Breaking News
இராசேந்திர சோழன் காலத்தில் சைவமும் பௌத்தமும்.
வெல்கம் விகாரை: தமிழ் புத்த சமய மக்களின் வழிபாட்டின் கீழ் இருந்தது.

இராசேந்திர சோழன் காலத்தில் சைவமும் பௌத்தமும்.
இலங்கைக்குப் படையெடுத்த சோழப்படையினர் “இரத்தவெறி பிடித்த யட்சர்கள் போல” கண்ணில் பட்ட புத்த மடங்களை எல்லாம் அழித்தொழித்தனர். செல்வங்களையெல்லாம் கவர்ந்துகொண்டு, தாதுகோபங்களைத் தகர்த்து அங்கு புதைக்கப்பட்டிருந்த செல்வங்களைக் கவர்ந்துகொண்டார்கள் என்கின்றது மகாவம்சம்.
ஆனால் அதற்கு மாறான சான்று திருக்கோணமலை மாவட்டத்திலேயே கிடைத்திருக்கிறது. இன்று வெல்கம் விகாரை என்றும் கடந்த நூற்றாண்டின் ஆரம்பம் வரை “பெரியகுளம் நாதனார் கோவில்” என்றும் அறியப்பட்ட புத்த விகாரம் திருக்கோணமலை நகருக்குத் தென்மேற்கே பத்து கிமீ தொலைவில், கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகே அமைந்துள்ளது. அந்த விகாரம் தமிழ் புத்த சமய மக்களின் வழிபாட்டின் கீழ் இருந்தது என்பதும், அவ்விகாரத்திற்கு இராசேந்திர சோழனும் அவனது குடிமக்களும் பல பூசை ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள் என்பதும் அங்குள்ள கல்வெட்டுகள் வழியே தெரியவந்துள்ளது.
சோழரால் புத்த சமயம் புரக்கப்பட்டது என்பதற்கு கிடைக்கின்ற வரலாற்றுச் சான்றுகள் இரண்டே இரண்டு தான். தமிழகத்தின் நாகைப்பட்டினத்து சூளாமணி விகாரமும் இலங்கையின் திருக்கோணமலை இராசராசப்பெரும்பள்ளியும். நாகைப்பட்டின விகாரம் பிரித்தானியர் ஆட்சியில் முற்றாக அழிக்கப்பட்டு விட, இன்று எஞ்சியுள்ள ஒரே சோழர் கால புத்த எச்சம் வெல்கம் விகாரம். ஆனால் இலங்கையின் ஏனைய புத்த சமயத்தலங்களின் இன்றைய நிலையை ஒப்பிடும் போது, இன்றும் பெருமளவு செப்பனிடப்படாத வெல்கவேரத்தின் நிலை என்னவோ கவலைக்கிடம் தான்.
இராசராசன் காலத்தில் அவன் பெயரில் “இராசராசப் பெரும்பள்ளி” என்ற பெயரை சூடிக்கொண்ட இந்த விகாரம் மிகத்தொன்மையானது. இங்கு கிடைத்த இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதிக அபய மன்னன் காலத்துப் பிராமிக் கல்வெட்டொன்று இவ்விகாரத்தை “அபயகார விகாரம்” என்கின்றது. எனினும் சோழர் இலங்கையைக் கைப்பற்றும் போது இவ்விகாரத்துக்கு “வெல்கவேரம்” என்ற பெயரே இருந்தது என்கின்றன அக்காலத் தமிழ்க்கல்வெட்டுகள். அருகே வில் (சிறுகுளம்) இருப்பதால் இது “வில்காமம்” (சிறுகுளத்தை அண்டிய ஊர்) என்று அழைக்கப்பட்டு பின்னாளில் வெல்காமம் என்றும் வெல்கம் என்றும் மருவியிருக்கலாம். வேள்காமமும் (வேளாண் ஊர்) வெல்கம் ஆகியிருக்கக்கூடும். வேரம் என்பது விகாரத்தின் தமிழ்வடிவம்.
வெல்கவேரத்தை இத்தனை போற்றிய சோழர்கள் உண்மையிலேயே புத்த சமயத்தை எதிர்த்திருப்பார்களா? அப்படியாயின் அவர்கள் மீதான மகாவம்சத்தின் விமர்சனத்துப் பதில் என்ன? இலங்கையின் ஏனைய புகழ்பெற்ற பௌத்தப் பள்ளிகளில் இப்படி சோழர்களின் சாசனங்கள் கிடைக்கவில்லையே!
போரொன்றின் போது எந்தவொரு சமயத்தலங்களுமே அழிக்கப்பட்டிருக்காது என்று அடித்துக் கூறமுடியாது தான். ஆனால். பொலனறுவை, அனுரை உள்பட்ட நகர்களில் அமைந்திருந்த எல்லா பழம்பெரும் புத்த விகாரங்களும் அடுத்த இருநூறாண்டுகள் வரை சிங்கள மன்னரால் மீளமீள திருத்திக் கட்டப்பட்டுக்கொண்டே இருந்திருக்கின்றன. பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த பராக்கிரமபாகுவும் நிசங்கமல்லனும் ஏராளமான புத்தப்பள்ளிகளை செப்பனிட்டிருக்கிறார்கள். அதன்போது சோழர் காலச் சாசனங்கள் பல மறைந்துவிட்டிருக்க வாய்ப்புண்டு. இதை பொலனறுவை வட்டதாகையிலும் அனுராதபுரம் யேதவனராம விகாரையிலும் தரைக்குப் பாவப்பட்டுள்ள துண்டமான சோழக் கல்வெட்டுகளைக் கொண்டு உய்த்துணரலாம்.
மாறாக, வெல்கவேரம் சோழராட்சியின் மறைவுடன் முற்றாக கைவிடப்பட்டுவிட்டது. இதற்கு இயல்பான காரணங்களாக திருக்கோணமலையில் கோணேச்சரத்தின் மறுமலர்ச்சியையும் சைவ சமயத்தாரின் பெருக்கத்தையும் சொல்லலாம். சோழராட்சிக்குப் பிந்திய சிங்கள மன்னர் எவரது கல்வெட்டும் அங்கு கிடைக்கவில்லை. எனவே சோழராட்சி மறைந்தபின் வெல்கவேரம் காடடர்ந்து மறைந்துவிட்டது என்பதே பொருத்தம். அரசுகளால் மறக்கப்பட்டாலும் அங்குள்ள குடிமக்களின் நினைவுகளில் எஞ்சியிருந்தது அப்பள்ளி. 1929களில் பிரித்தானிய தொல்லியல் அதிகாரிகள் இப்பள்ளியைக் கண்டறியும் போதும் அது அன்றைய திருக்கோணமலைத் தமிழர் மத்தியில் “நாதனார் கோவில்” என்ற பெயரில் வழிபாட்டில் இருந்து வந்திருக்கிறது.