'மீனுக்கு எல்லை எதுன்னு தெரியுமா சார்...'? கடலை கடந்து வெளிவராத மீனவர்களின் கண்ணீர் கதை!
இலங்கை மீனவர்களும் நாங்களும் அண்ணன், தம்பி போலத் தான் இருக்கோம்.

உயிரைப் பணயம் வைத்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கை கடற்படையால் சந்திக்கும் கொடுமைகள் குறித்த பிரத்யேக செய்தித்தொகுப்பு
கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இதற்காக மிகப்பெரிய சவால்களையும், ஆபத்துகளையும் மீனவர்கள் ஒவ்வொரு நாளும் சந்திக்கின்றனர். எந்த நொடியிலும் இயற்கை சீற்றங்களை எதிர் கொள்ள வேண்டிய 'திக்... திக் ...' மனநிலையில், உயிரைப் பணயம் வைத்து மீனவர்கள் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர்.
மீன்பிடி தொழிலில் இது போன்ற பிரச்னைகள் வழக்கம் தான் என்றாலும், தமிழ்நாடு மீனவர்களுக்கு இலங்கை கடற்படையை எதிர்கொள்வதே மிகப் பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. எல்லை தாண்டியதாக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. அது மட்டுமின்றி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தகைய சவால்களை மீறி தமிழ்நாட்டு மீனவர்கள், வாழ்வாதாரத்திற்காக மீன்பிடி தொழிலை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
கடந்த 2020ம் முதல் 2024-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மட்டும் மொத்தம் 1,194 தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதே காலகட்டத்தில், இலங்கை கடற்பகுதியில் பதிவான சம்பவங்களில் 7 தமிழ்நாடு மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை மார்ச் மாத இறுதி வரை 140 ஆக உள்ளது.
இதனிடையே கடந்த மார்ச் 14, 15 ஆம் தேதிகளில் கச்சத்தீவில் நடைபெற்ற புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவுக்கு செய்தி சேகரிக்க ஊடகக் குழு ராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் சென்றது. 100-க்கும் மேற்பட்ட மீன் பிடி படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட இந்திய பக்தர்கள் மீன்பிடி படகுகளில் பயணிக்க, அவர்களுடன் நாமும் ஒரு மீன் பிடி படகில் பயணித்தோம். வழக்கமான சோதனைகள் நிறைவடைந்து படகு கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த போது படகை இயக்கிக் கொண்டிருந்த மீனவர் ராஜூவிடம் மீன் பிடிப்பது தொடர்பாக பேச்சுக் கொடுத்தோம். அப்போது அவர்கள் சொன்ன ஒவ்வொரு தகவல்களும் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கின.
இலங்கை மீனவர்களும் நாங்களும் அண்ணன், தம்பி போலத் தான் இருக்கோம். கடலுக்குள்ள போகும் போதே அங்குள்ள மீனவர்களுக்கு போன் பண்ணி சொல்லிருவோம். அவங்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு தான் போவோம். கடந்த மாதம் இப்படி தான் நான்கு படகுல மீன் பிடிக்க போனோம். திடீர்ன்னு இலங்கை நேவி வந்திருச்சு. நாங்க வலையை அறுத்து விட்டுட்டு வந்துட்டோம், ஒரு வலை 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கினோம். அது எங்களுக்கு இழப்பு தான். இது மாதிரி நிறைய சம்பவம் நடந்திருக்கு. கைது பண்ணிட்டு போனதும் எங்க மீனவர்களை ஜெயிலில் அடைத்து விட்டு கொஞ்ச நாளில் எங்க படகுகளையும் ஏலம் விட்டுடுறாங்க. கடன் போட்டு வாங்குன படகுகளும் போயி நாங்களும் ஜெயில்ல இருக்க வேண்டிய நிலை இருக்கு. மீனவர்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை.
அண்மையில் கூட ஒரே நேரத்தில் 33 பேரை பிடிச்சுட்டு போய்ட்டாங்க. இந்த தொழிலை நம்பித் தான் நாங்க இருக்கோம். எங்க பிரச்சனையை அரசாங்கம் புரிந்து கொண்டு விரைவில் தீர்க்கணும்' என்றார்.
மீனுக்கு எல்லை போட முடியுமா?
''கடலுக்கு செல்லும் ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு திரும்பி வருவோம்மான்னு யோசிச்சிக்கிட்டே போறோம். இந்த கடலை நம்பி தான் 40 லட்சம் ரூபாய் போட்டு போட் வாங்கியிருக்கோம், ஆனால் கடலுக்குள் சென்றால் இலங்கை நேவி எங்கள பிடிச்சுட்டுப் போயிடுறாங்க, எப்போ இந்த பிரச்னை தீரும்ன்னே தெரியல? ராமேஸ்வரம் கடல்ல மீன்கள் குறைஞ்சிருச்சு. ரொம்ப தூரம் போனா தான் மீன்கள் கிடைக்கும், அப்படி போனால் இலங்கை நேவிகாரங்க வந்து எல்லை தாண்டி வந்துட்டீங்கன்னு சொல்லி துப்பாக்கிமுனையில எங்கள பிடிச்சுட்டு போயிடறாங்க, எங்களுக்கு எல்லை போடலாம். ஆனால் மீனுக்கு எல்லை போட முடியுமா?
ஒரு நாள் இங்கு இருக்கும். மறுநாள் அங்கு இருக்கும், மீன் பிடிப்பது என்பது லாட்டரி அதிர்ஷ்டம் மாதிரி தான். வந்தால் லாபம் இல்லைன்னா, வெறும் கையோடு தான் திரும்ப வரணும். ஒரு நாள் கடலுக்குள் போகனும்னா 75,000 ரூபாய்க்கு டீசல் அடிக்கணும். ஆட்களுக்கு கூலி கொடுக்கணும். மீன் கிடைச்சா தான் இவற்றையெல்லாம் ஈடுகட்ட முடியும். மீன் கிடைக்க ஆழ்கடலுக்கு தான் போகணும். போனா திரும்ப வருவோமான்னு தெரியல. எங்க வாழ்க்கை அப்படி இருக்கு, இரண்டு நாட்டு அரசுகளும் பேசி ஒரு முடிவு எடுக்கணும்.
இலங்கை மீனவர்களும் நாங்களும் அண்ணன், தம்பி போலத் தான் இருக்கோம். கடலுக்குள்ள போகும் போதே அங்குள்ள மீனவர்களுக்கு போன் பண்ணி சொல்லிருவோம். அவங்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு தான் போவோம். கடந்த மாதம் இப்படி தான் நான்கு படகுல மீன் பிடிக்க போனோம். திடீர்ன்னு இலங்கை நேவி வந்திருச்சு. நாங்க வலையை அறுத்து விட்டுட்டு வந்துட்டோம், ஒரு வலை 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கினோம். அது எங்களுக்கு இழப்பு தான். இது மாதிரி நிறைய சம்பவம் நடந்திருக்கு. கைது பண்ணிட்டு போனதும் எங்க மீனவர்களை ஜெயிலில் அடைத்து விட்டு கொஞ்ச நாளில் எங்க படகுகளையும் ஏலம் விட்டுடுறாங்க. கடன் போட்டு வாங்குன படகுகளும் போயி நாங்களும் ஜெயில்ல இருக்க வேண்டிய நிலை இருக்கு. மீனவர்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை.
அண்மையில் கூட ஒரே நேரத்தில் 33 பேரை பிடிச்சுட்டு போய்ட்டாங்க. இந்த தொழிலை நம்பித் தான் நாங்க இருக்கோம். எங்க பிரச்சனையை அரசாங்கம் புரிந்து கொண்டு விரைவில் தீர்க்கணும்' என்றார்.
இரு நாட்டு மீனவர்களின் பாசம்!
கச்சத்தீவுக்கு அருகில் செல்லும் போதே இந்திய கப்பல் படையும், இலங்கை கப்பல் படையும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்கள். இருவரும் படகில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என கணக்கு எடுத்தார்கள். இந்த பணி முடிந்தவுடன் கச்சத்தீவுக்குள் படகு சென்றது. அங்கிருந்த இலங்கை கப்பல் படை அனைவரையும் வரவேற்று, படகில் வந்தவர்களை சரி பார்த்து விட்டு அடையாள அட்டைகளை பரிசோதித்து விட்டு அந்தோணியார் கோயிலுக்கு செல்ல அனுமதி அளித்தார்கள். சுற்றிலும் மரங்கள் சூழ்ந்து கடல் ஓரத்தில் புனித அந்தோணியார் கோயில் அமைந்திருந்தது. அனைத்து இடத்திலும் இலங்கை போலீசாரும், இலங்கை கடற்படை வீரர்களும் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.
மகிழ்ச்சியாக வரவேற்ற இலங்கை தமிழ் மீனவர்கள்!
அங்கு சென்ற போது, நம்முடன் வந்த இந்திய மீனவர்களை பார்த்ததும் இலங்கை மீனவர்கள் சந்தோஷத்துடன் ஓடி வந்து வரவேற்று கட்டி தழுவிக் கொண்டனர். பின்னர் அவர்கள் குடும்ப உறுப்பினர்களின் நலன்கள் குறித்தும், இந்திய அரசியல், தமிழ்நாட்டு அரசியல் குறித்தும் உரையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது இலங்கை மீனவர் ஜார்ஜ் நம்மிடம் பேசும் போது, ''தமிழ்நாடு மீனவர்கள் கடலுக்குள் வரும் போதே எங்களுக்கு என்ன வேணும்னு? கேட்டு வாங்கி வருவாங்க. மீன் பிடிச்சுட்டு போன பின்னர் மீண்டும் வர கால தாமதமானால், நாங்க போன் போட்டு ஏன் வரலைன்னு கேட்போம். இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதில் எங்களுக்கு ஆட்சேபனையும் இல்லை. ஒரு சிலர் இரட்டை மடி வலை போடுவதால் எங்கள் பகுதியில் மீன் வளம் குறையுது. மற்றபடி நாங்க ஒற்றுமையா தான் இருக்கோம். இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை விரைவில் தீர்க்க வேண்டும்'' என்றார்.
'பேச்சுவார்த்தை அவசியம்'
இது தொடர்பாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் சங்க தலைவர் ஜேசுராஜ் கூறுகையில், ''இந்த பிரச்சனை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும். இந்திய மற்றும் இலங்கை அரசு அதற்கான முன்னெடுப்புகளை செய்ய வேண்டும்'' என கோரிக்கை வைத்தார்.
நீருக்குள் அழும் மீன்களின் கண்ணீர் வெளியே இருப்பவர்களுக்கு தெரியாது என்பார்கள். அது போல, கடலுக்கு செல்லும் நமது மீனவர்களின் அழுகையும் வெளியே தெரிவதில்லை. இந்த பிரச்சனைக்கு இரு நாட்டு அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்திய மீனவர்களின் நெடுநாள் எதிர்பார்ப்பாக உள்ளது.