வடக்கின் கல்விநிலை வீழ்ச்சியடைந்துள்ளதாக பிரதமர் தெரிவிப்பு!
அரசாங்கத்திற்கு பொருத்தமான எங்களுடன் இணைந்து செயற்படக்கூடிய சபைகளை மக்கள் உருவாக்கவேண்டும்.

வடமாகாணத்தின் கல்வி இன்று பாதிப்படைந்து கீழ் நிலையில் உள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை வளப்பற்றாக்குறை என்பன நாடு முழுவதும் இருந்தாலும் வடக்கில் கூடுதலாக உள்ளது. அவற்றை நிவர்த்தி செய்யவேண்டியதுடன் புதிய கல்வி சீர்திருத்தம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
வவுனியாவிற்கு விஜயம் செய்த அவர் உக்கிளாங்குளம் பகுதியில் தேர்தல் பிரசாரக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
வடக்கில் நான் சென்ற இடமெல்லாம் மக்கள் தமது அன்பையும் ஆதரவையும் வழங்கினர். உண்மையில் இந்த பயணம் எனது குடும்பத்தாருடன் கூடி மகிழ்ந்ததுபோல இருப்பதை உணர்கிறேன்.
நாட்டின் பொருளாதாரத்தை கிராம மட்டத்தில் இருந்து அபிவிருத்தி செய்யவேண்டும். நாட்டையும் அபிவிருத்தி செய்யவேண்டும். எங்கள் பிள்ளைகளின் கல்வியை அபிவிருத்தி செய்ய வேண்டும்.
கிராமங்களில் உள்ள சிறிய வீதிகள் திருத்தப்படவேண்டியிருக்கிறது. இந்த வவுனியா மாவட்டம் பெரிய நகரமாக உள்ளது. அதன் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவேண்டும். எதிர்காலத்தில் உல்லாச பிரயாணிகளை இங்கு வரவழைக்கவேண்டிய முறைமையை நாம் உருவாக்குவோம்.
எனவே, அரசாங்கத்திற்கு பொருத்தமான எங்களுடன் இணைந்து செயற்படக்கூடிய சபைகளை மக்கள் உருவாக்கவேண்டும். அதன்மூலமே கிராமங்களுக்கும் விரைவான அபிவிருத்தியை கொண்டுவரமுடியும்.
கடந்த காலங்களில் தோல்வியடைந்த அரசியல்வாதிகள் தற்போது பயந்து நடுங்கிகொண்டிருக்கின்றனர். வழமையாக தாங்கள் கைக்கொண்டதுபோல மீண்டும் இனவாதத்தை கைகளில் எடுத்துள்ளனர். மக்களிடையே குரோதங்களையும் பிரிவினைகளையும் ஏற்படுத்த முயற்சிசெய்கின்றனர். எங்களோடு மக்கள் இணைந்திருப்பது அவர்களுக்கு பாரிய நெருக்கடியை ஏற்ப்படுத்தியுள்ளது.
நாங்கள் அவர்களிடம் கேட்கிறோம் பழைய அரசியல்கலாசாரத்தை கைவிட்டு மக்கள் விரும்புகின்ற அரசியல் கலாசாரத்திற்குள் நுழைந்து எங்களுடன் இணைந்து பயணிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம். கடந்தகால நிலைப்பாடுகள் மாறிவிட்டது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இனவாதத்தை மீண்டும் உருவாக்க நாங்கள் இடமளிக்கப் போவதில்லை.
அன்பையும் அரவணைப்பையும் கொண்ட ஒரு நாட்டை உருவாக்குவதே எமது தேவையாக உள்ளது. அது இலகுவான ஒரு விடயமல்ல. காலம் காலமாக பிரிவினையை ஏற்ப்படுத்திவந்த வடுக்களை போக்குவது கடினமான விடயமே. ஒவ்வொருவருக்கிடையிலும் இழந்துபோன நம்பிக்கையை ஏற்ப்படுத்துவது இலகுவானதல்ல.
ஆனால் நாம் நல்ல ஒரு அரசியலை செய்வதற்கான நம்பிக்கையை கொண்டுள்ளோம். உங்கள் பிரச்சனைகளை கேட்பதற்கும் உங்களிடம் இருந்து கற்றுக்கொள்வதற்கும் நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம். உங்கள் அனுபவங்களை புரிந்துகொண்டு எங்களை மாற்றி பயணிக்க நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம். அதன்மூலம் நல்லதொரு ஒற்றுமையான ஐக்கியமான நாட்டை எதிர்கால சந்திக்கு கையளிக்கவேண்டும்.
எங்களுக்கு செய்வதற்கு பல வேலைத்திட்டங்கள் இருக்கின்றன. இந்த வன்னி பிரதேசத்திற்கு கல்வி எவளவு முக்கியத்துவமானது என்பதை நான் புரிந்துகொண்டுள்ளேன். அரசு என்ற வகையில் நாம் கல்விக்கு முக்கியத்துவம் வழங்குகின்றோம். வடபகுதி மக்கள் கல்விக்கு முக்கியத்துவம் வழங்குபவர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் வடமாகாணத்தின் கல்வி இன்று பாதிப்படைந்து கீழ் நிலையில் உள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை வளப்பற்றாக்குறை என்பன நாடுமுழுவதும் இருந்தாலும் வடக்கில் கூடுதலாக உள்ளது.
சிறுவர்கள் பாடசாலை கல்வியில் அலட்சியமான போக்கை கடைப்பிடிக்கின்றமை வேதனையான விடயமாக உள்ளது. போதைப்பொருள் பாவனை வியாபித்துள்ளது. இதில் மிகுந்த கவனத்தை நாம் செலுத்த வேண்டும்.
எதிர்வரும் 2026ஆம் ஆண்டில் நாம் புதிய கல்விசீர்திருத்தம் ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறோம். ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்க எதிர்பார்த்துள்ளோம். கல்வியியல் கல்லூரிகளை விருத்தி செய்து அதில் உள்ள குறைபாடுகளை தீர்ப்பதற்கு நிதி ஒதுக்கியுள்ளோம்.
ஆசிரியர் பற்றாக்குறையை தற்காலிகமாக நிவர்த்தி செய்வதற்கு தொழில்நுட்ப ரீதியான விடயங்களை உள்ளடக்க எதிர்பார்த்துள்ளோம். இதற்காக உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் கேட்டு நிற்கின்றோம்.
மக்கள் எதிர்பார்க்கின்ற சமாதானத்தையும் ஒற்றுமையுடனும் அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அபிவிருத்தி அடைந்த ஒரு நாட்டை கையளிப்பதற்கு நாங்கள் அனைவரும் தயாராக வேண்டும். என்றார்.