை இந்தியா, மேற்குலகு வழங்கி சிலரைக் கடத்தப்பட்ட பின்பும் காப்பாற்றியிருக்கிறது. ஆனால் சிவராம் கொல்லப்படப் போகிறார் என்று தெரிந்தே அவர்கள் வேடிக்கை பார்த்தார்கள். இதிலிருந்து சிவராமைக் கொல்ல வேண்டிய தேவை எவர்களுக்கெல்லாம் இருந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதனூடாக சிவராம் அவர்கள் ஏன் எமக்குத் தேவை என்பதை ஐயந்திரிபறப் புரிந்துகொள்ளலாம்.
சிவராம் அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்து 20 (28,04,2005) ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். அவரது வெற்றிடத்தைத்தான் நாம் இன்னும் நிரப்பவில்லை. அவர் விட்ட இடத்திலாவது நாம் இருக்கிறோமா?