கப்டன் அங்கயற்கண்ணி. என்னும் இயக்கப் பெயர் கொண்ட துரைசிங்கம் புஸ்பகலா.
சிறு படகில் சென்றால்கூட ராடரில் தெரிந்துவிடும்.

கப்டன் அங்கயற்கண்ணி.
இவர் சுமந்து சென்ற வெடி பொருள் 50 கிலோ வுக்கு மேல் இருக்கும். ஆனால் அவரின் எடையோ 60 கிலோதான்.சிறு படகில் சென்றால்கூட ராடரில் தெரிந்துவிடும் என்பதால் இந்த வெடி பொருட்களுடன் அவர் நீந்தி சென்ற தூரம் கிட்டத்தட்ட 17 மைல்கள் என்கிறார்கள்.அவர் எட்டு மணி நேரம் நீந்தி சென்று தாக்குதலை மேற்கொண்டார். அடுத்த சில மணி நேரங்களில் தான் மரணமடையப் போகிறேன் என்று தெரிந்தும் அவரது கால்கள் சோரவில்லை. கைகள் செயல் இழக்கவில்லை. இலக்கை அடைந்தார்.
326 அடி நீளம் , 51 அடி அகலம். 6300 தொன் எடை கொண்ட அதி நவீன ராடர் பொருத்தப்பட்ட போர்க்கப்பலை மூழ்கடித்தார். இதைப் படிக்கும்போது இந்த வீர தீரச் செயலை செய்தவர் ஒரு இளைஞனாக இருப்பான் என்றே பலரும் நினைப்பார்கள். ஆனால் ஆண்களே வியக்கும் இந்த சாதனையைப் புரிந்தவர் ஒரு பெண். அவர் பெயர் புஸ்பகலா. அப்போது அவரின் வயது 21.
கப்டன் அங்கயற்கண்ணி. என்னும் இயக்கப் பெயர் கொண்ட துரைசிங்கம் புஸ்பகலா (10 மே 1973 - 16 ஆகஸ்ட் 1994, கொக்குவில், மேற்கு - யாழ்ப்பாணம்) தமிழீழ விடுதலைப் புலிகளில் முக்கிய உறுப்பினராக இருந்து செயல்பட்டவர். இவர் விடுதலைப் புலிகளின் முதல் பெண் கரும்புலி ஆவார்.
பெண்கள் பல்லிக்கும் கரப்பான் பூச்சிக்கும் பயந்தவர்கள் என்ற கதையே பெரும்பாலும் நாம் கேட்டு வருகிறோம். ஆனால் அவர்கள் பலமிக்கவர்கள் என்பதை கூறும் கதைகள் தந்திரமாக மறைக்கப்பட்டு வருகின்றன. இனி நாம் புஸ்பகலாக்களின் கதைகளை கூறுவோம். பெண்கள் பலவீனமானவர்கள் இல்லை !
பயிற்சிகளும், பணிகளும், சாதனைகளும்
- இவரிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது. தொடக்கத்திலிருந்தே இவர் குழுத் தலைவியாக இருந்து வந்தார்.
- விளையாட்டில் இவர் திறனுடன் விளங்கினார். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளுக்கிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தார்.
- கடற்புலிகள் மகளிர் படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி பெற்றார்..
- எட்டு மணித்தியாலம் இருபத்தேழு நிமிடங்களில் பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்து சாதனை நிகழ்த்தினார்.
- வரலாற்றுப் புகழ் மிக்க 'தவளை நடவடிக்கை' யின் போது லெப்.கேணல் பாமாவின் குழுவில் ஒருவராகக் கடற்கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார்.
ஆகஸ்ட் 16, 1994 இல் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்து நின்ற இலங்கைக் கடற்படையினரின் வடபிராந்திய தலைமை கட்டளையிடும் தாய்க்கப்பல் மீது கரும்புலித் தாக்குதல் நடாத்தி கப்பலை தகர்த்து வீரச்சாவடைந்தார். இவர் வெடித்த வெடியோசை யாழ் குடா நாட்டில் பல மைல்கள் தொலைவிற்கு மிக அதிர்வுடன் கேட்க கூடியதாக இருந்தது.
குறிப்பு – புஸ்பகலா உயிரோடு இருந்திருந்தால் இன்று (10.05.2024) தனது 51வது பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பார்.