தமிழ்நாடு அரசியலில் 'திடீர்' பரபரப்பு! எடப்பாடி பழனிசாமி 'அவசரமாக' டெல்லி பயணம்!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரகசியமாக டெல்லி புறப்பட்டு சென்றிருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். முன் அறிவிப்பு இன்றி திடீரென அவர் சென்றதால் அதிமுக உள்ளிட்ட அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு எழுந்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளரும் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11:30 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் துறைரீதியாக மானியகோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. எனவே கடந்த சில நாட்களாகவே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சட்டப் பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். எப்போதும் சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொடங்கும் போதே வந்து விடும் எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு சட்டப்பேரவைக்கு வரவில்லை. இதனால், செய்தியாளர்கள், ஊடகங்கள் தரப்பில் அவர் எங்கே சென்றிருக்கிறார் என்று விசாரிக்கப்பட்ட போது எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதாக தகவல் வெளியானது.
அதன் பின்னரே எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதற்காக இன்று 11.30 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டதும், அவசரம் அவசரமாக அவர் டெல்லி சென்றதும் தெரிய வந்தது. முன்னாள் முதலமைச்சர் என்ற வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளக் கருத்தில் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை விமான நிலையம் வழியாக வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போது, அவரது பயணம் குறித்து முன் கூட்டியே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு பயணம் மேற்கொள்ளும் போது அவரை வழி அனுப்ப ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வருகை தருவார்கள். ஆனால், இன்றைக்கு அவர் முன்னேற்பாடு ஏதும் இன்றி எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அவருடன் அவருடைய பாதுகாப்பு அதிகாரி மட்டும் உடன் சென்றார். வேறு யாரும் செல்லவில்லை. எனவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரகசியமாக டெல்லி புறப்பட்டு சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.
தமிழ்நாட்டின் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் அதிமுக-பாஜக இடையே கூட்டணி ஏற்படும் என்று கூறப்படுகிறது. அது தொடர்பாக பாஜக மேலிட தலைவர்களை சந்திக்க எடப்பாடி பழனிசாமி சென்றிருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தவிர, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் அது குறித்து சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள அவர் சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. மேலும், டெல்லியில் அதிமுக அலுவலகம் திறக்கப்பட்ட நிலையில், முதன் முதலாக அதனை பார்வையிடுவதற்காக அவர் சென்றிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.