அரசுப் பேருந்துக்குப் பின்னால் ஓடிய மாணவி! வெளியான அதிர்ச்சி வீடியோ... ஓட்டுநர் 'சஸ்பெண்ட்', நடத்துநர் 'பணி விடுவிப்பு'
அச்சமடைந்த மாணவி பேருந்தை விட்டு விட்டால், தேர்வு எழுதச் செல்ல தாமதமாகிவிடும் எனக் கருதி பேருந்தை பிடித்தபடி பேருந்துடன் சேர்ந்து ஓட்டம்!

வாணியம்பாடியை அருகே 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவி, நிற்காமல் சென்ற அரசு பேருந்தை விரட்டிப் பிடித்து ஏறும் காட்சிகள் வெளியான நிலையில் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டையில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பொதுத்தேர்வு எழுதச் செல்வதற்காக கொத்தகோட்டை பேருந்து நிறுத்ததில் இன்று காலை காத்துக் கொண்டிருந்த நிலையில் பேருந்து நிற்காமல் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி பேருந்தைப் பிடித்தவாறு விரட்டி செல்லும் காட்சிகள் வைரலான நிலையில் தற்போது அந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நாள்தோறும் 30க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் அப் பகுதியில் உள்ள கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மிகுந்த பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. பெரும்பாலும் அந்த பேருந்தில் தான் சுற்றுப் பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்பவர்கள் பயணித்து வருகின்றனர். மேலும், பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடந்து வரும் சூழலில் இந்த பேருந்துகள் மாணவர்கள் தேர்வு எழுதச் சென்று வருவதற்கு பெரும் உதவிக்கரமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பேருந்து நிறுத்ததில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வு எழுத செல்வதற்காக ஆலங்காயம் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லுவதற்கு பேருந்துக்காக காத்துக் கொண்டு இருந்தார். அப்போது கொத்தகோட்டை வழியாக ஆலங்காயம் செல்லும் தடம் எண் 1 சி பேருந்து ஒன்று அந்த வழியாக வந்துள்ளது.
அப்போது மாணவி பேருந்தில் ஏறுவதற்காகத் கைக் காட்டிய போது, ஓட்டுநர் மாணவியை ஏற்றாமல், பேருந்தை நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் அச்சமடைந்த மாணவி பேருந்தை விட்டு விட்டால், தேர்வு எழுதச் செல்ல தாமதமாகிவிடும் எனக் கருதி பேருந்தை பிடித்தபடி நிறுத்துமாறு, கூறியுள்ளார். இதையடுத்து மாணவி பேருந்துடன் சேர்ந்து ஓட்டம் பிடிக்கவே பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியுள்ளார்.
இதையடுத்து மாணவி பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தைப் பிடித்த படி மாணவி ஓடிய காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஓட்டுநர் முனிராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளஆர். மேலும், நடத்துநர் அசோக்குமார், பணியிலிருந்து விடுவித்து ஆம்பூர் போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் கணேசன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, பேசிய ஆம்பூர் அரசுப் போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் கணேசன், “ திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடி வழியாக ஆலங்காயம் செல்லக் கூடிய அரசுப் பேருந்து கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் வேகமாகச் சென்றதால் மாணவி பேருந்தில் ஏற பேருந்தைப் பிடித்தபடியே சிறிது தூரம் ஓடி உள்ளார். அந்த பேருந்து வாணியம்பாடியிலிருந்து, ஆலங்காயம் நோக்கிச் சென்ற 1C அரசு பேருந்து. இந்த சம்பவம் மிகுந்த கவலை அளிக்கிறது. விரைவில் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். இந்த பேருந்தின் ஓட்டுநர் முனிராஜ், பணியிடை நீக்கம் செய்யப்பட்டும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய நடத்துநர் அசோக்குமார், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்” என்றார்.