கருவறுக்கப்படும் கற்பகத்தருக்கள்! அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழர்களின் பாரம்பரிய இடத்தினைப் பெற்ற பனை மரம்.
வட இலங்கை மக்களுக்கு கற்பகதருவாக இருந்து அவர்களது பட்டினி வாழ்வினை அகற்றிய பனை மரம்.

பனை மரம் தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தது என்பதனை தொல்காப்பியம், திருக்குறள், திருவாசகம், தேவாரம், திவ்யபிரபந்தங்கள் உட்பட பல சங்க இலக்கியங்களும் உறுதிப்படுத்தும் நிலையில் இன்று அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழர்களின் பாரம்பரிய மரங்களில் ஒன்று என்ற இடத்தினை பனை மரம் பெற்றுள்ளது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மூத்த மொழி தமிழ்மொழி என நாம் பெருமைபட்டுக் கொள்வதற்கான முக்கிய சாட்சியாக விளங்குவது பனை ஓலைச் சுவடிகளிலிருந்து கிடைத்த வரலாற்றுத் தகவல்கள் தான். ஆனால் இன்று தமிழர்களான நம் அதனை மறந்ததன் விளைவே பனை மரங்களின் அழிவு.
இலங்கையினது வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தில் அதனது பிரதான வருமான மூலங்களிலொன்றாக புராதன காலந் தொடக்கம் பனை மரமும் அது சார்ந்த பண்டங்களும் அமைந்திருந்தன. அதாவது பெருங்கற்காலப் பண்பாட்டுக்கும் முன்னதாக ஆரம்பித்து யாழ்ப்பாண அரசர்களது காலத்திலும் தொடர்ந்து வந்த ஐரோப்பியர்களது காலங்களிலும் சுதந்திரத்தின் பின்னராகவும் பல்வேறு வழிகளில் இலங்கையினது வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தில் இவை செல்வாக்கினைச் செலுத்தியிருந்தன.
வட இலங்கை மக்களுக்கு கற்பகதருவாக இருந்து அவர்களது பட்டினி வாழ்வினை அகற்றியது. நோயாளருக்கு மருந்தாகியது. யாழ்ப்பாணத்தரசர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் பிரதான வர்த்தகப் பொருட்களாக இருந்து வருவாயினைப் பெற்றுக் கொடுத்தது. பலருக்கு வேலை வாய்ப்பினை வழங்கியது இந்தப் பனை மரங்களே.
வடக்கு மண்ணின் அளப்பெரும் சொத்துக்களாகவும், தனிச் சிறப்பு அம்சமாகவும் திகழ்பவை பனைமரங்கள். கூடுதலாக வடபகுதியின் தீவகப் பகுதியில் அதிகளவு பனை வளங்கள் காணப்படுகின்றன. ஆகவே தான் “ நாற்புறமும் பனை சூழும் யாழ்ப்பாணம் ..” என்று சின்ன தம்பிப் புலவரால் சித்திரிக்கப்படுகின்றது.
அள்ள அள்ளக் குறையாத வளங்களையும், ஒப்பில்லாத நன்மைகளையும் மனிதர்களுக்கு அளிப்பதாலேதான் பனைமரங்கள் “பூலோக கற்பக விருட்சம்” என்று அழைக்கப்படுகின்றன. அந்த அளவிற்கு பனை மரம் தரும் வளங்கள் எல்லையில்லாதவை. அடி தொடக்கம் முடிவரை பனையின் வளங்கள் சிறப்பு மிக்கவை. பனையின் ஓலை தொடக்கம் வேர் வரை பயன்மிக்கது.
தற்போது, எமது நாட்டில் 11 மில்லியன் பனை மரங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் 30 சதவீதம் மட்டுமே சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றன. உலகில் பனை மரங்கள் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. அதிக எண்ணிக்கையிலான பனை மரங்களைக் கொண்ட முதல் நாடாக இந்தியா இருந்தாலும், பனை மைய உற்பத்திகளை அதிக எண்ணிக்கையில் இலங்கை உற்பத்தி செய்கின்றது.
அதே போல் முழு உலகிற்கும் இலங்கையில்தான் ஒரே ஒரு பனை ஆராய்ச்சி நிறுவகம் உள்ளது.
எமது நாட்டு பனம் பாணிக்கும் மற்றும் பனம் சாராயத்திற்கும் சர்வதேச சந்தையில் அதிக கேள்வி நிலவுகின்றது. தற்போது, பிரான்ஸ், கனடா மற்றும் டுபாய் போன்ற நாடுகளுக்கு பனம் பாணியும் மற்றும் பனம் சாராயமும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஏற்றுமதியினால் ஆண்டுக்கு 45,000 டொலர்கள் ஈட்டப்படுகின்றன. அவ்வகையில் இயற்கையாகவே விளைந்து இப்பகுதி மக்களுக்கு மட்டுமன்றி முழு இலங்கை மக்களதும் ஆதரவிற்கு உட்பட்ட மரமாகப் பனை மரம் காணப்படுவதுடன் அதனது உற்பத்திப் பொருட்களும் கடல் தாண்டி செல்வாக்கினைப் பெற்றுள்ளன.
பனையின் வகைகள்
பனை மரத்தில் 1. ஆண் பனை, 2. பெண் பனை, 3. கூந்தப்பனை, 4. தாளிப்பனை, 5. குமுதிப்பனை, 6.சாற்றுப்பனை, 7. ஈச்சம்பனை, 8. ஈழப்பனை, 9. சீமைப்பனை, 10. ஆதம்பனை, 11. திப்பிலிப்பனை, 12. உடலற்பனை, 13. கிச்சிலிப்பனை, 14. குடைப்பனை, 15. இளம்பனை 16. கூறைப்பனை, 17. இடுக்குப்பனை, 18. தாதம்பனை, 19. காந்தம்பனை, 20. பாக்குப்பனை, 21. ஈரம்பனை, 22. சீனப்பனை, 23. குண்டுப்பனை, 24. அலாம்பனை, 25. கொண்டைப்பனை, 26. ஏரிலைப்பனை, 27. ஏசறுப்பனை, 28. காட்டுப்பனை, 29. கதலிப்பனை, 30. வலியப்பனை, 31. வாதப்பனை, 32. அலகுப்பனை, 33. நிலப்பனை, 34. சனம்பனை என மொத்தம் 34 வகைகள் இருக்கின்றன.
பனையின் பயன்கள்
உடல் உறுப்பு தானம் என்ற கருத்தியலை முதன் முதலாக அறிமுகப்படுத்தியதே பனை மரங்கள் தான் என்றே கூறலாம். அந்த அளவிற்கு பனையின் அத்தனை பாகங்களும் மனிதனுக்கு பயன்தரக் கூடியதாக இருந்து வந்துள்ளன.
பனை மரத்திலிருந்து பனங்கள்ளு,பனஞ்சாராயம், பதநீர், கருப்பட்டி, கருவெல்லம், நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு ,பூரான்,பனாட்டு,வினாகிரி,பதநீர்,பனங்கட்டி ,கருப்பட்டி, பனைவெல்லம்.சில்லுக் கருப்பட்டி,பனங்கற்கண்டு, ஒடியல்,,புழுக்கொடியல்போன்ற உணவுப் பொருட்களும் கிடைக்கப்பெறுகின்றன.
ஓட்டினாலான வீட்டுக் கூரை அமைப்பதற்கு பனை மரத்தின் தண்டாகிய கிராய் மரங்களே அதிகம் இன்றுவரை பயன்படுத்தப்படுகின்றது. தற்காலத்தில் பனை ஓலையைக் கொண்டு பாய் பின்னுதல் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தி செய்து, வடிவமைத்து, விற்பனை செய்யப்படுகின்றன . அத்தோடு விற்பனைக் கூடங்களை அமைத்து நாட்டின் உற்பத்திகள் ஏற்றுமதி பொருட்களாகவும் வெளிநாடுகளுக்கு விநியோகிக்கப்படுவது மூலம் நம் நாட்டின் அபிவிருத்தியிலும் பனைசார் உற்பத்திகள் பங்கு வகிக்கின்றன.
அதேவேளை, பனை ஓலையிலிருந்து பனை ஓலைச் சுவடிகள்,கடகம்,பனை ஓலைத் தொப்பி,பனையோலைப் பெட்டி ,அலங்காரப்பொருள்,நீற்றுப் பெட்டி பனைப்பாய்,கூரை வேய்தல்,வேலியடைத்தல்,உமல்,விசிறி கிணற்றுப் பட்டை,எரு பனைமரம் மூலம் துலா,பனம் மட்டையில் வேலியடைத்தல்,தட்டிகள் பின்னல்,விறகு,கூரைவேய்தலுக்கன் மரங்கள்,தளபாடங்கள்,பனம் விதை,பனம் சவர்க்காரம் எனப்பலவழிகளில் பயன்படுகின்றது .
ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
பனைமரத்தின் சல்லிவேர்கள் தொகுப்பாகவும் பல அடி ஆழம் வரையிலும் செல்லக்கூடியவை. பூமிக்கடியில் நீரை பாதுகாத்து சுற்றியுள்ள தாவரங்கள் வாழவும் உதவுபவை. மண்ணரிப்பை தடுக்கும் மரம் என்பதால் கடற்கரைகளை ஒட்டியும் ஆறு, குளம், வயல்களை ஒட்டிய வரப்புகளிலும் சாலை ஓரங்களிலும் இதை நம் முன்னோர்கள் வளர்த்தனர்.
மருத்துவ குணங்கள்
பணியினால் மனிதனுக்கு கிடைக்கும் மருத்துவ பலன்கள் பனையின் மருத்துவ குணங்கள் தொடர்பில் டொக்டர் சிவன்சுதன் கூறுகையில்,
பனை மரங்கள் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளிலே செழித்து வளரக் கூடியனவாக இருந்திருந்தால் பனம்பழங்கள் ஒவ்வொன்றும் ஈய உறைகளிலே சுற்றப்பட்டு அதன்மேல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு பாரிய விளம்பரங்களுடன் இங்கு இறக்குமதியாகி வந்திருக்கும். இலகுவில் ஏமாறக்கூடிய மனம்படைத்த நாமும் பணத்தை வாரி இறைத்து அவற்றை வாங்கி உண்டிருப்போம்.
இதே பனைமரங்கள் அமெரிக்கா தேசத்திலே வளருபவையாக இருந்திருந்தால் பனங்கிழங்குகளின் மருத்துவக் குணங்களை உலகறிந்திருக்கும். கருப்பட்டிகள் அருமருந்தாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும். நுங்குகளின் மகத்துவம் பேசப்பட்டிருக்கும். ஒடியல், புழுக்கொடியல், மாவகைகள் உலக சந்தையிலே பெரும் இடத்தைப் பிடித்திருக்கும். பனையின் ஒவ்வொரு பகுதிகளும் உலகின் உபயோகத்திற்கு வந்திருக்கும்.ஆனால் பாவம் இந்தப் பனைமரங்கள் பாவப்பட்ட எம்மக்கள் மத்தியிலே தோன்றி பொலிவிழந்து காணப்படுகின்றன.
பானங்களிலே அதிகூடிய புரதச் செறிவுடைய பானம் நுங்கு என்பது நம்மில் பலருக்கு தெரியாது. பால் தான் புரதச் செறிவுடைய பானம் என்று நினைத்துக் கொள்கிறோம். 100 கிராம் பாலிலே 3.3 கிராம் புரதம் இருக்கிறது. ஆனால் 100 கிராம் நுங்கிலே 10.8 கிராம் புரதம் இருக்கிறது. பாலினைப்போல் 3 மடங்கு புரதச் செறிவுள்ள பானம் நுங்கு என்பதை மனதில் நிறுத்துவோம்.
நுங்கினுடைய உலர்நிறையிலே 60வீதம் புரதமும் 30வீதம் மாப்பொருளும் இருப்பதுடன் மிகக்குறைந்தளவு கொழுப்பே இதனில் காணப்படுகிறது. பனங்கூடல்களுக்குள் வசிக்கும் எமது சிறார்கள் புரதக் குறைபாட்டினால் அவதியுறுகின்றனர். ஆனால் அவர்களுக்கு இந்த நுங்கின் மகத்துவம் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை.
எம்மத்தியிலே ஒரு கோடிக்கும் அதிகமான பனைகள் இருந்தும் அவற்றில் இருந்து கிடைக்கும் பனம்பழங்களில் 5 வீதமான பனம்பழங்கள் கூட உபயோகப்படுத்தப்படுவதில்லை. வண்டுகளிடமிருந்தும் புழுக்களிடமிருந்தும் அவற்றை முற்றாகக் காப்பாற்றி அனைத்துப்பழங்களையும் முழுமையாகப் பயன்படுத்துவது எப்படி என்பது சம்பந்தமான வழிமுறைகளை நாம் ஆராயவில்லை.
புரதச்சத்தது நிறைந்த விட்டமின்கள், கனியுப்புக்கள் நிறைந்த எமது அரும் சொத்தான பனம்பழங்கள் வீணடிக்கப்பட்டு மண்ணுக்கு உரமாகிக்கொண்டிருக்கின்றன.பனம்பழங்களின் உலர்நிறையில் 11 வீதம் புரதமும் பெருமளவு பீட்டா கரோட்டினும் ஏனைய விட்டமின்களும் இரும்பு, கல்சியம் போன்ற கனியுப்புக்களும் அதிகமாகக் காணப்படுகின்றன.
பலவிதமான விளம்பர யுக்திகளுடன் இறக்குமதியாகி அதிக விலையில் விற்பனையாகும் ஓட்ஸ் வகைகள் எமது அன்றாட உணவுகளில் ஒன்றாக மாறும் நிலை காணப்படுகிறது. ஆனால் எமது சொந்த மண்ணில் விளையும் ஓட்ஸிலும் சிறந்த அதிக நார்த்தன்மை கொண்ட மலிவான இயற்கையான பனங்கிழங்குகளை நாம் புறக்கணித்து விடுகின்றோம். பனங்கிழங்குகள் அதிகளவு நார்த்தன்மையும் மிகக்குறைந்தளவு கொழுப்பும் கொண்டிருப்பதுடன் உலர்நிறையில் 12 வீத புரதத்தையும் பல விற்ற மின்கள் கனியுப்புக்களையும் கொண்டிருக்கின்றன.
பனங்கிழங்குகளில் இருக்கும் மாப்பொருளானது குறைந்த வேகத்திலே உடலினுள்அகத்துறிஞ்சப்படுவதால் இது நீரிழிவு நிலை உள்ளவர்களுக்கும் ஒரு சிறந்த உணவாக காணப்படுகின்றது. பனம்பழங்களின் பயன்கள்அனைத்தையும் எடுத்த பின்பு அதன் கொட்டைகளை பனம்பாத்தி போடுவதன் மூலம் பனங்கிழங்குகளை பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் பனம்பழங்களும் பனம் விதைகளும் பயனுடையவையாக மாற்றம் பெறும் என்கின்றார்.
அழிவுக்கு காரணம் என்ன?
முதல் காரணமாக நகர மயமாக்கல் உள்ளது. அதாவது கட்டிடக்காடுகள் அதிகமாவதால் பனங் காடுகள் அழிக்கப்படுகின்றமை,வீடுகளுக்கு ஓடுகள் வேய்வதற்காக பனைமரங்கள். சிலாகைகளுக்காக பனைமரங்கள் தறிக்கப்படுகின்றமை, பராமரிப்பு இல்லாமலே வளரும் இந்த பனை மரங்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, தானாகவே அழிந்துபோகும் நிலையில் புதிதாக வளர்க்கும் ஆர்வம் குறைந்துள்ளமை. வடக்கு மாகாணத்தைப்பொறுத்தவரையில் பனைகளின் அழிவுக்கு யுத்தம் பெரும் பங்காற்றியிருந்தது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத்தமிழ் மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்ந்தவை பனை மரங்கள்தான். தமிழனின் வாழ்க்கை முழுவதும் பனை மரப் பயன்பாடுகளே இருந்தன. தமிழ் மக்களின் ஆகப் பெரு ம் செல்வங்களில் ஒன்றான பனை மரங்களை ஒழித்த பெருமை, அதே தமிழ்மக்களான நம்மையே சாரும்
பனைகள் பாதுகாக்கப்படுமா?
பனைமரங்களின் தாயகமாக விளங்கும் வடக்கு மாகாணத்தில் தற்போது பனைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.பனை அபிவிருத்திச்சபைத் தலைவர் வி.சகாதேவன் இதற்கான காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். வடக்கு மாகாணத்தில் சட்டவிரோதமாக பனை வளம் அழிக்கும் செயற்பாடு அதிகமாக இடம்பெறுவதற்கு இக் குற்றத்திற்கான தண்டப்பணம் மற்றும் தண்டனை குறைந்த அளவில் இருப்பதே பிரதான காரணமாகக் உள்ளதென அவர் கூறுகின்றார்
சட்டவிரோதமாக பனை மரங்களை அழிக்கும் குற்றச்செயல்களுக்கான தண்டனை மற்றும் தண்டப் பணத்தை அதிகரிக்க பனை அபிவிருத்திச்சபையினுடைய பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டு பனை வளத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம் .
பனை வளத்தை தறிப்பதனை தடுப்பது மாத்திரம் எமது இலக்கு அல்ல. பனை வளத்தைப் பேணுபவர்களுக்கு அதன் மூலமாக வருமானத்தைப் பெருக்க நடவடிக்கை எடுப்பதும் எமது நோக்கம். பனை வளத்தை மக்கள் தாமாக விரும்பிப் பாதுகாக்கும் சூழல் ஏற்படுவதே உண்மையான பனை வள அபிவிருத்தியாக அமையும்.
வெறுமனே சட்டங்களாலும், அதிகார பிரயோகங்களாலும் பனை வளத்தைப் பாதுகாக்க முடியாது என்பதனை பனை அபிவிருத்திச்சபை உணர்ந்துள்ளது. பனை வளத்தைப் பனை அபிவிருத்திச்சபையால் மாத்திரம் பாதுகாக்க முடியாது. மக்களுடைய ஒத்துழைப்பும் கிடைத்தால் தான் அது சாத்தியமாகும் என்றும் அவர் கூறுகின்றார்
இதேவேளை பனைமரம் தறிப்பதற்கான கட்டுப்பாட்டுச்சட்டம் மற்றும் அனுமதி தொடர்பாகவும் தறிக்கப்படுகின்ற பனைமரங்களுக்கான மீள் நடுகை செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் அண்மையில் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இங்கு கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அனர்த்தம் ஏற்படக்கூடிய பனைமரங்கள் காணப்படுமாயின் அவற்றினை ஐந்துபேர் கொண்ட குழுவொன்றினை அமைத்து அவர்கள் நேரில் சென்று பாா்வையிட்டு தறிப்பதற்கான அனுமதி வழங்குதற்கும் , அரச வீட்டுத்திட்டம், அரசசாா்பற்ற வீட்டுத்திட்டம் என்பவற்றினால் பிரதேச செயலகங்களினூடாக வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களுக்கு நிபந்தனைகளுடன் பனை மரம் தறிப்பதற்கு அனுமதி வழங்குவதற்கும் பனை அபிவிருத்தி சபைக்கு ஆலோசனை வழங்கியதுடன் , பனை அபிவிருத்தி சபையினால் யாழ் மாவட்டத்தில் பனம் விதை நடுவதற்கான இடங்கள் காணப்படுமாயின் அதற்கான இடஅமைவு தொடர்பான விடயத்தினை பிரதேச செயலாளர்களை அறிக்கையிடுமாறும் தெரிவித்துள்ளார்.
”தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக் கொள்வர் பயன் தெரி வார் ” என்பது திருக்குறள்
ஆனால் , நமக்கெல்லாம் நம் மொழியைக் கட்டிக்காத்து அருளிய பனை மரத்தினை. அடி முதல் நுனி வரை எண்ணற்ற பலன்களைத் தந்து எம்மை ஆரோக்கியமானவர்களாக வைத்திருந்த, எம்மை சுயதொழில் முயற்சியாளர்களாக்கிய, எமது வருமானத்துக்கு வழியேற்படுத்திய கற்பகதருக்களான பனைமரங்களை காக்க மறந்து நன்றி மறந்த இனமாக தமிழர்களாகிய நாம் மாறிவிட்டோம் என்பதையே பனைமரங்களின் அழிவு வெளிப்படுத்துகின்றது.
எச்.ஹுஸ்னா