பொறுப்புக்கூறல் மாத்திரம் இலங்கையின் நீண்டகாலச் சவால்களுக்கு முடிவைக் கொண்டுவராது - அரசியல் தீர்வுக்கு முன்னுரிமை கொடுக்க அரசாங்கத்தை வலியுறுத்துகிறது தேசிய சமாதானப் பேரவை!
பொறுப்புக்கூறலுக்கான நடவடிக்கைகளினால் மாத்திரம் நாட்டின் நீண்டகால சவால்களுக்கு தீர்வுகளைக் கொண்டுவர முடியாது!

பொறுப்புக்கூறலினால் மாத்திரம் இலங்கையின் நீண்டகாலச் சவால்களுக்கு தீர்வைக் கண்டுவிட முடியாது என்று கூறியிருக்கும் தேசிய சமாதானப் பேரவை இனமோதலுக்கு வழிவகுத்த ஆழமான காரணிகளைக் கையாளக்கூடிய அரசியல் தீர்வொன்று அவசியமாகும் என்று வலியுறுத்தியிருக்கிறது.
இது தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் தேசிய சமாதானப் பேரவை அதில் கூறியிருப்பதாவது ;
மூன்று முன்னாள் இராணுவ தலைவர்கள் உட்பட நான்கு இலங்கையர்களுக்கு எதிராக தடைகளை விதிப்பதற்கு ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கம் எடுத்த தீர்மானம் முக்கியமான ஒரு விவாதத்தை மூளவைத்திருக்கிறது. உலகின் வேறு பகுதிகளில் பாரிய வன்முறைகள் தடுக்கமுடியாத அளவுக்கு தொடருகின்ற ஒரு நேரத்தில் பிரிட்டன் எடுத்திருக்கும் இந்த தீர்மானம் வேவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு நியமங்கள் பிரயோகிக்கப்படுவது பற்றி விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
உண்மையைக் கண்டறிடதிலும் பொறுப்புக்கூற வைப்பதிலும் உள்ள நாட்டம் சகலருக்கும் ஒரே மாதிரியானதாகவும் அரசியல் நோக்கங்கள் இல்லாததாகவும் இருக்க வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை பக்கச்சார்பற்ற ஒரு சிவில் சமூக அமைப்பு என்ற வகையில் வலியுறுத்திக் கூறுகிறது.
குறிப்பிட்ட ஒரு தரப்புக்கு தெரிவு செய்யப்பட்ட முறையில் பிரயோகிக்கப்படுவதாகநீதி இருக்க முடியாது. இன்று பாலஸ்தீனத்திலும் உக்ரெயினிலும் இன்று இடம்பெறுவதைப் போன்று 16 தொடக்கம் 37 வருடங்களுக்கு முன்னர் அத்துமீறல்கள் இடம்பெற்ற முள்ளிவாய்காலுக்கும் பட்டலந்தவுக்கும் ஒரேமாதிரியான நிதி அவசியமாகிறது.
இலங்கையில் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஊடாக பாடுபடுவதாக ஐக்கிய இராச்சியம் கூறியிருக்கிறது. இலங்கையின் மனித உரிமைகள் சீர்திருத்தங்களை ஆதரிப்பதிலும் உறுதிப்பாடு கொண்டிருப்பதாக அது கூறுகிறது. தீர்வு காணப்படாத மனித உரிமைகள் பிரச்சினைகள் நீண்டகால விளைவுகளைக் கொண்டிருக்கின்றன என்பதை தேசிய சமாதானப் பேரவை ஏற்றுக்கொள்கிறது.
ஜனதா விமுக்தி பெரமுன (ஜே வி.பி. ) கிளர்ச்சி யுகத்தின் பட்டலந்த சர்ச்சை அண்மையில் மீண்டும் வெளிக்கிளம்பியிருப்பது வரலாற்று அநீதிகள் எளிதில் மறைந்துபோய் விடாது என்பதை தெளிவாக வெளிக்காட்டுகிறது. அத்துடன் மனித உரிமைகள் தொடர்பான அக்கறைகளை விரிவான ஒரு முறையில் இலங்கை கையாளத் தவறினால் மேலும் பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய ஆபத்து இருக்கிறது.
மனித உரிமைகள் அக்கறைகளின் விளைவாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி.பிளஸ் வர்த்தக சலுகைகளை இழக்கக்கூடிய சாத்தியப்பாடு இலங்கையின் பொருளாதார உறுதிப்பாட்டை அச்சுறுத்துகிறது. நம்பகத்தன்மை வாய்ந்த அவசர நடவடிக்கைகளின் அவசியத்தை இது தெளிவாக உணர்த்துகிறது.
ஆனால், பொறுப்புக்கூறலுக்கான நடவடிக்கைகளினால் மாத்திரம் நாட்டின் நீண்டகால சவால்களுக்கு தீர்வுகளைக் கொண்டுவர முடியாது. இலங்கை அதன் இனமோதலுக்கான மூலவேர்க் காரணிகளை கையாளக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காணவேண்டியது அவசியமாகிறது.
இனப்போரும் கடந்த காலத்தைய பாரிய வன்செயல்களும் வெறுமனே குற்றவியல் செயற்பாடுகள் அல்ல, அவை ஒரு பெரிய அரசியல் போராட்டத்தின் ஒரு அங்கமாகும். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்கு சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு அப்பால், நீண்டகால உறுதிப்பாட்டுக்கு அடித்தளத்தை அமைக்கக்கூடிய பரந்தளவிலான அரசியல் கருத்தொருமிப்பு தேவைப்படுகிறது.
சகல சமூகங்களும் அரவணைக்கப்படுவதையும் நியாயமான அதிகாரப்பகிர்வையும் உறுதிசெய்வதற்கு பேச்சுவார்த்தை மூலமான இணக்கத்தின் அடிப்படையில் அரசியல் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படாவிட்டால், பொறுப்புக்கூறலை நோக்கிய முயற்சிகள் முழுமை பெறப்போவதில்லை என்பதுடன் பிளவுகள் மேலும் ஆழமாகக்கூடிய ஆபத்தும் உருவாகும்.
பேச்சுவார்த்தை மூலமாக அரசியல் இணக்கத்தீர்வு ஒன்றுக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலமாக தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேசிய சமாதான பேரவை அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
வெளிப்படைத்தன்மை மற்றும் பரந்தளவு பங்கேற்பு மீது கட்டியெழுப்ப்பப்படக்கூடியதும் அரசியல் சூழ்ச்சிகளில் இருந்து விடுபட்டதுமான உண்மை ஆணைக்குழு ஒன்றை அமைப்பது மிகவும் முக்கியமான ஒரு நடவடிக்கையாக அமையும். ஆனால், அது அரசியல் கருத்தொருமிப்பில் வேரூன்றிய பரந்த ஒரு நல்லிணக்கச் செயன்முறையின் அங்கமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
அத்தகைய ஒரு செயன்முறை எந்தளவுக்கு தாமதிக்கப்படுகிறதோ அந்தளவுக்கு (பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பரந்தளவிலான மக்கள் மத்தியில்) நீதி தொடர்பில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டில் சந்தேக உணர்வை அதிகரிக்கச் செய்யும்.
அத்துடன் பொறுப்புக்கூறலில் இருந்து நழுவுவதற்கான அரசாங்கத்தின் முயற்சியாகவும் நோக்கப்படும். பரந்தளவிலான அரசியல் சீர்திருத்தச் செயன்முறை ஒன்றிற்குள் ஒருங்கிணைக்கப்படுகின்ற -- நன்கு கட்டமைக்கப்பட்ட உண்மை ஆணைக்குழு ஒன்றே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைக் கிடைக்கச் செய்யும் என்பது மாத்திரமல்ல , நிலைபேறான சமாதானம், நல்லிணக்கம் மற்றும் தேசிய ஐக்கியத்துக்கும் வழிவகுக்கும் என்பது எமது உறுதியான நம்பிக்கையாகும்.