கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா பூங்காவுக்கு வடக்கு மாகாண ஆளுநர்!
,

வடக்கில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டறியும் வகையில், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா பூங்காவுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (25) பயணம் மேற்கொண்டார்.
அதன் நிறுவுனரும் தலைவருமான க.பாஸ்கரன் ஆளுநரை வரவேற்றதுடன், 150 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள அந்தப் பூங்காவை ஆளுநருக்கு சுற்றிக் காண்பித்தார்.
அதன் பின்னர் றீச்ஷா நிறுவனத்தினருடனான சந்திப்பில் ஆளுநர் கலந்துகொண்டார்.
அரச திணைக்களங்களின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறாமை, அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதில் இழுத்தடிப்புக்கள், போக்குவரத்து வசதியீனங்கள், உட்கட்டுமான வசதிகள் போதாமை உள்ளிட்ட பல்வேறு சவால்கள் தொடர்பில் ஆளுநருக்கு எடுத்துக் கூறப்பட்டது.
அத்துடன் முதலீட்டாளர்கள் இங்கு வரவேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், இவ்வாறான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்து கொடுப்பதே அவர்கள் ஆர்வத்துடன் முதலிடுவதற்கான சூழலை உருவாக்கும் எனவும் பாஸ்கரன் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினார்.