சுதந்திரக் கட்சிக்கு 15 இலட்சம் வாக்குகள்! கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்திருந்தார்.
ராஜபக்ஷவை சுதந்திர கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு இடைக்காலத் தடையை பெற்றிருக்கிறது.
1.jpeg)
ஒரு பாரம்பரிய கட்சி, இப்போது பல துண்டுகளாக உடைந்து சிதைந்து போய் கொண்டிருக்கிறது.
வரப்போகும் ஜனாதிபதி தேர்தலில், பரிதாபத்துக்குரிய நிலையில் இருப்பது, சிறிலங்கா சுதந்திரக் கட்சி தான். சுதந்திரக் கட்சிக்கு 15 இலட்சம் வாக்குகள் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடிக்கடி கூறுவார் .அந்த 15 இலட்சம் வாக்குகளை பேரம் பேசித் தான், அவர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்திருந்தார். தங்களின் 15 இலட்சம் வாக்குகளால் தான், அவர் வெற்றி பெற்றார் என்றும், மைத்திரிபால சிறிசேன பின்னர் கூறியிருந்தார்.
இப்படிப்பட்ட ஒரு பாரம்பரிய கட்சி, இப்போது பல துண்டுகளாக உடைந்து சிதைந்து போய் கொண்டிருக்கிறது.
இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னர், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, 1951 ஆம் ஆண்டு எஸ் டபிள்யூஆர் டி பண்டாரநாயக்க, சிறிலங்கா சுதந்திர கட்சியை உருவாக்கினார்.அதன் பின்னர் அந்தக் கட்சி பல எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும் சந்தித்து இருக்கிறது. ஆனால் இதுபோன்ற நிலை முன்னெப்போதும் ஏற்பட்டதில்லை.
எஸ் .டபிள்யூ.ஆர் .டி பண்டாரநாயக்க , சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, என 2005ஆம் ஆண்டு வரை, கிட்டத்தட்ட, 55 ஆண்டுகள் பண்டா குடும்பத்தின் கைகளிலேயே சுதந்திர கட்சியின் தலைமை இருந்து வந்தது.
அதற்குப் பின்னர், மஹிந்த ராஜபக்ஷவிடமும், மைத்திரிபால சிறிசேனவிடம் அந்த தலைமைப் பதவி சென்றது.
இப்போது சிறிலங்கா சுதந்திர கட்சியின் உண்மையான தலைவர் யார் என்று, அந்தக் கட்சியில் உள்ளவருக்கே தெரியாது.
மஹிந்த ராஜபக்ஷ அதன் தலைவராக இருந்த காலகட்டத்தில், ஜனாதிபதி பதவியும், பாராளுமன்றத்தின் பெரும்பான்மையும் சுதந்திரக் கட்சியிடமே இருந்தது.
ஆனால், மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவரான பின்னர், அந்தக் கட்சி சாதிக்கவில்லை.கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக கொண்டு வருவதில் பங்களித்தது. அவரது அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டது. இதற்கு அப்பால் வேறு எதையும் சாதிக்கவில்லை.
இப்போது சிறிலங்கா சுதந்திர கட்சி யாருடைய கட்டுப்பாட்டில் யாருடைய தலைமைத்துவத்தில் இயங்குகிறது என்ற குழப்பம் எல்லோருக்கும் இருக்காது.
இப்படி சிறிலங்கா சுதந்திர கட்சியை பிரித்துப் போட்டதில் மைத்திரிபால சிறிசேனவுக்கே பெரும் பங்கு உள்ளது.பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால், அதன் பாராளுமன்ற உறுப்பினர்களை தனது கைக்குள் வைத்திருக்க முடியவில்லை என்பது முதல் பலவீனம்.
இதனால் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒரு பகுதியினர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் இணைந்து கொண்டனர்.
அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க முடியாத நிலையில், மைத்திரியின் தலைமைத்துவம் இருந்தது.
அப்போது கட்சி கிட்டதட்ட இரண்டு பட்ட நிலையில் காணப்பட்டது.மைத்திரிபால சிறிசேன திடீரென ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக கூறத் தொடங்கிய பின்னர், கட்சி பல துண்டுகளாக சிதறிப்போனது.
மைத்திரிபால சிறிசேன ஒரு முறை தான், ஜனாதிபதியாக இருந்தவர். அதனால் மீண்டும் அவர் போட்டியிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்ளப் போவதாக கூறினார். இது உண்மையோ அல்லது பிரதான கட்சிகளை பேரம் பேசுவதற்காக அவிழ்த்து விட்ட கதையோ தெரியாது. ஆனால் மைத்திரி எவ்வாறு கூறியதும் ஏனைய கட்சிகள் உசாராக தொடங்கின.
அவ்வாறு உசாரான தரப்புகளில் ஒருவர் தான், சந்திரிகா குமாரதுங்க. பண்டா குடும்பத்தில் உள்ள கடைசி அரசியல் வாரிசு அவர் தான்.
அவருக்குப் பின்னர் அவரது மகன் அல்லது மகள் அரசியலுக்கு வருவார்களா என்பது நிச்சயம் இல்லை. சந்திரிகாவினாலும் இனிமேல் ஜனாதிபதி பதவிக்கு வர முடியாது. ஆனால் அரசியலில் அவர் அவ்வப்போது தனது இருப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக மைத்திரிபால சிறிசேனாவை பொது வேட்பாளராக கொண்டு வந்தவர் சந்திரிகா. பின்னர் சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பு அவரது கைக்கு வருவதற்கும் சந்திரிகாவே காரணம்.
ஆனால் ஒரு கட்டத்தில் சந்திரிகாவையே கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடும் அளவுக்கு மைத்திரி செயற்பட்டார்.
அந்த சீற்றத்தில் இருந்த சந்திரிகா, மைத்திரி மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்தவுடன், கட்சியின் தலைமைப் பதவியில் அவர் செயற்படுவதற்கு தடைகோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அவர் மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட பொதுச் செயலாளர் ஆகியோர் அந்தப் பதவிகளில் செயற்படுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
அந்தத் தடை ஒவ்வொரு தவணையின் போதும் நீடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான நிலையில் சந்திரிகா தரப்பு ஒன்று கூடி, சிறிலங்கா சுதந்திர கட்சியில் பதில் தலைவராக நிமால் சிறிபால டி சில்வாவையும், பொதுச்செயலாளராக துமிந்த திசநாயக்கவையும் தெரிவு செய்தது.
உடனடியாக மைத்திரி தரப்பு, இந்த நியமனத்துக்கு தடை கோரி நீதிமன்றம் சென்றது. ஆனால் இதுவரை அந்த தடையை அவர்களால் பெற்றுக் கொள்ள முடியவில்லை.
தனக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை நீக்கப்படும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்த்த மைத்திரிபால சிறிசேனவுக்கு, போகப் போக அது சரிவராது என்று உணர்ந்து கொண்டார். இந்த நிலையில் அவர் அடுத்த ஆட்டத்தை தொடங்கினார் . கட்சியின் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்
பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் நீதி அமைச்சராக உள்ள விஜயதாச ராஜபக்ஷவை கட்சியின் தலைவராக முன்மொழிந்தார்.
மைத்திரிக்கு ஆதரவான தரப்பினர் ஒன்று கூடி அந்த நியமனத்தை உறுதி செய்தனர். அது மட்டுமன்றி சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்ஷ போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
உடனடியாக சந்திரிகா தரப்பு நீதிமன்றத்தில் சென்று விஜயதாச ராஜபக்ஷவை சுதந்திர கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு இடைக்காலத் தடையை பெற்றிருக்கிறது. இப்போது சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு பலபேர் தலைவர். மைத்திரிபால சிறிசேன, விஜயதாச ராஜபக்ஷ, நிமால் சிறிபால டி சில்வா என்று மூவர் இருக்கிறார்கள்.
ஆனால் இந்த மூவருடைய நியமனங்களும் சட்ட ரீதியாக செல்லுபடியானதா என்பது கேள்விக்குறி.கட்சியின் தலைமை இப்படி இருக்க, சிறிலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் பல துண்டுகளாக சிதறிப் போயிருக்கிறார்கள்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திசநாயக்க போன்றவர்களைக் கொண்ட ஒரு அணி, ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் நிலைப்பாட்டுடன் இருக்கிறது. மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அணி, விஜயதாச ராஜபக்ஷவை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தம் நிலைப்பாட்டுடன் இருக்கிறது.
இந்த இரண்டு தரப்புகளுகளுடனும் முரண்பட்டிருக்கும், தயாசிறி ஜயசேகர, டலஸ் அழகப்பெரும உடன் இணைந்து சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவது குறித்து பேச்சுக்களை நடத்துகிறது. இது இப்படி இருக்க, சிறிலங்கா சுதந்திர கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே ஒரு உறுப்பினரான அங்கஜன் இராமநாதன், இந்த வாரம் முழுவதும் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து நிகழ்வுகளில் பங்கேற்றுக் கொண்டிருந்தார்.
சஜித் பிரேமதாச யாழ்ப்பாணத்தில் பங்கேற்ற பொது நிகழ்வுகளில் அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக கலந்து கொண்டார் என்று கூறலாம்.ஆனால், நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்துக்குச் சென்ற போதும், அவருடன் இணைந்து கொண்டதற்கு அதே அர்த்தம் பொருந்தாது.
இது அவர்கள், அரசியல் ரீதியாக நெருக்கமடைந்திருப்பதை காட்டுகிறது. சிறிலங்கா சுதந்திர கட்சி ஒரு கட்சியாக இருந்தாலும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி தேர்தலில் மூன்று தரப்புகளாக இருப்பது தெளிவாக தெரிகிறது.
இந்த நிலையை உருவாக்கியது மைத்திரிபால சிறிசேன தான். அதற்கு காரணமாக இருந்தார் என்ற பழியில் இருந்து சந்திரிகாவும் தப்பிக்க முடியாது. இப்படி பல துண்டுகளாக, கட்சி சிதைந்து போய் இருக்கும் நிலையில் அந்தக் கட்சியின் வசம் இருப்பதாக கூறப்படும் 15 இலட்சம் வாக்காளர்களும், யார் பக்கம் நிற்கிறார்கள்? நிற்கப் போகிறார்கள்?